ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தில் வழிபட்டால்
வாழ்க்கையில் வரும் குறைகளை நாம் எண்ணுவதில்லை.
“எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்...” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.
இதற்குத் தான் தத்துவஞானிகள் ஆலயங்களை
வைத்தனர்.
முதலில் விநாயகரை வணங்கும் போது அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியைப் பெற்று அதன் பின் அங்கே வரும் எல்லோருக்கும் இந்த நல்ல நிலைகள் பெற
வேண்டும் என்ற நம் எல்லோருக்குள்ளும் ஐக்கிய உணர்வை கொண்டு வரச் சொன்னது தான் கோவில்.
அபிஷேகங்களோ ஆராதனைகளோ காணிக்கைகளையோ போட்டால்
அந்தத் தெய்வம் நமக்குச் செய்வதல்ல. அங்கே காட்டப்பட்ட நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்து
நம்மை தெய்வமாக்கச் சொன்ன நிலைகள் தான் அது.
ஆகவே இப்படிச் செய்தால்...
1.நாம் எந்த ஆலயங்களுக்குப் போனாலும் இந்தத்
தெய்வீக பண்புகள் நமக்குள் வளரும்.
2.அந்த உணர்வுகள் தான் மக்களை காக்கும்
நிலைகளாக வரும்
3.நம்மை காக்கும் நிலைகளாகவும் வரும்.
கருப்பணசாமியோ மாடசாமியோ போன்ற தெய்வங்களையும்
காட்டி உள்ளார்கள் ஞானிகள். இந்த வாழ்க்கையில் கோபமோ ஆத்திரமோ வெறுப்போ சாபமோ இதைப்
போன்ற எண்ணங்களை எடுத்துவிட்டால் நமக்குள் அது நோயாக விளைகின்றது.
அப்படி வளர்க்கும் உணர்வுகள் நமக்குள்ளும்
சாபமிட்டுக் கொண்டே இருக்கும். நம்மைச் சார்ந்தோரையும் வளராமல் செய்துவிடும்.
இதைப்போன்ற நிலைகளைக் காட்டுவதற்குத்தான்
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள்
என்ன செய்கின்றது என்றும்
2.நமக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகள்
எப்படிச் செய்கிறது என்றும்
3.இதை எல்லாம் உருவமாக்கித் தீமையான உணர்வின்
இயக்கங்களை நமக்குத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்...?
கருப்பணசாமிக்கு ஆட்டையும் கோழியையும்
பலி கொடுத்து “என்னைக் காக்க வேண்டும்” என்று எண்ணுகின்றோம்.
இப்படி அந்தத் தீமைகளைத்தான் நாம் வளர்க்க
முடிகிறதே தவிர நமக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியவில்லை.
ஏனென்றால் ஆட்டையும் கோழியையும் தெய்வத்திடம்
கொடுத்துவிட்டு அந்தத் தெய்வம் செய்ய வேண்டும் என்று எண்ணும் போழுது
1.நமக்குள் வந்த தவறை உணராது...
2.தவறை வளர்ப்பது... என்று தான் பொருள்.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள்
வளர்ந்தால் நாம் இறந்தபின் அதே செயலைச் செய்யும். அந்த உணர்வுகள் நாம் இதனின் ஈர்ப்பில்
செய்யும்போது கொடூர நிலைகளாக நமக்குள் வளர்த்து விடுவோம். இதிலிருந்தெல்லாம் நாம் மீள
வேண்டும்...!
கருப்பணசாமி அல்லது மாடசாமி தெய்வங்களைப்
பார்த்தாலும்
1.நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும்
2.நற்குணங்கள் அங்கே வளர வேண்டும்
3.நாடு நன்மை பெற வேண்டும்
4.மக்கள் நன்மை பெறவேண்டும்... நல்ல உணர்வுகள்
பெற வேண்டும் என்று நாம் இப்படி எண்ணுதலே நல்லது.
இதைப் போன்ற எண்ணங்களை நாம் எண்ணினால்
தான் நமக்குள்ளும் நல் உணர்வாக வலுப் பெறுகின்றது. நாம் அதை பற்றுடன் பற்றுகின்றோம்.
தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.
இதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகரின்
அருகில் வேம்பை வைத்துள்ளார்கள் ஞானிகள்.
வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளையும்
வெறுப்பின் உணர்வுகளும் நமக்குள் வளராது அதை மறைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை
எடுத்தோமென்றால் இது பற்றற்றதாகும்...! மெய் உணர்வைப் பற்றுகின்றோம். அழியா ஒளிச் சரீரம்
பெறுவோம்.