ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 11, 2020

இந்த உண்மையான யாகத்தை ஒவ்வொரு நாளும் நடத்த வேண்டும்


சாமி (ஞானகுரு) கஷ்டத்தை எல்லாம் நீக்குகின்றார் என்று சொன்னால் போதும் சாமி…! என் குடும்பத்தில் இப்படி எல்லாம் கஷ்டம் இருக்கின்றது…! என்று வேகமாக வந்து சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

1.என் பையன் நன்றாக இருக்க வேண்டும்
2,நாங்கள் நல்லபடியாக வாழ வேண்டும்
3.அந்த அருளை எங்களுக்குக் கொடுங்கள்..! என்று கேட்பதற்கு வாயே வர மாட்டேன்…! என்கிறது.

ஏனென்றால் கோவிலில் போய்ச் “சரணாகதி” (அடிபணிந்து) தத்துவத்தைச் சொன்னதனால் அந்த நிலை வருகின்றது.

1.கஷ்டத்தை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் போ…!
2.மிகவும் மீறி விட்டது என்றால் அவன் பேரில் அர்ச்சனை செய் போ…!
3.அதிலேயும் மீறி அவன் அடங்கவில்லை என்றால் யாகத்தைச் செய் போ…!
4.சண்டாள யோகம் என்று கூட இருக்கின்றது…. அந்த யாகத்தை வளர்த்துக் கொண்டு போ…!
5.இப்படிக் காசைக் கொடுத்துப் போகும் நிலை தான்…! இன்று உள்ளது.

உண்மையான யாகம் எது…? என்பது அறியவில்லை. உண்மையான நெருப்பு எது…? நம் உயிர் தான்.

இன்று யாகக் குண்டத்தில் பலவிதமான பொருள்களைப் போடுகின்றனர். மயக்க நிலையை உருவாக்கும் பொருள் ஒன்றையும் போடுவார்கள்.

அதாவது போடும் பொருளில் அந்த மரக்குச்சிகளிலேயே விஷத் தன்மை வாய்ந்த மயக்கத்தைக் கொடுக்கும் நிலையும்… சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும்… உண்டு.

சோமபானம் என்ற மருந்தும் உண்டு. அதையும் ஊற்றுவார்கள். அதை ஊற்றி வெளி வரும் புகையைச் சுவாசித்தால் மயக்கத்தை ஊட்டும்.

உதாரணமாக ஒருவன் கஞ்சா அடிக்கின்றான் என்று பார்த்தால் நமக்கும் தலையைச் சுற்றும். ஏனென்றால் அவன் அடிக்கின்றான்… நாம் நுகர்கின்றோம்… அதனால் அப்படி ஆகின்றது.

இதே மாதிரித்தான் சோமபானத்தை நெருப்பிலே போடப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் நம் உணர்வின் தன்மை அதைப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே…
1.உண்மையான நெருப்பில் (உயிரில்)
2.அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

மற்றவர்கள் தீமைகளையோ… குறைகளையோ… துன்பங்களையோ… எண்ணாது அதிலிருந்து “அவர்கள் விடுபட வேண்டும்…” என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

1.அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும்
2.இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

ரோட்டிலே போகும் பொழுது இனம் தெரியாதபடி இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள் என்று உற்றுப் பார்த்தால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுத் தீமைகள் புகாது முதலிலே தடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அவர்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த நிலை வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்தால்…
1.மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது
2.நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும்.
3.தீமையான உணர்வுகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம்
4.நம் உயிரான நெருப்பிலே…!

ஏனென்றால் நெருப்பிலே நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். ஆகவே ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள்.

1.உங்கள் உயிர் நெருப்பு
2.அதிலே நல்ல உணர்வுகளைச் செலுத்துங்கள்.
3.அந்த உணர்வு உங்கள் எண்ணம் சொல் செயல்களை நல்லதாக மாற்றும்.

இதைப் பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் இந்த யாகத்தைக் காட்டினார்கள்.