ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2016

கடவுளை நான் எங்கே தேட விரும்புகின்றேன்...?

நீங்கள் சும்மா ஒரு பக்கத்தில் உட்கார்ந்து பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களுக்கு. உங்கள் மனதில் என்னென்ன உணர்வுகள் நினைவலைகள் ஓடுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வெறுப்பாகச் சொன்னவர்கள், சண்டை போட்டவர்கள், இடைஞ்சல் செய்தவர்கள், இவர்களைப் பற்றியெல்லாம் நினைப்பு தொடர்ச்சியாக வரும்.

நினைக்காமல் உட்கார்ந்து பாருங்கள். என்னென்ன சிந்தனைகள் வருகின்றது என்று..,?

எனக்கு அவன் இந்த மாதிரி இடைஞ்சல் செய்தான், நான் அவனுக்கு இவ்வளவு உதவி செய்தேன் அவன் இப்படிப் பண்ணுகின்றான், கடன் வாங்கியவன் காசைத் தர மாட்டேன் என்கிறான், வீட்டில் இப்படியெல்லாம் என்னைப் பேசுகின்றார்கள்.., இப்படி நடந்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது? என்ற புலம்பல் தன்னாலே (உங்களுக்குள்) வரும்.

ஏனென்றால், இப்பொழுது தானே புதிதாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம். இதற்கு முன்னால் எத்தனயோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அது அது அந்த அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவ்வப்பொழுது இந்த உணர்வுகள் தோன்றினாலும் அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தால் சட்டையில் அழுக்குப் பட்டால் அதனின் நிலைகள் தெரிவதில்லை.

இதைப் போன்று தான் உங்கள் உயர்ந்த குணங்கள் ஒவ்வொன்றிலும் மறைத்திருக்கும் இத்தகையை தீமைகளை நீக்குவதற்கு மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால், யாம் பதிய வைத்த உணர்வை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு “இப்படி ஆகிவிட்டதே..,” என்று வேதனையாக எண்ணவே கூடாது. வேதனை என்பதே விஷம்.

உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று குருநாதர் இட்ட கட்டளைப்படி சதா நான் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் கதவை மூடிவிட்டால் என்ன செய்வது? நீங்கள் கதவை அடைத்துவிட்டு எங்கேயோ போய்விட்டீர்கள் என்றால் உள்ளுக்குள் வர முடியாதே.

நான் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பரப்பிக் கொண்டேயிருக்கின்றேன். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருந்தால் அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

ஆகையினால், எனது வேலை கடவுளை நான் எங்கேயும் தேடவில்லை. உங்கள் உயிரைத்தான் கடவுளாக்கச் சொன்னார் குருநாதர்.

அவன் அமைத்த கோட்டை உங்கள் உடல் என்றும் பல ஆயிரம் ஆண்டுகள் இதனின் உணர்வுகளைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கியுள்ளது என்று உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.

அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து இந்த மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆராதனை செய்கின்றேன்.

தெளிந்து கொண்ட அறிவு கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட இந்த அறிவின் தன்மை கொண்டு நீங்கள் அருள் ஞானிகளாக மெய் ஞானிகளாக உலகைக் காக்கும் அரும் பெரும் சக்திகளாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இது தான் என்னுடைய தவம்.