ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2020

உயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்


ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று சொல்லும்போது உங்கள் உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உங்கள் உயிரே குரு...!

ஆகவே ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா... என்று சொல்லும்போது அனைவரும் ஒன்றுபோல உங்கள் உயிரான ஈசனை வேண்டி ஏங்கி யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி எண்ணும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...!

1.நீங்கள் யாரையும் வேண்டவில்லை... உங்கள் உயிரைத்தான் வேண்டிக் கொள்கின்றீர்கள்
2.அவனின்றி ஒரு அணுவும் அசையாது
3.இந்த உயிர் உடலில் இல்லையென்றால் உடலான சிவம் சவமாகி விடுகின்றது
4.சிறிது நேரமானால் நீசமாகிவிடுகின்றது என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் மீண்டும் சொல்கின்றேன். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கும்போது...
1.அருள் உணர்வைப் பெறலாம்
2.அறியாத இருளை நீக்கலாம்
3.பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்
4.அருள் வாழ்க்கையும் வாழலாம்.
5.இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றவும் முடியும்.

இந்த சக்தி ஒவ்வொரு மனிதர் உடலிலும் உண்டு. இப்படி நாம் பக்குவப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையே... சந்தர்ப்பமும் மற்ற சூழ்நிலைகளாலும் பல திசைகளிலும் இயக்கப்பட்டு அதன் மூலம்
1.மனிதன் வாழ்க்கையில் உயர்வதும்
2.மனிதன் வாழ்க்கையில் நோய் வருவதும்
3.மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருவதும்
4.ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்... “நுகர்ந்தறிந்து உணர்ந்த உணர்வால் நிகழ்வதுதான்... இது எல்லாம்...!”

யாரும் தவறு செய்யவில்லை என்று மீண்டும் சொல்கின்றேன். 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளையச் செய்தால் அந்தச் சந்தர்ப்பத்தால் வரும் இன்னல்களை அகற்றலாம்.

நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக நாம் என்றுமே உருவாக்க முடியும். அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! என்று நம் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்கின்றோம்.