ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2021

உயிரைப் பற்றி நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று அறிவித்தாலும் உயிரில் மோதிய பின் அணுவின் கருவாக உருவாகி விடுகின்றது.

காரணம்...
1.அவன் வேதனைப்படுகிறான்… வேதனைப்படுகிறான்… என்ற எண்ணங்களை
2.மீண்டும் அதிகமாகக் கூட்டும்போது அது கருவாகும் சந்தர்ப்பமாகின்றது.

கோழி குருவி பல்லி போன்ற முட்டை இடும் இந்த உயிரினங்கள் அனைத்துமே “கேரும்...” அதைப் போன்று நாம் திரும்பத் திரும்ப அந்த வேதனைப்பட்ட மனிதனை எண்ணும் பொழுது அந்த மனிதனின் உணர்வு நமக்குள் கருவாக உருப்பெற தொடங்கி விடுகின்றது.

நோய்க்குக் காரணமாக எது அவர் உடலில் இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வந்து கருவான பின் இரத்தங்களில் சுழன்று வரும்.
1.அப்பொழுது அது எந்தெந்தப் பாகங்களில தேங்கி நின்றதோ
2.அங்கே முட்டையாகி அணுவாக வெடித்து வெளி வரும்.

கோழி அடைகாத்துக் குஞ்சு பொரித்த பின் அவை வெளிவந்தபின் கத்துகிறது. தாய்க் கோழி கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றது. அதே போல் நமது உயிர் கூப்பிட்டு உருவான அந்த அணுக்களுக்கு ஆகாரம் கொடுக்கும்.

எப்படி…?

நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
1.நம் சிறு மூளை பாகம் வந்து இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.பின் உயிர் நம் புலனறிவுகளான கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு ஆணைகள அனுப்பும்.
3.இந்த உணர்ச்சியின் தன்மை வந்தபின் எந்த மனித உடலில் இருந்து வெளி வந்ததோ அதே வேதனைப்படும் உணர்வுகளைக் கவரும்.

காரணம்.. வேதனைப்பட்ட அந்த மனித உடலில் இருந்து வெளிவந்த அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. அதைத் தான் ஐம்புலன்களும் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும்.

உடலுக்குள் அனுப்புவதற்கு முன் நாம் நுகர்ந்தது உயிரிலே பட்டபின் அந்த வேதனைப்பட்ட மனிதன் எப்படி வேதனைப்பட்டாரோ அதே போல் அந்த மனிதனின் சோர்வும் வேதனையான உணர்ச்சிகளும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்... இனம் புரியாதபடி நாமும் வேதனைப்படுவோம்.

அவ்வாறு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.நாம் செய்து கொண்டிருக்கும் தொழிலில் இன்ன குறை இருக்கிறது என்று
2.எதையோ ஒன்றை எடுத்துச் சொல்ல ஒருவர் வருகிறார் என்றால் சரி...
3.நம் புலன்களில் அது ஏற்றுக் கொள்ளாது... கவனிக்க முடியாது.
4.அந்த வேதனைக்குண்டான அவருடைய நினைவை ஊட்டும்

அந்தச் சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண் பார்வை அதை ஏற்றுக் கொள்ளாது. கண் பார்வையில் அந்த வெறுப்பின் நிலையையே ஊட்டும். அந்த வேதனைப்படும் உணர்வையே ஊட்டும்.

நாம் பணத்தையோ ஒரு பொருளையோ கணக்குப் பார்க்க வேண்டுமென்றால் சரியான முறையில் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டி இருக்கும்.

மேலே சொன்ன இந்த வேதனை உணர்வுகள் பார்வைக்கு வரும் பொழுது அதைச் சீராக இயக்கவிடாது. தப்பும் தவறுமாகச் செய்வோம்.

தொடர்ந்து இத்தகைய உணர்ச்சிகள் உடலிலே இயக்க இயக்க அந்த வேதனை உணர்வுகள் நம் கை கால் அங்கங்களைக் குறைத்துவிடும். காரணம் உடலில் உருவான அந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாக இதனைச் சுவாசிக்கச் செய்து அதைச் சாப்பாடாகக் கொடுக்கும்.

ஒரு பருந்து வருகிறது என்றால் அந்த இரைச்சல் கேட்ட உடனே தாய்க் கோழி சப்தமிடும். உடனே அந்தக் குஞ்சுகள் அனைத்தும் தாயின் இறக்கைக்குள் அடங்கி விடுகின்றது.

அதே மாதிரித்தான்
1.உடலில் உருவான இந்த வேதனையான அணுக்கள் எல்லாமே உயிருடன் ஒன்றி தன் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
2.உயிர் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்கின்றது.

மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளைத் தூண்டி தனது ஆகாரத்தை எடுத்துப் பெருக ஆரம்பிக்கிறது. இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனையான அணுக்கள் பெருகி கடும் நோயாக உருவாகின்றது.

எந்த மனிதனைப் பார்த்து அவரின் வேதனையை நுகர்ந்தோமோ அதே நிலை நமக்குள்ளும் உருவாகி நாமும் அவனைப் போன்றே நோயாகி வேதனைப்படுவோம்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.