ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2016

கடுமையாக நம்மை ஒருவர் தாக்க வந்தாலும் அதைத் தடுக்கும் வழி - நடந்த நிகழ்சி...!

கால் நடையாக எம்மை (ஞானகுரு) நாடு முழுவதும் சுற்றச் செய்து அனுபவம் பெறுவதற்காக அனுப்பினார். ஒரு சமயம் குருநாதர் கயாவிற்குப் போகச் சொல்கிறார்.

அங்கே சென்றால் என்ன நடக்கிறது?

உள்ளுக்கே நுழைந்தவுடன் தாடி வைத்திருக்கின்றவனையெல்லாம் அடிக்கின்றார்கள், உதைக்கின்றார்கள். அதுமட்டுமல்ல ஒரு ஏழெட்டுப் பேரைக் கொன்றுவிட்டார்கள்.

குருநாதர் போகச் சொல்லும் நேரத்தில் இது நடக்கின்றது.

ஏனென்றால், சாமியார் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய்விட்டார் என்ற நிலையில் தாடி வைத்திருக்கின்றவர்கள் யாரைக் கண்டாலும் அடிக்கின்றார்கள்.

சாமியாராக வந்தவர்களையெல்லாம் பெரும் பகுதி அங்கே போலிஸ் ஸ்டேசனில் வைத்துள்ளார்கள்.

நான் சாதாரணமாக ஒரு துண்டை மட்டும் போட்டு என்னடா.., இந்த மாதிரி இருக்கின்றது என்று போய்க் கொண்டிருக்கிறேன்.

மகராஜ்.., இதர் ஆவ், ஆவோஜி, அந்தர் ஆவ்..,” அப்படி என்கிறார்கள். போலிஸ் ஸ்டேசனுக்குள் கூப்பிடுகின்றார்கள்.

நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு தப்பும் பண்ணவில்லையே.., என்னை எதற்காகக் கூப்பிடுகின்றீர்கள்? என்று அந்தப் போலிஸிடம் கேட்டேன்.

சாமியார்..,” என்று கண்டாலே அடித்துக் கொன்று கொண்டிருக்கின்றார்கள், நீ செத்துப் போவாய் என்று சொல்கிறார்கள்.

நான் சாமியார் இல்லை. தாடி தான் வைத்திருக்கின்றேன், நான் ஊரைச் சுற்றிப் பார்க்கத் தான் வந்தேன் என்றேன்.

நீ சாமியார் இல்லை என்று நினைக்கிறாய். ஆனால், உன் தாடியைப் பார்த்தவுடன் சாமியார் தான் என்று அடிப்பார்கள் என்று மறுபடியும் அந்தப் போலிஸ்காரர்கள் சொல்கிறார்கள்.

இது கயாவில் நடந்த நிகழ்ச்சி.

ஏனென்றால் அப்பொழுது அங்கே போலிஸ் ஸ்ட்ரைக். அந்த பீகார் மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அடிக்கடி இன பேதங்கள் உருவாகி குடும்பம் குடும்பமாக ஒருவருக்கொருவர் அநியாயமாகக் கொன்று கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரி உணர்வலைகள் சென்றபின் இனம் புரியாத அந்த நிலைகளே வரும். ஒரு குழந்தையினுடைய நிலைகளை மாற்றுவதற்காக வேண்டி இன்னொரு இனத்தினுடைய குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய்விடுகின்றார்கள்.

அப்பொழுது சாமியார் வேடம் போட்டு அதைச் செய்கின்றார்கள்.

அதனால் சாமியார் மாதிரி இருக்கிறவர்களையெல்லாம் அடிக்கின்றார்கள். இப்படியெல்லாம் சில நிலைகள் நடக்கின்றது.  அந்த இடத்தில் எனக்குள் பயம் வருகின்றது.

இவர்கள் சொன்னவுடன் முதலில் தைரியமாகப் போனேன். பின் பயம் வருகின்றது.

அப்பொழுது குருநாதர்நீ இந்த உடலுக்கு ஆசைப்படுகிறாயா..,?” என்று கேட்கின்றார்.

அந்த உடல் இருந்தால் தானே..,? இந்த உணர்வுகளை உள்ளுக்குள் கிளர்ந்தெழச் செய்து இந்த உடலுக்கு ஆசைப்படுகின்றாயா? என்று கேட்கிறார்.

இந்த உள் உணர்வுகளில் அவர் போதித்த உணர்வும் அங்கே நடக்கிற சமச்சாரமும் இரண்டும் இந்த ஆன்மாவில் பட்டு அந்த உணர்வுகள் இப்படி இயக்கமாகின்றது.

அப்படி அதைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வால் கலக்கம் வருகின்றது. அப்படிப் பயம் வரும் அந்த நேரத்தில் குருவை நினைக்கச் செய்கின்றார்.

“இந்தத் தீமைகள் மறைய வேண்டும்...,
உண்மைகள் வளரவேண்டும்”
என்ற இந்த உணர்வை நீ எடுத்துக் கொண்டு போ.., என்கிறார்.

ஏனென்றால், பயமான உணர்வுகளை எடுத்து திலே நாட்டம் செலுத்தினால் அந்த உணர்வுகள் அலைகளாக வரும். உன்னைப் பார்ப்பவருக்கெல்லாம் அதே அலை வரும். ஆக, நீ எதை நினைக்கின்றாயோ அவன் அந்தச் செயலுக்கே (உன்னைத் தாக்கும்) வருவான் என்றார் குருநாதர்.

அவர் சொன்ன முறைப்படி “இந்தத் தீமைகள் மறைய வேண்டும்..., உண்மைகள் வளரவேண்டும்” என்று எண்ணிக் கொண்டு அப்புறம் நடந்தே சென்றேன்.

அங்கே அந்த ஊர்கள் முழுவதும் சுற்றிப் பார்க்கும் பொழுது அந்த உண்மையினுடைய அலைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் பீகார் மாநிலத்தில் பயங்கர நிலைகள் நடக்கின்றது. வறட்சியும் ஜாஸ்தி, கலவரமும் ஜாஸ்தி, பழி தீர்க்கும் உணர்வும் ஜாஸ்தி.

இது எப்படி? எதனால்? என்ற நிலைகளில் அன்றைய அரசர் காலத்தில் பதிவானது என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் அங்கே சந்தர்ப்பம் பயமும் வருகின்றது, அந்த உணர்வும் வருகின்றது. இதைப் போன்ற தீமைகளை எப்படி நீக்குவது என்று அனுபவமாகக் காட்டியவுடன் பின் அங்கிருந்து பத்ரிநாத் போகச் சொன்னார் குருநாதர்.