குருநாதர் எம்மை இமயமலையில்
கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன
பாதையில் போனேன்.
பார்த்தால் ஒரு பட்டாளமே படையே
அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற
மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள்.
(நான் அங்கே போய்விட்டு வந்தபின்
தான் பேப்பரில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்)
ஆக, அந்தச் சரீரங்கள் எதுவும்
கெட்டுப் போகாமல் இருக்கின்றது. அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய
இருக்கின்றது.
அதைப் பார்த்தவுடன் ஆசையும்
வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம்
கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது.
ஏனென்றால், குருநாதர் இந்தப்
பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார்.
இரண்டு நகையை எடுத்துக் கொண்டு
ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி
என்னுடைய உணர்வுகள் சொல்கிறது.
ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு
நகைகள் இருக்கின்றது. அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப்
பார்த்தால் நேபாளிகள், சைனீஸ் மாதிரி அந்த
அரச வம்சமாகத் தெரிகின்றது.
குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து)
இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது.
ஏனென்றால், குருநாதர் பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு
வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு
வரும் அல்லவா என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது.
எடுப்பதா.., வேண்டாமா..,?
என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
இது “நிஜமாகத்தான் இவர்கள்
படுத்திருக்கின்றார்களா..,?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா..,
என்ற எண்ணம் வந்தது.
“இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்..,
இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன்.
நான் முதலில் வந்த பாதை அந்தப்
பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே
வந்தேன்.
வரும் பொழுது இந்திய எல்லையில்
இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
“பாருடா…, உன்னைப் பார்க்கின்றான்
பாருடா..,” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர்
வந்து சேர்ந்தேன்.
ஏனென்றால், குருநாதர் எமக்கு
இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.
குருநாதர் சக்தி கொடுக்கிறார்
என்றால் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம் என்ற நிலையில்
கொடுத்துள்ளார்.
நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்?
வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத்
தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம்.
அதே சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும்
என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம்.
அதைப் போன்று தான் நம் குருநாதர்
கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம்.
ஆக, இதை எந்த வழியில்? என்ற
வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார்.
ஏனென்றால், மனிதனுடைய ஆசையின்
உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது? முதலில் இதை அழித்துப் பழக வேண்டும். அந்த மெய்
ஒளியை வளர்த்துப் பழக வேண்டும்.
இமயமலையில் அந்த இடத்தில்
வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆகவே, நம் வாழ்க்கையில் எத்தனை
சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக
வேண்டும்.
கஷ்டமோ, நஷ்டமோ, மற்றவர்கள்
செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.
அடுத்த நிமிடம் உடனே அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச்
சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“அந்தச் சக்தியைத் தான்” உங்களைப்
பெறச் செய்கின்றோம்.
அவர்களில் ஒருவர் நமக்குக்
கெடுதல் செய்கிறார் என்றால் “தொலைந்து போகட்டும்..,” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள்.
ஆனால், தொலைந்து போக வேண்டும்
என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது. அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும்
கெடுகின்றது.
ஆனால், அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்கு
கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படிச் செய்தால் இது நமக்கு
நன்மை பயக்கும்.
ஒரு போக்கிரி வருகின்றான்,
நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது
என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்?
ஏனென்றால், நாம் ஒரு கடுமையான
ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது.
நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான்,
அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான் அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம்.
அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது.
இங்கே விளைந்த பிற்பாடுதான்
அங்கே போகின்றது. ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும்.
இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளை களைகளை நீக்க வேண்டும்.
குருநாதர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
இவ்வாறு பல அனுபவங்களைக் கொடுத்தார். பல சிரமங்களை ஏற்படுத்தினார். அது எவ்வாறு இயக்குகின்றது
அதிலிருந்து மீண்டிடும் மார்க்கம் என்ன? என்பதையும் உணர்த்தினார்.
தீமைகளிலிருந்து என்னை மீட்டிடவும்
செய்தார். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை பெறும்படியும் செய்தார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில்
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலையில்தான்
இதை உபதேசித்து வருகின்றோம்.