ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2020

நமது எல்லை பிறவியில்லா நிலை அடைவதே...!


1.இந்த மனித உடலைவிட்டு நாம் சென்றால் அடுத்து நாம் எந்த நிலை அடைய வேண்டும்...?
2.நமது எல்லை எது...? இனி பிறவியில்லா நிலையே அது...!

அவ்வாறு பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டுமென்றால் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி... அந்த ஒன்றிய நிலைகள் கொண்டு தன்னிலையை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்று
1.அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வினை அனைவரும் அவ்வழியிலே பெற்றால்
2.அவர் சென்ற பாதைகளில் நாமும் அதைப் போய் அடையலாம்.

அதைத் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...! என்று நமது தமிழ் பாடல்களில் எல்லாம் முன்னணியில் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அறிந்து “இயற்கையின் சக்தி மோதலில் எவ்வாறு உருவானது...?” என்ற நிலையைத் தெளிவாக்கியபன்.

தன் ஐந்தாவது வயதில் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அதன் வழியில் பிரபஞ்சத்தை நுகர்ந்து துருவனாகின்றான்... திருமணமான பின் துருவ மகரிஷி ஆகின்றான்.

துருவத்தின் ஆற்றலை அறிந்துணர்ந்தவன் பின் அதனைத் தனக்குள் விளைய வைத்துத் துருவ மகரிஷி ஆகின்றான்.

அவனுக்குத் திருமணம் ஆகும் போது இரு மனமும் ஒன்றான நிலைகளில் தான் பெற்ற சக்திகள் அனைத்தையும் தன் மனைவி பெற வேண்டுமென்றும் தன் மனைவி பெற்ற சக்திகள் அனைத்தும் நான் பெற வேண்டும் என்ற நிலைகளில் இருவருமே ஒருக்கிணைந்து வாழ்ந்தவர்கள்.

எந்தத் தீமைகளும் தனக்குள் வராது உணர்வினை ஒளியாக மாற்றி ஆண் பெண் என்ற நிலைகளில் இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்து இரண்டு உடலும் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து இன்றும் துருவ நட்சத்திரமாக இயங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்கு அப்புறம் பிறவியில்லை.

இதைத்தான் முதலில் தோன்றிய உயிர் பின் நிலைகளில் எப்படி உருவாகின்றதென்றும் இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்களை எடுத்து
1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய பின் கல்கி
2.இந்த உயிர் எப்படி உருவானதோ இதைப்போல் உணர்வின் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்வதே கடைசி நிலை
4,இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய “உயிரணுவின் கடைசி நிலை அது...!”

அவர்கள் பெற்ற சக்தியை பின் வரும் உயிராத்மாக்கள் நுகர்ந்த பின் அதன் வழி அவர்களுடைய அருள் வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இணைகின்றனர் என்பதையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் சொல்வது புரியவில்லை என்று இதை விட்டுவிடாதீர்கள். இன்று குழந்தைகள் ரேடியோவையோ டி.வியையோ பார்க்கின்றது என்றால் அதன் உணர்வுகளைப் பதிவாக்கி கொள்கின்றது. பதிவான பின் அந்தப் பாடலை அப்படியே முழுமையாகப் பாடுகின்றது

நாம் பல எண்ணங்கள் கொண்டிருப்போர் இதைப் பார்க்கும்போது இதை பதிவாக்குவது இல்லை. அதைப் பாடவும் தெரிவதில்லை.

அந்தக் குழந்தைகள் பதிவாக்குவது போல் இந்த உபதேச உணர்வுகளைக் கூர்மையாகக் கவனித்தால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. அதை மீண்டும் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் சக்தியாக வருகின்றது.

ஆகவே...
1.உபதேசிக்கும் உணர்வைக் கூர்மையாக எண்ணி உங்களில் பதிவாக்கி
2.இந்த நினைவினை வலுக்கூட்டினால் அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெற முடியும்.

துருவ தியானத்தை தினமும் நீங்கள் செய்தீர்கள் என்றால் அதை நீங்கள் எளிதில் பருகும் நிலையும் விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலக ஆற்றலையும் தன்னுள் எவ்வாறு இயங்குகின்றது...? என்ற நிலையையும் உணர முடியும்.

அவ்வாறு அதை உங்களில் உருப்பெறச் செய்யும் நிலைக்கே ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் அன்று உபதேசத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.