ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2020

தியான மண்டபத்தில் அமர்ந்து நல்லது பெற தியானிக்க வேண்டிய முறை


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு நீங்கள் வந்தாலே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லி எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது.

உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்... பிள்ளைகளுக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்... உங்கள் குடும்பத்தில் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்... என்று எண்ணுங்கள்.

உங்கள் விவசாயமோ தொழிலோ எது எது சீராக வேண்டுமோ அதை எல்லாம் எண்ணி ஒரு பத்து நிமிடம் தியானம் இருங்கள். மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று இது போன்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து நீங்கள் தியானித்த உணர்வலைகள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களை நீக்க உதவும்.

“உங்களுக்கு இது எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்” சதா நான் (ஞானகுரு) எங்கிருந்தாலும் தியானிக்கின்றேன்.

ஆனால் இங்கே வரக்கூடியவர்கள் சிலர்
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது
2.அது என்னை விட்டு போகமாட்டேன் என்கின்றது என்று
3.அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

“அப்படிக் கேட்காதீர்கள்...” என்று சொன்னாலும் கூட அடுத்தாற்படி என்ன செய்கின்றார்கள்...?

யாம் பிரசாதம் கொடுக்கும்போது மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்குத் தொழில் வளம் பெற வேண்டும் மன பலம் பெற வேண்டும். என் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். என் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

இப்படிக் கேட்டால் “இதெல்லாம் நடக்கும்...” என்று ஒரு சொல்லில் யாம் (ஞானகுரு) ஆசிர்வாதம் கொடுக்கலாம்.

யாம் நல்ல வாக்கைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால்... என் பேரன் சரியாகப் படிக்க மாட்டேன் என்கின்றான்... ஒரே தலை வலியாக இருக்கின்றது...! என்று யாம் சொல்வதை விட்டுவிட்டு அதையே பிடித்துக் கொள்கின்றார்கள்.

நாம் கொடுக்கும் நல்ல வாக்கைக் கூட வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

இன்னும் சிலர்... போன தடவை உடல் நோயை எண்ணி இங்கே வந்திருப்பார்கள். இரண்டாவது தடவை இப்பொழுது இங்கே வரும் போது “நலமாகிவிட்டது” என்று சொன்னால் பரவாயில்லை.

ஏனென்றால் முக்கால்வாசி உடல் நன்றாக இருக்கும். ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால்... என் மேல் வலி இன்னும் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது... இன்னும் போகவே மாட்டேன் என்கின்றது...! என்றே சொல்லியே கேட்கின்றார்கள்.

1.போன தடவை இங்கே வந்து மருந்து சாப்பிட்டேன் உடல் வலி நீங்கியது
2.இனி கொஞ்சம் இருக்கிறதும் நீங்க வேண்டும்
3.என் உடல் முழுவதும் நன்றாக வேண்டும் என்று கேட்கும் மனது யாருக்கும் வரவில்லை.

கொஞ்சநஞ்சம் இருக்கும் வலியும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் போக வேண்டும் என்று கேட்பதற்கு மனது வர மாட்டேன் என்கின்றது.

ஆனால் யாம் இதைப் பழக்கிப் பழக்கிச் சொல்கிறோம்.

ஏனென்றால் நாம் கோவிலிற்குச் சென்று கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுது தான் புலம்பி இருக்கின்றோமே தவிர
1.கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.கோவிலில் நின்று அவ்வாறு வேண்டிய பழக்கம் இல்லை

அந்தப் பழக்கம் இருந்தால் தானே இங்கே எம்மிடமும் அவ்வாறு கேட்கும் பழக்கம் வரும்.

காரணம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டு வந்த அந்த உணர்வு தான் அவ்வாறு பேச வைக்கின்றது. ஆகையினால் இங்கே வந்தீர்கள் என்றால் தயவு செய்து...
1.கூட்டு தியானம் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
2.வந்தவர்கள் ஒரு அரை மணி நேரமாவது மேலே சொன்ன மாதிரி தியானம் செய்ய வேண்டும்
3.அப்பொழுது உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்... மன பலம் கிடைக்கும்
4.இந்த எண்ணம் உங்களை நல்லதாக்கும்.

அத்தகைய பழக்கத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான மண்டபத்தையே கட்டி வைத்தது.

தயவு செய்து உங்களை நம்பிப் பழகுங்கள்...!

ஏனென்றால் சாமியார் செய்வார் ஜோசியம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் தான் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கின்றது.

அந்த மெய் ஞானிகள் சொல்வது நமது உயிர் கடவுளாக இருக்கின்றது. நாம் எண்ணிய எண்ணம் இறையாகின்றது.
1.நம் உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாகும்போது தெய்வமாக இருக்கின்றது.
2.நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அது எல்லாம் நமக்குள் எப்படிச் செயலாக்குகின்றது...? என்பதை
3.ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.