ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2020

நம் முன்னோர்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்


கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா... என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.

1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.

அது மட்டுமல்லாமல்... நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.

இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட... விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.

நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.

அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல... மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி... பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி... நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.

நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.

1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.

அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.

ஒரு உந்து விசை வைத்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி மற்ற செயற்கை கோள்களை விஞ்ஞான அறிவு கொண்டு அனுப்புவது போல மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
1,நம் முதாதையர்களின் உயிரான்மாக்களை
2.சரீரம் அற்ற அந்த சூட்சம சரீரத்தை... “விண் செலுத்துவதே” இந்தப் பயிற்சி.