ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2016

1000 வருடம் தவமிருந்த ஆன்மா - பாபாஜி

குருநாதர் எம்மை ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார்.

போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன்.

உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாக படர்ந்து இருக்கின்றது.

பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது.

அங்கே போய் உட்காருடா என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன்.

திடீரென்று தண்ணீர் வருகிறது. வேகமாக வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது.

வேறு வழி இல்லை.

தண்ணீர் வர வர வர வர அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன்.

மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும் என்ற சந்தேகமும் வருகின்றது.

பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்..,” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை, குதித்தேன்.

எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால், ரிஷிகேசத்தில் இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை.

அங்கே மரம் இருந்தது பாருங்கள். இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது.

“ஓ….ம்.., நமச்சிவாய..,
ஓ…,ம்…, நமச்சிவாய..,” இதே சொல் கேட்கிறது.
“ஓ..,ம்..,” என்று அந்தத் “தொனியே..,” சப்தம் அழகாகக் கேட்கின்றது.

ஓம் நமச்சிவாய என்று சொல்லி தத்துவப்படி தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை.

இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது.  

இந்த மாதிரி அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர். “நீ அதைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார்.

சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது. முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டுகின்றார்.

ஏனென்றால், அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்.,” என்றார் குருநாதர்.

அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர்.

அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால், இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது.  உள்ளுக்குள் இருந்து “ஒளி..,” அப்படியே வீசுகின்றது,

உள்ளே தீபம், விளக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்..,” என்று அடிக்கின்றது.

அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார். போகும் இடம் தெரியவில்லை.

அப்புறம்தான் இதை எண்ணி குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி இந்த மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக “அந்த இடத்தைக் காட்டுவதற்காக” இந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றார்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து அதில் போய் ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த ஆன்மா பெறவேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர்.

எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான் இந்த அலைகளை (தீமைகளை) மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது.

குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார்.

எதன் ரூபமாக?

இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்..,” என்று சொல்கின்றார் குருநாதர்.

இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்..,” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார்.
அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார்.

மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார்.

அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால், இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது.

அவர் “எதைப் பெறவேண்டும்..,” என்று எண்ணினாரோ அங்கே பெறவேண்டும் என்று குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும், “என்றும் ஒளியின் சரீரம் அவர் பெறவேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன்.

அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராகப் போகின்றது.

எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”.

அப்பொழுது என் வாழ்க்கையில் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர். இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்குக் கரைகின்றது. அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர்.

நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது.

ஆனால், இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால், போகும் பாதை இல்லை.

அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன் என்றார் குருநாதர்.

அங்கே ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும்.

அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெறவேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு, எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர்.

இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார்.

அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்தும் நிலையும் தெரியாது, ஒன்றும் தெரியாது.

ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா.

குருநாதருடைய பாதை சென்றாலும் கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து” மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும்.

அவர்கள் விண் சென்றால் இதனின் உணர்வு கொண்டு நம்முடைய எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்கின்றது. அதனின் துணை கொண்டு மற்றவர்களையும் விண் செலுத்த முடியும். பிறவா நிலை என்ற நிலையை எல்லோரையும் அடையச் செய்ய முடியும்.

இதைத்தான் அந்த இடத்தில் ரிஷிகேசத்தில் எனக்கு (ஞானகுரு) உணர்த்திக் காட்டுகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் பிறவா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெற எமது அருளாசிகள்.