ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2020

பிறந்த பின் அமைவது விதி அல்ல... தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது


இன்றைய மனிதனின் நிலைகளில் “விதி...!” என்ற நிலைகள் ஒன்று உண்டு என்றால் அது எப்படி இருக்கிறது...?

மனிதன் தாயின் கருவிலே சிசுவாக வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையை அது பதிவாக்குகின்றதோ...
1.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக ஆனாலும்
2.அந்த விதியே அவன் வளர்ச்சியில் அதன் நிலைகளே வளர்த்துக் கொண்டிருக்கும்.

உதாரணமாக ஒரு நோயாளியை அந்தத் தாய் கருவுற்ற ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களிலே உற்றுப் பார்த்தால் கருவிலே விளையப்படும் பொழுது குழந்தைக்கு இந்த நோயின் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

அது வளர்ச்சி அடைந்து பிறக்கப்படும் பொழுது அந்தத் தருணம் வரப்படும் பொழுது முடிவின் தன்மையாக அவன் விதிப்படி அந்த நோய் வந்தே தீரும்.

நீங்கள் ஜோதிடம் பார்த்து அல்லது வேறு எந்த மந்திரத்தைச் செய்தாலும் டாக்டரிடம் சென்று நீக்க முயற்சி செய்தாலும் அந்த விதிப்படி அந்த நோயின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

1.அவர் மருந்துகள் கொடுப்பார்
2.இருந்தாலும் அந்தத் தருணம் வந்த பின் அந்த மருந்து கொடுத்ததில் உள்ள நஞ்சே
3.அது தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி இவரை வீழ்த்தியே தீரும்.

ஆக சிறிது நாளைக்கு அந்த வலியிலிருந்து தப்பலாம். ஆனால் உள்ள விஷத்தைத் தனக்குள் எடுத்து உடல் உறுப்புகளைக் கொன்று இந்த விதிப்படி அவன் மடிந்தே தான் தீருவான்.
1.விதி இப்படிப்பட்ட ரூபத்திலே தான் வருகின்றது...!
2.நாம் பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது.

கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் எதை எதை எல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ அந்த விதியின் பலனே நடக்கும்.

தாய் கருவிலே இருக்கும் பொழுது... ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி “அதன் வழி உயர்ந்தார்...” என்ற ஏக்கத்துடன் தன் குடும்பத்தின் நிலைகள் சிக்கல் அதிகமாகும் பொழுது எண்ணி
1.அந்த மகான்களை எண்ணி...
2.அந்த மகானின் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் படர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்து
3.அதிலே நாட்டத்தை அந்தத் தாய் அதிகம் செயல்படுத்தியிருந்தால்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு சாது வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெறவேண்டும் என்று
5.அவரிடம் சக்தி இருக்கிறதோ இல்லையோ அவரை மகானாக எண்ணி
6.அந்த உணர்வினைப் பெறவேண்டும் என்ற எண்ணம் வரும் பொழுது அந்த உயர்ந்த சக்தி பதிவாகின்றது.

அதே சமயத்தில் ஒரு யாசகத்தைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீ நன்றாக இரம்மா... உன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கும்...! என்ற இந்தச் சொல்லை அந்த சாதுவிடம் இருந்து பதிவாக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை கருவிலே வளரக்கூடிய சிசுவிற்கு “அது விதியாகின்றது...”

அதன் விதிப்படி அதன் வளர்ச்சிகள் இங்கே வளர அவன் எதிர்பார்க்காத நிலைகள் காரியங்கள் எல்லாம் சித்தியாகும். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் தொலைத்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவன் ஒருவன் வளர்ந்து கொண்டே இருப்பான்.

அந்தக் குடும்பமோ தரித்திரமான நிலைகளில் இருக்கும். ஆனால் தாய் கருவில் இருக்கும் பொழுது எதை எடுத்ததோ ஒருவருக்கு நோய் வந்திருக்கின்றது என்றால் அந்தக் குழந்தை நலிந்து கொண்டே இருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் அதே குடும்பத்திலே ஒருவர் ஞானத்தின் வழி கருவாகி உருவாகி இருந்தால் தன் நிலைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீமைகளை வெல்லும் சக்தியாக அவர் வளர்வார். இது எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்குத்தான் மதி கொண்டு அந்த விதியை மாற்ற வேண்டும் என்று சொல்வது...!

ஒரு தீமையை நாம் பார்க்கின்றோம் மனித வாழ்க்கையில். அந்த உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. அந்த வித்து முளைக்காது தடுப்பதே மதி...!

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று
2.மதி கொண்டு தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்தத் தீமை தனக்குள் வளராது முளையிலே அதைக் கிள்ளி எறிந்து விடுகின்றது.

புளியங்கொட்டை என்று அதைக் கீழே தட்டி விட்டால் அது குப்பையில் தான் விளையும். ஆனால் தன் வீட்டருகில் வந்து விட்டால் அது தன் விழுதுகளைப் பரப்பி அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

அதை வெட்ட வேண்டும் என்றால் மிகுந்த பாதுகாப்பு வேண்டும். வெட்டும் போது வீட்டுப் பக்கம் சாய்ந்து விடாமல் நம் மதி கொண்டு அதைச் சிறுகச் சிறுகத் தான் அப்புறப்படுத்த வேண்டும்.

இதைப் போன்று தான் மதி கொண்டு விதியை மாற்றுதல் வேண்டும்.

இப்படித்தான் இந்த வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாத நிலையில் தன் மதி கொண்டு உணர்வின் தன்மையை வளர்த்தான் துருவ மகரிஷி... தன் சந்தர்ப்பத்தால் பெற்ற உணர்வு கொண்டு...!

அந்த மதி கொண்டு தன் மனைவியும் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும் என்று ஊக்குவித்தான். அதனில் விளைந்த உணர்வுகள் கொண்டு தன் மதி கொண்டு தன் உணர்வுக்குள் மனைவியையும் சேர்த்துக் கொண்டான்.
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் மதி கொண்டு விதியை மாற்றினான்
2.பிறவியில்லா நிலை அடைந்தான் துருவ மகரிஷி.

இதை எல்லாம் குருநாதர் ஒவ்வொரு நொடிக்கும் பல இன்னல்களைக் கொடுத்துக் காட்டிற்குள் அழைத்துச் சென்று இது எல்லாம் எப்படி உருப்பெறுகின்றது...? உருமாற்றியது...? இதிலிருந்து நீ எப்படி உருமாற வேண்டும்...? நீ எப்படி உருமாறினாய்...? எப்படி உருமாற்ற வேண்டும்...? என்ற நிலைகள் கொண்டு தான் உனக்குள் உபதேசிக்கின்றேன்.

1.அருள் ஞான வித்தை உனக்குள் கொடுக்கின்றேன்
2.இதைச் சீராகப் பண்படுத்தி வளர்த்துக் கொள்
3.அதிலே விளைந்த வித்தின் எண்ணங்களைப் பரப்பு
4.மக்கள் அனைவரும் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்திக் காட்டு.

அந்த உணர்வின் சொல்களை ஒவ்வொரு நிலைகளிலும் வெளிப்படுத்து கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் பதிவாகி விட்டால் அவர்கள் அதை மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அருள் ஞானம் அங்கே நிச்சயம் வெளிப்படும்.

அதைக் கண்டு நீ பேரானந்தப்படு... அந்தப் பேரானந்தம் தான் உன்னை ஒளியின் சுடராக மாற்றும் என்று தெளிவாக்கிய அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).