ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2016

"நல்லது நடக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் நாம் கோபப்படுகின்றோமா...?

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது அவன் வேண்டுமென்றே செய்கிறான் அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன், அவன் பகைவன் என்ற உணர்வை எடுக்கிறோம்.

அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக அவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

இப்படி அவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்துவிட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம்.

அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம். “என்னை இப்படிச் சொன்னார்கள்.., எப்படிச் சொல்லலாம்? அவர்களை விடலாமா..,?” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. 

நான் (ஞானகுரு) திட்டினேன் என்றால் அவர்களிடம் உள்ள “கெட்டது போவதற்காகத்தான்..,” திட்டுவேன். அவர்கள் “கெட்டுப் போக..,” திட்ட மாட்டேன்.

ஏனென்றால் நான் திட்டுவது உடலில் இன்னொரு ஆவி இருந்தது என்றால் அதைத்தான் சாடுவனே தவிர அவரைத் திட்டுவதில்லை. அதனால் அந்த உணர்வின் தன்மை ஆவி ஒடுங்கும். அந்த மனிதனை நல்லதைப் பேசவிடும், நல்லதைச் செய்யவிடும்.

நீங்கள் திட்டினீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? நேரடியாகத் திட்டுவீர்கள். அந்த ஆள் தான் செய்கிறார் என்று நினைத்து அந்த ஆளைத் தான் திட்டுவீர்கள்.

நான் உள் நின்று இயக்கும் உணர்வை அறிந்ததனால் நான் அதைச் செய்கின்றேன்.

ஆகவே, ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி  நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிடவேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு, சரி., அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால் இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால், நம் உயிர் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்கும்.