மரண பயத்தை நாம் அகற்ற வேண்டும்
மனிதனின் வாழ்க்கையில் வேதனை சலிப்பு சங்கடம் வந்தாலும் அல்லது கொடிய நோய் இருந்தாலும் இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை தனக்குள் சேர்த்து உடலில் உருவான அந்த அணுக்களை நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.
பிறவி இல்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கும் வண்ணம் அதை எளிதில் பெற்று… தான் பெற்ற சக்தியை மனைவிக்கும் மனைவி பெற்ற சக்தியைத் தன் கணவனுக்கும் என்று இரு உணர்வு ஒன்றாக இணைத்திட முடியும்.
1.உயிர் ஒளியான அந்த உணர்வினைத் தனக்குள் அறிவாக இயக்கி
2.கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.”இனி எந்தப் பிறவியும் வேண்டாம்…” என்ற நிலையில் பிறவில்லா நிலையாகப் பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.சப்தரிஷி மண்டலங்களாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
5.அவர்களுக்கு என்றுமே மரணம் இல்லை.
இன்று மனிதனின் வாழ்க்கையில் தொழில் செய்கிறோம் என்றால் நமக்கு மரண பயம் வந்து விடுகின்றது…!
ஐயோ… தொழில் மந்தமாகிவிட்ட்தே…! வாங்கியவனுக்கு நாளைக்கு எப்படிப் பணத்தைக் கொடுப்பது…? கொடுக்கவில்லை என்றால்; அவன் திட்டுவானே…!
என் பிள்ளைகள் எல்லாம் என்ன ஆகும்…? நான் எப்படி வாழ போகிறேன் என்று
1.நமக்குள் இருக்கும் “வாழ வைக்கும்” அந்த நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றி
2.மரண பயத்தை ஊட்டித் தன்னை அறியாமலே தற்கொலை செய்து கொள்ளும் நிலை வருகிறது.
அதாவது மரண பயம் என்ற உணர்வு வந்து விட்டால்… இந்த மனித உடலையே அழித்திடும் உணர்வின் எண்ணங்கள் வந்து மனித உடலையே அழித்து விடுகின்றது.
ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
2.மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ முடியும்.
3.நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வாழ முடியும் வளரவும் முடியும்
4.நம் பார்வையால் பல தீமைகளையும் போக்க முடியும்.
தான் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வளர்ச்சியாகி பூரணத்துவம் அடைந்து நம்மை நாம் அறிவதும் உலகை அறிவதும் என்ற நிலை வருகின்றது.
ஆனாலும்..
1.தன் குழந்தை மேல் பாசத்தை வைத்தால் அந்தப் பாசத்தால் குழந்தை என்ன செய்வான்…? என்று வேதனைப்பட்டால் நம் நல்ல குணங்கள் மறைந்து விடுகிறது
2.கடன் கொடுக்கின்றோம்… வாங்கியதை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் நாளை என்ன செய்வது…? என்ற வேதனை வருகின்றது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது
3.நண்பர்களுடன் பழகுகின்றோம்… அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம் நோய்களை அறிகின்றோம் அப்பொழுது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.
இப்படித்தான் பௌர்ணமி சிறுகச் சிறுக தேய்பிறையாவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தேய்பிறை ஆகி விடுகின்றது.
மற்ற கோள்கள் மறைப்பு விலகும் பொழுது தான் சந்திரன் முழுமையான பௌர்ணமி ஆகின்றது.
நம் உயிரின் தன்மை கொண்டு மனித உடல் பெற்ற பின் தேய்பிறை ஆகாது என்றுமே பூரண பௌர்ணமியாக… ஒளியின் சரீரமாக ஆக வேண்டும் என்பதனை ஞானிகள் நமக்கு காட்டியுள்ளார்கள்.
ஆகவே தீமைகளை அகற்றும் சக்தியை யாரெல்லாம் வழிப்படுத்துகிறார்களோ அவர்களே மனிதன் என்ற முழுமை அடைகின்றார்கள்… நரசிம்ம அவதாரமாக ஆகின்றார்கள்.
தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் பொழுது கல்கி… ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். ஒளியின் சரீரம் பெறும் நிலை தான் பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகள்.
இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்…
1.அகண்ட உலகில் உள்ள மற்ற பிரபஞ்சங்களின் சக்தியை நுகர்ந்து நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிப் பேரின்ப்ப் பெரு வாழ்வு என்ற நிலையாக
3.மரணம் இல்லாப் பெரு வாழ்வாக என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாற முடியும்.