ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2016

பரிணாம வளர்ச்சியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகள் எப்படியெல்லாம் வருகிறது என்று காட்டினார் குருநாதர்

இயற்கையின் நிலைகள் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அந்தச் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறி வருகின்றது என்ற நிலையை பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வந்தார் குருநாதர்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்வது என்பதைத் தான் கேள்விக் குறி போட்டு ஒவ்வொரு நிலைகளையும் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார் குருநாதர்.

புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு.

ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால், குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார்.

தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை என்ன..,? என்று  பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது.

இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது.

முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன்.

அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார் என்று சொல்கின்றார்.

நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது.

அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது.

புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது.

அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின் பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது.

புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது.

புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. அடிபட்டுவிட்டோம் என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது.

மறுபடியும் பன்றி “உஹு..,ம்..,” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது.

மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது.

அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர்.

ஆக, ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும் அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார்.

அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது.

இதே உணர்வுகள் தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அதன் அறிவாக வருகின்றது என்றார் குருநாதர்.

ஏனென்றால், தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது?”

ஆகவே, அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.