நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட
வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம்
தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.
வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே... ஆதிமுதல்வனே...! என்றும்
சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்...?
நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக
இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.
ஆனால் நாம் என்ன செய்கின்றோம்...? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர்.
அவர்தான் முதல்...! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.
நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன்
நம் உயிர் தான்...!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.
விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழை தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும்
வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக வைத்து
இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
அரசு என்ன செய்கின்றது...? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச்
சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்
அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.
இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே
நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால்
முளைத்தது என்று சொல்லலாம்.
ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து
ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்...
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு
வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.
அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள்
காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும்
தன்மையை அது அடைகின்றது.
அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக
மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை
இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.
இருந்தாலும்...
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக
மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம்
முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான
சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்... தூங்காது...
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக்
காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும்
வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு
வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர
நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்காமல் செய்கின்றது.
அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியை நாம் நுகர்ந்து... கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக்
கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம்
பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும்
அங்கே வைத்தார்கள்.
ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி
வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை.
அதை நினைப்பாரும் யாருமில்லை.
சுற்றி வந்தால்... விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான்
என்றும்... அவன் எங்கோ இருக்கின்றான்...! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற
நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.
இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த
இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.
இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட...
1.என்ன...? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் செய்கின்றார் என்றால் அது எப்படி...?
என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.
ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி
இருக்கும்...! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.
அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின்
இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்... “நாம் எண்ணியதை... இந்த உணர்வின் தன்மை...
சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக...” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.
எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை
எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய
வழியில் செல்வதே நல்லது.