ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2020

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்


இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் வேதனையும் வெறுப்பையும் அதிகமாக வெளிப்படுத்துகின்றான். அதே சமயத்தில் தொழிற்சாலைகளிலும் மற்ற இடங்களிலிருந்தும் விஷப் புகைகளையும் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் காற்று மண்டலத்திலே ஊட்டுகின்றனர்.

1.இவை அனைத்தும் மேகங்களில் கலந்து
2.விஷத் தன்மையான மழை நீராகப் பெய்து கொண்டுள்ளது.

ஆக… மனிதன் விட்ட வேதனை உணர்வுகள் மேகங்களில் கலந்து மழையாகப் பெய்த பின் அந்த நீருடன் கலந்த விஷமான உணர்வுகள் பயிரினங்களில் படப்படும் பொழுது
1.மழைக் காலங்களில் எல்லாம் விஷம் கொண்ட பூச்சிகளாகவும் புழுக்களாகவும் எண்ணிலடங்காத அளவில் உருவாகி
2.நாம் பயிரிட்ட செடி கொடிகளைக் கொன்று தின்னும் நிலைகள் வளர்கின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து “நம் மூச்சலைகள் மூலம்” அதை மேகங்களிலே கலக்கச் செய்ய வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் கலந்த மேகங்கள் மழை நீராகப் பொழிந்து பூமியில் படரப்படும் பொழுது
1.அது நல்ல அணுக்களாக உருவாகின்றது
2.அதன் மலங்கள் தாவரங்களில் சேர்க்கப்படும் பொழுது அருள் சக்தியாக வளர இது உதவும்.

ஏனென்றால் நீங்கள் விடும் மூச்சலைகள் வீணாகாது. மழை மேகங்களில் கலந்து மழை நீருடன் கலக்கப்படும் பொழுது அதிலிருந்து இந்த நாட்டில் வரும் தீமையின் உணர்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஆகவே நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். பேரானந்தம் பெறுவோம்… பேரின்பத்தைப் பெறுவோம்… அனைவரையும் பேரானந்தம் பெறச் செய்வோம்…!

1.நமக்குள் இங்கே நம் மனதை ஒன்றாக்குவோம்.
2.பேரன்பைப் பெருக்குவோம் என்ற இந்த உணர்வுடன் இதை நாம் செயல்படுத்துவோம்.

இதை அன்றே வான்மீகி காட்டியுள்ளார்..! அவர் நமக்குக் காட்டிய இராமாயணம் என்பது சாதாரண காவியம் அல்ல. இராமன் மனதைக் குவித்து இராமலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று அவர் காட்டியதை
1.மனதை… என்று சொன்னதை “மணலை..” என்று மாற்றிவிட்டார்கள்.
2.அன்றைய வாழ்க்கையின் எழுத்து வடிவுகள் வேறு
3.அதன் பின் வந்தோர் தவறின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் அதைத் தெளிவாக்கினார். ஆகவே மனதை ஒன்றாக்கினால் பேரன்பு அங்கே பெருகும்.

நம் வாழ்க்கையில்..
1.எல்லோரது நிலையும் மனதை ஒன்றாக்கப்படும் பொழுது பேரின்பப் பெருவாழ்வாக
2.என்றுமே பிறவி இல்லாத நிலையாக நாம் அடைய முடிகின்றது.

உலகில் இனி வரும் தீமைகளிலிருந்து விடுபட இதைத் தவிர வேறு வழி இல்லை..!