ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2020

கல்லைக் கடவுளாக்கி விட்டோம்… நம் மனதைக் கல்லாக்கிக் கொண்டே வருகின்றோம்…!


ஆலயங்களில்  ஞானிகள் சிலையை உருவாக்கி வைத்துள்ளனர். நாம் அந்தச் சிலையைக் கல்லாகத்தான் மதிக்கின்றோமே தவிர சிலைக்குள் மறைந்துள்ள உண்மையை அறிவதில்லை.

1.நீ இந்தத் தெய்வீகக் குணத்தைப் பின்பற்றினால்
2.உன் குடும்பம் நலமாக இருக்கும்
3.உன் குணங்கள் நன்றாக இருக்கும் என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்திருக்கின்றார்கள்.
4.வடித்து வைத்திருந்தாலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியினைப் பின்பற்ற வேண்டும்…! என்றும் சொல்லியுள்ளார்கள்.

ஆனால் அந்தச் சிலை தான் நமக்குச் செய்கின்றது…! என்ற எண்ணத்தில்… அதற்கு அபிஷேகம்… ஆராதனை… செய்து விட்டால் அவன் செய்து தருவான்…! என்று எண்ணுகின்றனர்.

அந்த எண்ணத்தில் தன்னுடைய துயரத்தை எல்லாம் அங்கே கொட்டுகின்றனர்.
1.எனக்கு இந்தப் பாவிப் பயல் மோசம் செய்தான்…
2.என் பையன் சுட்டித்தனம் செய்கின்றான்… அவன் என்றைக்குத்தான் திருந்துவானோ…?
3.கடன் வாங்கிச் சென்றவர்கள் பணத்தைத் தரவே மாட்டேன் என்கிறார்கள்…! என்று
4.மீண்டும் மீண்டும் வேதனயைத் தான் சுவாசிக்கின்றனர்.

இதுகள் எல்லாம் நம்முடைய அறியாமை…! ஆசையின் நிமித்தம் இந்த உணர்வின் தன்மை பெற்று
1.உடல் இச்சைக்குத்தான் மாற்றுகின்றோம்
2.இந்த உடலைக் காக்கும் இச்சை வரவில்லை.
3.தீமைகளை அகற்றத் தெரியாத வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம்.

தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்…? என்பதற்குத்தான் அந்த அருள் ஞானிகள் ஒவ்வொரு குணங்களுக்கும் சிலைகளை அமைத்துத் “துவைதம்” என்று காட்டினார்கள். (துவைதம் என்றால் கண்ணுக்குத் தெரிவது)

அந்தத் தெய்வத்திற்கு அவன் எழுதிய காவியம் “அத்வைதம்” (அத்வைதம் என்றால் கண்ணுக்குப் புலப்படாதது) அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்”  

1.இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.அவர்கள் தொழில் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்  என்று நினைக்கப்படும் பொழுது
4.நமக்குத் தொழிலில் நஷ்டம் வந்தாலும்… மற்ற கஷ்டம் வந்தாலும்…! “அதை எல்லாம் மறந்து விடுகின்றோம்….”

மலரைப் போன்ற மனம் நாங்கள் பெறவேண்டும் இந்தக் கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் அவர்கள் குடும்பத்தார் அனைவரும் மலரைப் போன்ற மனம் பெறவேண்டும் என்று கோவிலுக்கு வரும் ஒவ்வொருவரையுமே எண்ணும்படி வைக்கின்றார்கள்.

ஆனால் இன்று கோவிலுக்கு முன்னாடி என்ன நடக்கின்றது…?

கடையில் மாலையை வாங்கினால் அவன் அதிக விலை சொல்கிறான். மற்ற இடங்களில் இருபது அல்லது முப்பது என்றால் கோவிலில் உள்ள கடையில் ஐம்பது ரூபாய் என்பான்.

ஏன் அதிக விலை சொல்கிறாய்…? என்று கேட்டால் கோவிலில் கடைக்கு வாடகை எக்கச்சக்கமாகக் கேட்கின்றார்கள், வெளியிலே கடை வாடகை 3000, 4000 என்றால் இங்கே பத்தாயிரம் ரூபாய் கேட்கின்றார்கள்.

நாங்கள் இங்கே வாங்கித்தானே கொடுக்க வேண்டும்.. நாங்களும் பிழைக்க வேண்டும் அல்லவா…! என்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்று யாகத்தைச் செய்தால் பாவத்தைப் போக்கலாம். என்று ஞானிகள் சொன்ன உண்மையின் உணர்வை நுகரும் தன்மையையே இழக்கச் செய்து விட்டார்கள்.

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகளை மறந்து தான் இன்று இருக்கின்றோம்.

ஞானிகள் காட்டிய வழியில் ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும். கோவிலுக்கு வரும அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுவதே “உண்மையான பக்தி…!”