ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 4, 2021

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உபதேசம் செய்த விதம்

 

அக்காலங்களில் எழுத்தறிவே இல்லை என்றாலும் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் இந்தக் காற்றிலே உண்டு.

தன் உணர்வால் இயக்கப்பட்டு... இயக்கச் சக்திகளைத் தனக்குள் கவர்ந்து... உண்மையின் உணர்வலைகள் அவர்கள் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் இன்றும் அழியாச் சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் வெளிப்படுத்தியதை உங்களுக்குள் நினைவுபடுத்தி இப்பொழுது கூர்மையாகப் பதிவு செய்யும் பொழுது அந்தப் பதிந்ததை நீங்கள் எடுக்க முடியும்.

ஒரு மரத்தில் விளைந்த வித்தினை மற்ற எந்த இடத்தில் கொண்டு போய் அதை ஊன்றினாலும்... புவி ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து... செடியாகி மரமாகி தன் இனத்தை விருத்தி செய்கின்றது “வித்தாக...”

இதைப் போன்றுதான்
1.மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்து...
2.உணர்வின் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்த உணர்வுகள்
3.அவருக்குள் விளைந்த நிலைகள் அனைத்தும் ஆற்றல் மிக்க சக்திகளாக அலைகளாக இன்றும் படர்ந்துள்ளது.

அதனை நுகர்வதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாக கேட்கும்படி செய்கிறோம். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது.

ஒரு மரத்தின் வித்து அதற்குள் இருக்கும் உணர்வின் துணை கொண்டு தான் அதனின் இனமான சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.

அதே போல்
1.ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தினை உங்களுக்குள் ஊன்றும் பொழுது
2.அதைக் கூர்மையாகக் கவனித்து நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டாலே போதுமானது.

அந்த வித்தின் தன்மை விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மை நிச்சயம் நீங்கள் உங்களுக்குள் விளையும்... “அப்படி விளைய வேண்டும்...” என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

நான் (ஞானகுரு) கல்வி கற்றவன் தான். இருப்பினும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் அறிந்த உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்தார்.

அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகினாலும்...
1.மீண்டும் அதை நான் புரியும்படி செய்வதற்காக வேண்டி என்னை உதைப்பார்...
2.திருப்பி அவருடன் என் எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது... என்ன...? என்று கேட்கும்படி வைப்பார்
3.அந்தந்த நிலைகளில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
4.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது

என்னை அடித்துத்தான் குருநாதர் ஒவ்வொன்றையும் உபதேசித்தார். ஆனால் அதை எல்லாம் உங்களுக்கு இப்பொழுது சொல்லாக... வாக்காகப் பதிவு செய்கின்றேன்.

கவனங்களை வேறு பக்கம் நீங்கள் திருப்பி இருப்பினும்
1.இடைமறித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.ஞானிகள் உணர்வின் இயக்கமாக நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

உபதேச வாயிலாக உணர்வின் வித்தாக ஆழமாக உங்களில் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்... வளர்த்துக் கொள்ளுங்கள்.