ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2021

ஜாதகத்தில் சொல்லப்படும் நல்ல நேரம் கெட்ட நேரம் மனிதனுக்கு உகந்ததல்ல... அதிலே உண்மையும் இல்லை

 

துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
1.துருவத்தின் ஆற்றலைப் பெற்று ஒளியின் சரீரமாக இருப்பவன் அகஸ்தியன்.
2.இருளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறிவன் தான் அவன்.

அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வுகளை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் போது உங்களுக்குள் என்னென்ன வாசனைகள் எல்லாம் வருகிறது...? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி
1.பச்சிலை வாசனைகள் வரும்... ரோஜாப்பூ மணம் வரும்
2.தீமை நீக்கிய... விஷத்தை நீக்கிய... மூலிகைகள் வாசனைகள் வரும்.

ஏனென்றால் அந்த அகஸ்தியனைப் பற்றிச் சொல்லப்படும் போது உங்கள் நினைவாற்றல் அவன்பால் செல்லும் போது காற்றிலிருக்கக்கூடிய பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த உணர்வலைகள் உங்களுக்குள் வந்து சேரும்.

சிலரால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட அதை நுகரும்போது உணர்ச்சிகளால் அறிய முடியும். புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும் உடலில் ஊடுருவுவதையும் காணலாம்.

1.சிலர் மணத்தால் அறியலாம்
2.சிலர் உணர்வால் அறியலாம்
3.சிலர் உணர்ச்சிகளால் அறியலாம்

இது போன்ற அகஸ்தியனின் உணர்ச்சிகளை நம் உடலில் உள்ள இரத்தத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது அது இயக்கச் சக்தியாக மாறும். அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளும் மீண்டும் மீண்டும் வரும்.

உதாரணமாக ஜாதகக்காரனோ ஜோசியம் பார்ப்பவன் சொல்வதையோ நாம் கேட்டுப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அது தான் இயக்குகின்றது.

அதே போல் தீமையை நீக்கிய அந்த மெய் ஞானி தன் உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை நாம் பதிவாக்கி ஒவ்வொரு நிமிடமும் அதை மீண்டும் மீண்டும் எண்ணினால் அது நமக்குள் இயக்கத் தொடங்கும்.

கஷ்டத்தையோ நஷ்டத்தையோ பார்க்கும்போதெல்லாம் இது போல் எண்ணும் பழக்கம் வந்துவிட வேண்டும்.
1.கஷ்டத்தைக் கேட்டு முடிந்ததும் ஈஸ்வரா... என்று
2.நம் புருவ மத்தியில் எண்ணி உடனே அதை நிறுத்திவிட வேண்டும்.

மற்றவர்களிடம் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே...” என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அப்படி வேகமாகச் சொல்லி விட்டால் இந்த உணர்வுகள் அவருக்குள் இயக்கப்பட்டு நமக்கு எதிர்மறையாக வரும்.

இவர் எதையோ செய்து கொண்டிருக்கின்றார்... ஏதாவது சொன்னால் கேட்க மாட்டார்...! இவருக்கு மட்டும் என்ன...? ஒரு காலத்தில் அவருக்குக் கஷ்டம் எதுவும் வராதா...? என்று நம்மைப் பற்றிக் கூடிப் பேசுவார்கள்.

இப்படி நான்கு பேர் கூடிப் பேசினால் அது நமக்குள் பகைமை ஊட்டும் உணர்வாக ஊடுருவி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடும். ஆகவே மற்றவர் கஷ்டத்தைச் சொன்னாலும் நம் செவியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக்கி உடலுக்குள் போகாமல் தடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.

பின்... அவர்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியால் நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் செழிக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நலமும் வளமும் பெறுவீர்கள் என்று
3.அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி மாற்றியமைத்துச் சொல்லாகச் சொல்லப்படும் போது
4.அவர் கஷ்டத்தை நீக்கும் நிலை ஆகிவிடுகின்றது.

ஜோதிடம் சொல்பவன் உங்களுக்கு ஏழரை நாட்டான் பிடித்திருக்கின்றான் என்று சொன்னால் அதைப் பிடித்துக் கொள்கிறீர்கள்.

அதன் பின் நீங்கள் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் “போகும் போதே இந்தச் சந்தேகம் வரும்...” வியாபாரம் செய்தால் நஷ்டம் ஆகி விடுமே...! என்ன செய்வது...? பணத்தை பேசாமல் வைத்துக் கொள்வோம்.

மாமன் மச்சானைப் பார்க்கக் கூடாது... நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட ஏமாற்றி விடுவார்கள்... ஏழரை நாட்டான் பிடித்திருப்பதால் ஒதுங்கி நில்...! என்று இப்படிப்பட்ட பதிவு தான் நம்மை இயக்குகிறது.

தக்க நேரத்தில் உதவிக்கு வரக்கூடிய நல்ல நண்பனாக இருந்தாலும் கூட அதைப் பார்க்க விடாதபடி இப்படித் தடையாகி விடும்.

ஆக மொத்தம் ஜாதகக்காரர்கள் சொல்வதைப் பதிவாக்கி அந்த பதிவின் நிலைகளிலேயே தான் இயங்கி நாம் வாழ்கின்றோம். இது போன்ற சாஸ்திர நிலைகள் மனிதனுக்கு இல்லை.

1.ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது தான் இருளை நாம் போக்க முடியும்.
2.வெறும் வான இயல் சாஸ்திரத்தைப் (ஜாதகம்) பார்த்து என்ன பலன்...?

மனிதனில் உயர்ந்த அந்த அகஸ்தியன் இருளை நீக்கி ஒளியாக இருக்கின்றான். பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான்... ஒளியாகப் பெருக்கும் உணர்வுகளை வளர்த்தான். பேரருளைப் பெற்றுப் பேரொளியாக மாறி இன்றும் ஒளியாக இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வானிலிருந்து பருகினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும் அடக்க முடியும்... ஒளியாக ஆக்கவும் முடியும்.