ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 23, 2020

திடமாக இருக்கும் எந்தப் பொருளுமே நிலையாக இருப்பதில்லை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு உருவாகும் உருவக சக்தி அனைத்திற்குமே “ஒளி நிலை கொண்ட ஈர்ப்பு சக்தி நிலை” செயல் கொண்டால் தான் திட பிம்ப வளர்ச்சி வருகின்றது.

அண்டசராசரத்தில் உள்ள அனைத்து வளர்ச்சியிலும்..
1.திடச் செயல்களில் நிலைத்திருப்பது எவையுமே இல்லை.
2.மாறிக் கொண்டே சுழலுகின்ற சுழற்சி ஓட்ட வஸ்துவாய்த்தான் வளருகின்றது… மாறுகின்றது… ஒவ்வொரு திடச் செயலுமே.

திடச் செயல் கொள்ள ஒளி நிலை கொண்ட ஜோதி நிலை வளர்ந்தால்தான் வளர்ச்சி நிலை கொள்கின்றது.

அண்டத்தின் அமிலச் சுழற்சி சுழலுகின்ற வழித் தொடரில்… அதனதன் அமிலச் சேர்க்கையின் திட நிலையில்… ஒளி நிலை ஈர்ப்பு கொண்டவுடன்… செயல் நிலை சேர்க்கையின் அமில நிலைக்கொப்ப வழி பெறுகின்றது.

உயர்வு எது…? தாழ்வு எது…? நன்மை எது…? தீமை எது…? என்ற பாகுபாடின்றி அண்டசராசரக் கோளங்கள் வளர்ச்சி நிலை கொள்ளவில்லை.

அதனதன் ஈர்ப்பின் சுழற்சி வலு நிலை வளர்ந்து ஓடினாலும்…
1.இன்றைய விஞ்ஞானத்திற்கு எட்டாத உயர்வு ஞானத்தால்
2.ரிஷி சக்திகளின் கூட்டுக் குடும்பச் செயலாய்த்தான்
3.ரிஷிகளின் ஒளி சக்தி வலுவைக் கொண்டு மண்டலக் கோளங்கள் குடும்பம் குடும்பமாகச் சுழன்று கொண்டுள்ளன.

இக்குறிப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் குறிப்பெடுக்கட்டும்...!

நம் சூரியன்… சூரியனின் சுழற்சி ஓட்டக் குடும்பமாக நாற்பத்தி ஏழு… சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டாகக் கோளங்களின் அங்கங்கள் கொண்டு சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களுடன் அறுபது கோளங்கள் சூரிய குடும்பச் சுழற்சியில் சுழன்று கொண்டே வருகின்றது.

மனிதனுக்கு… ஆத்மா இயக்க உடலும்… உடலின் அங்க அவயங்களும்… இவ் அங்க அவயவத்தில் சேர்க்கவல்ல அமிலத்திலேயே சதையாயும் நகமாயும் ரோமமாகவும் பல்லாகவும் பல மாறு கொண்ட வளர்ச்சி உண்டு.

அவைகளின் கூட்டு அமில உலோக ஈர்ப்புத் தொடர்பில்… இச்சரீர அங்கத்தின் உருவ நிலையில் எலும்பும் மண்டை ஓடுகளும் வலுக் கொண்ட இரச சக்தியின் வளர்ச்சி கொண்டு
1.ஓர் சரீரத்தில் பல நிலை கொண்டு
2.இயக்க ஓட்ட மனிதச் செயல் நடக்கின்றதோ
3.அதைப் போன்று தான் தனித்த சூரியனுக்கு சக்தி இல்லை.

சூரிய ஆத்மாவின் உருவ… திட… பிம்பக் கோளம் சூரியக் கோளமென்றால் சூரியன் அங்க அவயங்கள்தான் பூமியும் சந்திரனும் வியாழன் செவ்வாய் எல்லாமே. ஒவ்வொரு கோளமும் சூரியனுக்கு அங்கமாகச் சுழலுகின்றது.

நம் சூரியக் குடும்பம் மட்டுமல்ல… இரண்டாயிரம் குடும்பச் சுழற்சி ஓட்டங்கள் சுழலுகின்றன இவ்வண்ட வெளியில்…!

அவையும் அல்லாமல் உருவாகி உருவாகி மாறுகின்ற நட்சத்திரக் கோளங்கள் எண்ணிலடங்கா வளர் நிலையில் வளர்ந்தோடுகின்றன.

ஒன்றின் தொடர்புடன் ஒன்று சுழலும் இவ்வண்டக் கோளத்தில் இரண்டாயிரம் குடும்ப நிலையில்… சூரியக் குடும்பத்தின் அறுபது கோளங்களில் வளர்ந்த மிகப் பெரிய கோளம் ஒன்று பிரிந்து… கரைந்து… மாறு கொண்டு… தன் வளர்ச்சி நிலை செயலற்றுச் சுழற்சி ஈர்ப்புப் பிடியிலிருந்து நழுவி விட்டது.

நாற்பத்தி எட்டு கோளத்தில் ஒன்று கரைந்ததனால் நாற்பத்தி ஏழாய் இச்சூரியக் குடும்பம் சுழல்வதோடு அல்லாமல் சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளங்களில் தனித்து இயங்கும் திடமாகக் கூடிய வலுக் கோளமாய் இரண்டு கோளங்கள் ஒன்று படப்போகின்றன.

சனி வளர்க்கும் பன்னிரண்டு கோளம் என்பது பூமியை ஒத்த திடக்கோளமல்ல…! ஒவ்வொரு பருவக் காலத்திலும் பல நூறு மைல் அகல அளவிலும் அதே சுற்றுக் கன அளவிலும் பாதரசமணி எப்படி உள்ளதோ அதைப் போன்று திடமும் அல்ல… நீரும் அல்ல… வெண்மையும் கருமையும் கொண்ட வெள்ளியின் வண்ண நிலைக்கொப்ப அமில உலோகக் கோளமாய்த்தான் வளர… கரைய… பருவ கால நிலைக்கொப்பச் செயல் கொள்ளும்.
1.இக்கோளத்தின் பல மாற்று நிலைகள்
2.இனி வரப்போகும் “பிரளய காலத்தில்” செயல் கொள்ளப் போகின்றன.