ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2021

தீமையை உருவாக்கும் சந்தர்ப்பங்களைத் தீமையை அகற்றும் சந்தர்ப்பங்களாக மாற்ற வேண்டும்

 

நண்பராகப் பழகுகின்றோம்... அவருக்குத் தக்க சமயத்தில் உதவியும் செய்கின்றோம். சந்தர்ப்பத்ததில் நாம் ரோட்டில் செல்லும் போது அந்த நண்பர் எதிரே வருகின்றார்.

ஆனால் அவரோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கின்றார் அது நமக்குத் தெரியவில்லை.

அவரை பார்த்தவுடன் இங்கே வாப்பா...! என்று கூறுகின்றோம்.

கூப்பிட்டவுடனே அவர் “இருங்கள்... நான் வருகிறேன்...” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகின்றார்.

அட... இங்கே வந்து விட்டுப் போப்பா...! என்று இரண்டாம் முறையும் கூப்பிடுகின்றோம். அவர் அப்படியே சென்று விடுகிறார்.

இவனுக்கு வந்த கிராக்கியைப் பார்...! அன்றைக்குத் தேவைக்கு நம்மிடம் வந்தான். இன்றைக்குக் கவனிக்கவே இல்லை. நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறான்.

அனால் தேவை என்று அவன் கேட்கும்போது அவனுக்கு நாம் கொடுத்தோமே...! என்று இப்படி அந்த உதவி செய்த நிலைகள் தான் வருகின்றதே தவிர “அவருடைய சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் தன்மை வருவதில்லை...”

1.அவர் எந்த அவசரத்தில் போகின்றாரோ...!
2.போகும் வேகத்தைப் பார்த்த பின் அந்த உணர்வுகள்... அந்த ஞானம்...
3.சரி போகட்டும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் போல் தெரிகின்றது என்று
4.அந்த நேரத்தில் நம் மனதைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.அவன் போகக் கூடிய காரியத்தைத் தடைப்படுத்திவிட்டோமோ...? என்னமோ...!
6.அவன் போகும் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று நாம் எண்ணிவிட வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் மனதும் அமைதிப்படும்.

அடுத்ததாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கூட சிந்தனைக்குத் தகுந்த மாதிரி நாமே சென்று அதை சீராக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

இப்படி எண்ணவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்...
1.அந்த ஒரு நிமிடம் அல்லது அந்த ஒரு நொடியானால்
2.நமக்குள் மனதைக் கெடுக்கக்கூடிய நிலை ஆகி நம் நல்ல குணங்களை மாற்றி அமைத்து விடுகின்றோம்.

நல்ல குணங்களை நமக்குள்ளும் செயலற்றதாக மாற்றுகின்றோம். அதே போல் அந்த நண்பருக்குள்ளும் செயலற்றதாக ஆக்குகின்றோம். அப்பொழுது இரண்டு பேருடைய நல்ல மனமும் கெடுகின்றது.

ஆக... எதன் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதன் ஞானமாகத்தான் உயிர் நம்மை இயக்குகிறது. எதன் உணர்ச்சியோ அதை நுகரப்படும் பொழுது அதன் வழிதான் நம்மை இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் நம் உடலில் சேர்கின்றதோ அந்த இணைந்த உணர்வு கொண்டு தான் பிரம்மமாகி அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

இணைந்த நிலைகள் நம் உடலில் இருக்கும் பொழுது
1.உயிர்... வசிஷ்டர் - கவர்ந்து கொண்ட உணர்வுகள் உடலாகிறது.
2.அதனின் சக்தியாகவே அது இயக்குகிறது.

அதாவது மனித உடலுக்குள் உயிரின் தன்மை ஈசன் என்றாலும் உணர்வின் தன்மை உடலாகின்றது பிரம்மம் என்பதை இப்படிக் காவியங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

நன்றாகப் படித்து பாருங்கள். நான் மனிதன் வாழ எத்தனையோ வழிகளை ஞானிகள் காட்டி உள்ளார்கள்.

விஜயதசமி என்று சொல்லும் பொழுது தீமைகளை அகற்றிப் பழக வேண்டும். நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் மனிதனாக இன்று நம்மை உருவாக்கி உள்ளது.

1.ஒருவன் தீமை செய்வதைச் சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்தால்
2.அல்லது நாம் சந்திக்கும் உணர்வுகள் தீமையாக இருந்தால்...
3.அதை எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் நாம் சுத்தப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

சுத்தப்படுத்தத் தவறினால் பத்தாவது நிலையை (தசமி) அடையக்கூடிய தருணம் தடைபட்டு மீண்டும் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

காரணம் நல்ல குணங்கள் கொண்டு வேதனைப்படுவோரை நுகர்ந்தால் நம் நல்ல குணத்திற்குள் விஷத்தின் தன்மை பட்டு... விஷத்தின் ஆற்றல் வலுவான பின் நல்ல குணங்கள் மடிகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம்முடைய எண்ணங்கள் கூர்மையானால் தீமைகளை விலக்கும் நிலை வருகின்றது.

1.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் அவ்வப்போது நுகர்ந்தால்
2.எந்தத் தீமையும் அணுகாதபடி நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்...
3.நம் நல்ல குணங்களையும் காக்க முடியும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.