ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2016

நம்மை ஆட்டிப் படைக்கும் வேதனையிலிருந்து மீள எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால், நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது, வேதனையாகின்றது, நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால், சிலர் என்ன சொல்வார்கள்?

இப்படித்தான் நான் எண்ணினேன். ஆக, இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால் அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா.., இன்னும் நிற்கவில்லையே..,” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்?

அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே.., வலி நிற்கவில்லையே..,” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே, இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..,?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ, வேதனையோ, நோயோ எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.


தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெறமுடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.