வயலைப் பண்படுத்தி அதிலே மற்றதை நீக்கி நல்ல வித்துக்களை
ஊன்றி நீரைப் பாய்ச்சி அதை விளைய வைக்கின்றோம்.
அதை போல உங்கள் மனதினைப் பண்படுத்தி அருள் ஞான வித்துக்களை
உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம். அதை வளர்க்கத் “தியானம்” என்ற காந்த சக்தியை
நீங்கள் நீராக எடுத்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்திட வேண்டும்.
ஆக, நீரை ஊற்றி செடியை வளர்ப்பது போல இந்த அருள்
ஞான சக்தியை வளர்த்திடல் வேண்டும். செடிகளுக்கு உரம் இடுவது போல மகரிஷிகளின் அருள்
சக்தியை நாம் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எடுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
களைகள் முளைக்காது, தனக்குள் தீயவினைகளைத் துடைத்து
மெய் ஒளி காணும் நிலையை இந்த உபதேசத்தின் மூலமாகக் கொடுக்கின்றோம். உங்கள் மனதினைப்
பண்படுத்தி அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.
இதை முறைபடுத்தி ஒவ்வொருவரும் உங்களை நம்பி தியானத்தின்
மூலம் இதை எடுத்தீர்கள் என்றால், உங்கள் உயிர் நீங்கள் எண்ணியதை இயக்கிக் காட்டும்.
அதே உயிர் உங்கள் உடலுக்குள் இயக்கிக் காட்டி அந்த
மகரிஷிகளின் உணர்வினை விளைய வைத்து, அதனின் நிலையாக அது செயலாக்கும்போது அந்த ஞானிகள்
சென்ற பாதையில் நீங்கள் அங்கே செல்லலாம்.
விஞ்ஞான அறிவு கொண்டு அற்புதங்களைச் செய்து அணுவைப்
பிளந்து ஆற்றல் மிக்க நிலைகளை உருவாக்கும்போது பிறிதொன்றை (ஒருவனை) அழித்துவிட்டு தான்
வாழ்ந்திடும் எண்ணம் கொண்டு, உலகையே அழிந்திடும் நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
இன்று நாம் இதிலேதான் சிக்குண்டுள்ளோம்.
ஆக வேதனையும், வெறுப்பும் கொண்டு மீண்டும் மனித
உடலுக்குள் சிக்குண்டு நாம் பரிணாம வளர்ச்சியில் தேயும் நிலைகளில் பௌர்ணமி தேய்வது
போல தேய்ந்து மீண்டும் புழுவின் நிலையை அடையலாம்.
இதில் உங்களுக்கு “எது பிரியமோ..,” அதைச் செய்யலாம்.
நீங்கள் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் தான்
இதைச் சொன்னேன். ஆனால் நீங்கள் எடுத்துக்கொண்ட நிலைகள் கொண்டுதான் உங்களால் வளர முடியும்.
நான் அதைச் செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச்
செய்வேன், குதிரையைச் செய்வேன் என்றால், அது முடியாது.
குரு காட்டிய வழியில் நான் உண்மையைக் கண்டேன். எனக்குள்
அதை வளர்த்துக் கொண்டேன். உணர்வின் சொல்லாக வடிக்கின்றேன்.
கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் பதிவு செய்து அதனை
நீங்கள் வளர்த்துக் கொண்டால்தான் “உங்கள் உயிர் அதை வளர்க்கும்”.
உங்களுக்காக நான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள்
நலம் பெறவேண்டும் என்று நான் வேண்டலாம்.
ஆனால் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான்
வேண்டும்போது “எனக்குத்தான் அந்தச் சக்தி கூடுகின்றது”. கீதையிலே இதைத்தான் சொல்கின்றார்கள்,
"நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்".
நீங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். உங்களை அறியாது
இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணவேண்டும் என்று நான் தியானிக்கும் போது அந்த
உணர்வின் சக்தி எனக்குள் பெறுகின்றது. என் உடலுக்குள் விளைகின்றது.
ஆனால், என்னைப் பார்க்கும் போது, “தீமைகள் நீங்கிப்
போகும்..,” என்று நான் சொல்லும் போது, உங்கள் துன்பத்தைத் துடைக்க அழுக்கை நீக்க சோப்பு
போட்டுத் துடைத்த மாதிரி அந்த நிமிடத்திற்கு வேண்டும் என்றால் துன்பத்தைத் துடைக்கலாம்.
உங்கள் காரியத்திற்கு வேண்டும் என்றால் சாதிக்கலாம்.
அந்த நேரத்திற்குத் தான் அது நடக்கும்.
ஆனால், அடுத்த கணம் எடுக்க வேண்டும் என்றால், எப்பொழுதுமே
நிலையாகத் தீமைகளை நீக்க வேண்டும் என்றால் நீங்களும் இதைப் போல அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கினால்தான் அது உங்களுக்குள் விளைந்து அந்த நிலையில்
உங்களைக் காத்திட முடியும்.
ஆக, சாமி (ஞானகுரு) எனக்காக வேண்டிச் செய்தால் சரியாகப்
போய்விடும் என்று எண்ணினால் “அது தப்பு”.
“சாமி சொன்ன நிலைகளை” நாம் எடுத்து கொண்டால் நாம்
நல்ல நிலையை அடையலாம் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
உதாரணமாக, ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால், அவரை
மீண்டும் எண்ணும் போது அந்த ஆத்திரம் வருகின்றது.
அதே போல ஒருவர் வேதனைப்படும்படியான செயலைச் செய்தால்
அவரை எண்ணும் போது நாம் வேதனையான உணர்வைச் சுவாசித்து அந்த வேதனையால் சுணங்கிவிடுகின்றோம்.
குழந்தை மேல் பாசமாக இருந்து “இவன் இப்படிச்
செய்கின்றான்”
என்ற ஏக்கத்துடன்
சோர்வுடன் வந்தால் அந்தச் சோர்வான நிலைகள் நம்மைச்
செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது.
மனித வாழ்க்கையில் இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம்
மீட்டிய அந்த ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் மெய்ஞானிகள் உணர்வு
நமக்குள்
சென்று சோர்வடையும் தன்மையை நீக்கிவிடும்.
ஆக, மெய் ஒளி
பெறும்
உணர்வாக நமக்குள் விளைந்து நாம் இந்த
உடலைவிட்டுச் சென்றால் மெய்ப் பொருள் காணும் நிலைகள் மெய்பொருளாக
நம் உயிரின் தன்மை ஒளியின் சரீரமாக ஆவது திண்ணம்.
அந்த நிலையைப் பெறவேண்டும் என்றுதான் எனக்குள் குருநாதர்
உபதேசித்தார்.
அதன் வழி நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும். உங்கள் அறியாது இருள்கள் நீங்க வேண்டும். மெய் பொருள் காணவேண்டும் என்ற
நிலைக்கே உபதேசிக்கின்றேன்.
இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் ஒளியின் சரீரமாக
நீங்கள் ஆக வேண்டும் என்று உங்களை நான் நினைத்து மகரிஷிகள் காட்டிய வழியில் அந்தச்
சப்தரிஷி மண்டலத்தை எண்ணி ஏங்குகிறேன். அந்த உணர்வின் தன்மையை எனக்குள் வளர்கின்றது.
உங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து
சென்ற முன்னோர்களின் அந்த உயிரான்மாக்கள் பிறவி இல்லாத ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று
சதா நான் தியானிக்கின்றேன்.
எனது குரு பலம் கொண்டு அதனை அவர்கள் பெறவேண்டும்
என்று எண்ணியதனால் அந்த உணர்வின் தன்மை எனக்குள் அதிகமாக விளைகின்றது.
அதன் வழியில் என்னுடைய கூர்மை அங்கே செல்கின்றது.
நான் இந்த உடலை விட்டுச் செல்லும் நிலையில் நிச்சயம் நான் அங்கு செல்வேன்.
அதைபோல நீங்களும் பிறர் படும் துன்பமான நிலைகளை
நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அவர்கள் அறியாது இருள் நீங்க
வேண்டும். மெய்பொருள் அவர் காணவேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பழக வேண்டும்.
இவ்வாறு எண்ணினால் அதனின் உணர்வுகளை உங்கள் உயிர்
உங்களுக்குள் படைக்கின்றது. அதனின் நிலையாக உங்களுக்குள் விளைய செய்கின்றது.
நீங்கள் எந்த நேரம் எந்த நிமிடம் உடலை விட்டுச்
சென்றால் அங்கே விண் செல்லலாம். இது தான் மெய்ஞானிகள் காட்டிய நிலைகள்.
இந்த வாழ்க்கை என்றுமே நமக்குச் சதம் அல்ல. இந்த
உடல் என்றும் நமக்கு நிரந்தரமல்ல.
இந்த உலகம் நமக்குச் சொந்தம் தான். அதே சமயத்தில்
இந்த உலகத்துக்குள் இருக்கும் அருள் உணர்வுகளை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும். அந்த
அருள் உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.
அந்த மெய்ஞானிகள் காட்டிய உணர்வு நமக்குள் வளரும்
போது அது சொந்தமாகி “அதனின் நிலைகளில் அதுவாகி.., அதனின் நிலைகளில் நாமாகின்றோம்”.
இந்த நிலைகளை எல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று
எல்லா மகரிஷிகளையும் யாம் வேண்டுகிறோம்.