ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 21, 2021

விஷம் தாக்கினால் இருளாகும்... விஷத்தை அடக்கினால் ஒளியாக மாறும்

 

ஆதியிலே உருவான உயிர் பல கோடிச் சரீரங்களை எடுத்துத் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனுக்கு எப்படிப் பேராற்றல்கள் கிடைத்தது...? என்று பார்ப்போம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்தும் கொடூரமான பாம்பினங்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக
1.விஷங்களை வென்றிடும் தாவர இனங்களையும் பச்சிலைகளையும் மூலிகைகளையும்
2.தன் அருகிலே பரப்பியும் தன் உடலில் பூசிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர்
3.சந்தர்ப்பத்தால் அந்தத் தாய் கருவுறுகிறது... அகஸ்தியன் என்று சிசு உருவாகிறது.

கருவுற்ற தாயின் உடலில் பூசிய மணங்கள் உடல் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது அந்தத் தாய் அதை நுகர்கின்றது கருவில் இருக்கும் குழந்தையும் அதை நுகர்கிறது. விஷத்தை முறிக்கும் ஆற்றலாக அதற்குக் கிடைக்கின்றது.

தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைந்த குழந்தைக்குள் உருவாகி... உருவாகி...
1.தீமைகளை அகற்றும் நிலையும்
2.நஞ்சை அடக்கும் உணர்வுகளும்
3.ஒரு பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஞானமும் அங்கே வருகின்றது

உதாரணமாக... விஷம் தாக்கி விட்டால் சிந்தனை போய்விடும். ஆனால் விஷத்தை அடக்கும் பொழுது அதனின் செயலாக்கங்களை அறியும் ஆற்றலாக வரும்.

ஆகையினால் விஷங்களை நீக்கும் உணர்வுகளை அகஸ்தியனின் தாய் நுகரப்படும் பொழுது... அது இரத்தத்தில் கலந்து அதன் மூலம் சிசுவிற்குக் கிடைத்து
1.நஞ்சை அடக்கிடும் அரும் பெரும் சக்தியாக
2.வாழ்க்கையில் சிந்தித்து செயல்படும் உணர்ச்சிகளாக அகஸ்தியனுக்குள் அங்கே உருப்பெறுகின்றது.

அகஸ்தியன் என்று அவனுக்குப் பெயர் வரக் காரணமே அணுவின் இயக்கங்களை அறிந்துணர்ந்து அதனின் ஆக்கச் செயல்கள் எது...? என்றும் அவன் உணர்ந்தவன் என்பதனால் தான்..!

சாதாரணமாக ஒரு பச்சிலையின் மணத்தை நாம் நுகர்ந்தால் அந்த ஞானவழிப்படி தான் நாம் செயல்படுவோம். அதே போன்று ஒரு நறுமணமான பூவை நுகர்ந்தால் அதன் மணம் அதனின் ஞானத்தின் வழி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்கின்றது.

மற்றவரிடம் ரோஜாவின் மணம் எப்படி இருக்கிறது தெரியுமா...? என்று இந்த மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னபின் கேட்போர் உணர்வுகளிலும் அதே மகிழ்ச்சி வருகின்றது. அவருக்குள்ளும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

காரணம்... இந்த ஞானம் “ஆயுதமாக...” அவருக்குள் இயக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு மிளகாயிற்குள் காரம் மறைந்திருக்கின்றது. ஆனால் தெரியாமல் கடித்தவுடன் “ஆ...” என்று அலறுகின்றனர்.

இந்த உணர்வின் ஒலியைக் கேட்டவுடனே அடுத்தவருக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அவர் மீது இவருக்குப் பரிவு இருந்தால் உடனே தண்ணீரை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதைத் தணிக்கச் செய்கிறது.

தவறான நிலைகள் கொண்டு ஆசையில் எடுத்து அவர் மிளகாயைக் கடித்து விட்டாலும்கூட... ஏம்ப்பா...! பார்த்துச் சாப்பிடக் கூடாதா..? என்று சொல்லச் செய்கின்றது.

காரணம் இந்த உணர்வுகள் அங்கு எதிர் நிலையாகப் படும் பொழுது இந்த உணர்ச்சியின் தன்மை பெறுகின்றது.

அவன் அறியாது உட்கொண்டாலும் பார்த்துச் செய்யப்பா...! என்று சொல்லி உடனே தண்ணீரை எடுத்துக் கொடுப்பது... ஞானம் “சரஸ்வதி...” பாசத்தால் இப்படி அவனை அமைதிப்படுத்தும் நிலைகளுக்கு உதவுகின்றது இந்த உணர்வின் ஞானம்.

இப்படிப் பல கோடித் தீமைகளை அகற்றிடும் ஞானம் பெற்றுத் தான் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இன்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளோம்.

உதாரணமாக...
1.வான்வீதியில் மின்னல்கள் பாயும் பொழுது அங்கே இருள் மறைகின்றது.
2.பளீர்...ர்ர்... என்று ஒளி தெரிகின்றது. ஆனால் அந்த மின்னலும் விஷமே...!

அந்த மின்னல் ஊடுருவி மற்றொன்றோடு தாக்கப்படும் போது
1.அதையும் ஒளிக் கற்றையாக... ஒளியாக மாற்றுகின்றது.
2.அதிலிருக்கும் விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஒளியின் அணுவாக மாற்றுகிறது.

விஷத்தை அடக்கும் சக்தியைத் தாய் கருவிலேயே அகஸ்தியன் பெற்றதனால் அந்த உணர்வின் வலிமை கொண்டு மின்னலிலிருந்து வரக்கூடிய விஷத்தைத் தனக்குள் அடக்கி உடலில் இருக்கும் அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும்... சந்தர்ப்பம் தாய் கருவிலேயே விஷத்தை அடக்கும் சக்தியை அகஸ்தியன் பெற்ற நிலையில்
1.அந்த வினைக்கு நாயகனாகத் தீமையை அடக்கும் உணர்வின் ஒளியாக அது செயல்படுகின்றது...
2.அதனின் ஞானமாக அது இயக்குகின்றது... அவ்வாறு பெற்று வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
3.இன்றும் அவன் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமையை அகற்றும்... எதையுமே ஒளியாக மாற்றும்...! என்று தெரிந்து கொண்டோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொண்டால் அகஸ்தியன் ஒளியாக ஆனது போன்று நாமும் ஆக முடியும்.