நட்பின் தன்மை
கொண்டு ஒருவரிடம் பழகுகின்றோம். அவர் சந்தர்ப்பத்தால் நோய்வாய்ப்பட்டு
இருக்கப்படும் பொழுது அவரைக் கேட்டு உற்றுப் பார்த்து க்ஷேமத்தை விசாரிக்கின்றோம்.
அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.
அப்பொழுது அந்த
உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் அந்த நோய்வாய்ப்பட்ட உடலிலிருந்து
வெளிப்படும் அந்த வேதனையான உணர்வுகளை நம்மை அறியாமலே நாம் நுகர நேருகின்றது
ஆக, நாம் நல்லதை
நினைத்துத்தான் அவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், நோய்வாய்ப்பட்ட உணர்வுகள்
வெளிப்படுவதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த மனிதனின்
உருவத்தை நமக்குள் பதிவாக்கிவிடுகின்றது.
அந்த உடலிலிருந்து
வரக்கூடிய அவர் வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிய முடிகின்றது. ஆனால்,
நுகர்ந்தறிந்தாலும் அவர் உடலிலே பட்ட உணர்வுகள் அவர் எப்படி வேதனைப்பட்டாரோ அதே
வேதனை உணர்வுகள் நமக்குள்ளும் தோன்றுகின்றது.
பின் ஒரு முறை
பார்த்துவிட்டாலும் அவரை எண்ணி நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம். ஏனென்றால், அவர்
உடலிலிருந்து வரக்கூடிய வேதனையான அலைகள் பூமியிலே பரவிக் கொண்டேதான் உள்ளது.
நாம் எப்படி ஒரு
செடி கொடிக்குள் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றிவிட்டால் அந்தப் பூமியின் துணை
கொண்டு தன் உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து அதன் இனத்தின் வித்தாக விளைகின்றது.
இதைப் போல நம்
உடலின் துணை கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்கள் கிளர்ச்சியாகி நம் உயிரின் துணை
கொண்டு நாம் யாரைச் சந்தித்தோமோ அந்த உணர்வுகளைக் கவர்ந்துவிடுகின்றது.
ஆக, அப்படிக்
கவர்ந்து நுகர்ந்தபின் அவர் பட்ட வேதனை போன்றே நம்மை அறியாமலே நம்மையும் சோர்வடையச்
செய்துவிடுகின்றது. அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் உடலிலுள்ள அந்த (அவரைப்
பார்த்துப் பதிவாக்கிய) வேதனையான அணுக்களுக்கு இதை இரையாக்குகின்றது.
உதாரணமாக,
குருவியோ காக்காயோ மற்ற உயிரினங்கள் கூடு கட்டி முட்டையிட்டு அது குஞ்சு பொரித்த
பின் அது நகர்ந்து செல்ல முடியவில்லை என்றால் இரை தேடிக் கொண்டு வந்து அதனதன்
குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.
குஞ்சுகளோ தன் இரைக்காக
வேண்டி ஏங்கிக் கத்துகின்றது. கத்தும் பொழுது தாய்ப் பறவை உடனடியாகத் தேடிச்
சென்று தன் இனங்களுக்கு அதற்கு ஏற்ற உணவைக் கொடுக்கின்றது.
இதை போலத் தான்
நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் அதை “ஜீவ அணுவாக மாற்றி” நம்
உடலுடன் இணைத்து விடுகின்றது.
பின் உருவான அணு தனக்கு
உணவு வேண்டும் பொழுதெல்லாம் யாரை உற்றுப் பார்த்து எந்த உணர்வு கொண்டு அது
உருவானதோ அந்த உணர்வை உணவாக எடுக்கும்.
உதாரணமாக,
வேதனைப்படுபவரைப் பார்த்த்து அந்த அணு உருவாகியிருந்தால் வேதனையை உருவாக்கும்
நிலையாக நம்மையும் வேதனைப்படும் மனிதனாக உருவாக்கிவிடும்.
ஆக, யார் மீது
அந்த வேதனைப்பட்டோமோ அதே உணர்வின் தன்மையை இன்று நம் உடலிலிருந்த அணு ஏங்கப்படும்
பொழுது நம் உயிர் “எந்த உடலிலிருந்து இந்த வேதனைப்பட்ட அலைகள் வருகின்றதோ” அதைக்
கவர்ந்து ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து அதே எண்ணங்கள் வந்து அந்த நினைவை ஊட்டுகின்றது.
அதே சமயத்தில்
அந்த உணர்வின் தன்மை உடலில் உள்ள அந்த அணுக்களுக்கும் ஆகாரமாகச் சேர்கின்றது. இது
இயற்கையின் சில நியதிகள்.
ஆகவே, இதைப்
போன்று நாம் வாழ்க்கையில் எவரைப் பார்த்தாலும் வேடிக்கையாக ஒருவர் சண்டை போடுபவரைப்
பார்த்தாலும் வேடிக்கையாகப் பலர் துயரப்படுவோரைப் பார்த்தாலும் நம் கண்கள் அவரைப்
பதிவாக்கிவிடுகின்றது.
நம் கண்ணுடன்
சேர்ந்த காந்தப் புலனோ அவர்கள் உடலிலிருந்து வெளிப்படுவதை அதைக் கவர்ந்து அதை நம்
ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக
நமக்குள் விளைந்து விடுகின்றது.
நாம்
வேடிக்கையாகப் பார்த்தாலும் இத்தகைய அணுக்கள் உருவாக்கிவிட்டால் உயிரால்
உருவாக்கப்பட்ட அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது அதே உணர்வுகளைத்
தூண்டுகின்றது.
அந்த
உணர்ச்சிகளைத் தூண்டும் போது இதே உயிர் யார் உடலிலிருந்து வந்ததோ அதைப் பிரித்து
நம் ஆன்மாவில் இதைப் பெருக்கி அதைச் சுவாசித்து அதை உணவாகக் கொடுக்கின்றது.
இதைப் போன்றுதான்
நம் வாழ்க்கையில் நாம் தவறே செய்ய வேண்டாம். தவறு செய்வோரைப் பார்த்தாலே போதும்.
அந்த உணர்வின் அணுக்களாக நமக்குள் விளைந்து விளைந்து அது நம்மை அறியாமலேயே பல
நோய்கள் வருவதும் பல இன்னல்கள் வருவதும் பல தொல்லைகள் வருவதும் போன்ற நிலைகள்
ஏற்படுகின்றது.
ஆகவே, இதைப் படித்துணர்ந்தோர்
அனைவரும் உயிரின் இயக்க நிலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். உயிரின் வேலை எது என்றும்
நம்மை எப்படி உருவாக்குகிறது என்றும் அறிந்து கொள்ளுங்கள், தெளிந்து கொள்ளுங்கள்.
நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால்
வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்றால் தீமையானவற்றைப் பார்த்த அடுத்த கணமே “ஈஸ்வரா”
என்று நம் உயிரிடம் புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலிலுள்ள
ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று யாம் சொன்ன முறைப்படி உள் செலுத்தினால் தீமையான
உணர்வு கருவாகி அணு ஆகாமல் உடனடியாகத் தடுக்க முடியும்.
சிறிது நேரம் எடுத்துக் கொண்டால்
அந்தத் தீமை செய்யும் உணர்வின் அலைகள் அனாதையாகிவிடும் நம் ஆன்மாவில் இருந்து விலகிச்
சென்றுவிடும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி.
பின், யார் நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
அவர்களிடம் நாம் நல்ல வாக்கினைப் பதிய வைத்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்
நீங்கள் சீக்கிரம் நலம் அடைவீர்கள் என்று சொன்னால் அவரும் அதை எண்ணி எடுத்தால் அவரும்
தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
உங்கள் வாழ்க்கையில் உங்களை
நீங்கள் நம்பி இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் எண்ணத்திற்கு எவ்வளவு சக்தி
இருக்கின்றது இன்று நிச்சயம் உணர்வீர்கள். எமது அருளாசிகள்.