ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2021

சாந்த குணத்திற்கு இருக்கும் வலிமை வேறு எதற்கும் இல்லை

 

கொடும் செயல்கள் நடப்பதையும்... கொடும் தவறு செய்பவர் உணர்வுகளையும்... கேட்டுக் கொண்டே இருந்தால் அதை நுகர்ந்து அறிந்தபின்
1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் நம் உடலுக்குள் அந்தக் கொடூர உணர்வுகள் விளைந்து விடுகிறது.
2.நம்மையும் அந்தத் தவறு செய்யும் நிலைகளுக்கே இயக்கி நம்மையும் தவறுள்ளவர்களாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மனிதர்கள் நாம் விடுபட வேண்டும் என்று செயல்பட்டவர் தான் நம் காலத்தில் வாழ்ந்த மகான் காந்திஜி.

அவர் பெற்ற ஞானத்தை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம். அவருடைய வழிகளை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

1.தீமை இல்லாத உடலாக நாம் உருவாக்க வேண்டும்
2.தீமை செய்யும் எண்ணங்கள் நமக்குள் உருவாக்காதபடி தடுக்க வேண்டும்
3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும்
4.தீமையற்ற நாடாக உருவாக வேண்டும் என்று
5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்று அவரை நாம் நினைவு கொண்டு
6.காந்திஜி வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெறும் நிலையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவருக்குள் பிறக்கச் செய்த ஞானத்தின் நிலைகளை அந்த அருள் உணர்வுகளை நமக்குள்ளும் உருவாக்குவோம்... அதைப் பிறக்கச் செய்வோம்... அருள் ஞானச் செல்வத்தை வளர்ப்போம்.

ஏனென்றால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத நிலையை நாம் பெற வேண்டும். எதை வைத்து..?

சாந்தமான குணத்தை வைத்து...!

கோபத்தால் உடனடியாக ஒன்றைச் செய்து விடலாம்.
1.ஆனால் அதே உணர்வின் வேகம் நம்மை இயக்காது நிறுத்த வேண்டும் என்றால்
2.மன பலம் தேவை... சாந்தம் அவசியம் தேவை.

அத்தகைய சாந்தத்திற்குண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. சாந்தத்தின் வலிமை கொண்டு தான் எதையும் சாதிக்க முடியும். சாந்தத்தால் சாதித்தவர் காந்திஜி. அவருடைய வலிமை எவருக்கும் இல்லை.

எல்லோரும் சொல்வார்கள்...
1.வீர தீரத்துடன் ஒருவரை அழித்து விடலாம்... நான் அழித்து விட்டேன்... அழித்துவிடுவேன்... என்று
2.ஆனால் அது வலிமை அல்ல... கோழைத்தனம் தான்
3.ஒருவரை ஏசிவிடலாம்... இதுவும் கோழைத்தனம் தான்
4.ஒருவருக்குத் தீங்கு செய்யலாம்... இதுவும் கோழைத்தனம் தான்.

மன வலிமை வேண்டும் என்றால் அந்தச் சாந்தம் நமக்கு வேண்டும். வரும் தீமைகளை அறிந்து அந்தத் தீமைகளை அகற்றும் வலிமை பெறுவதே சாந்தம் என்பது.

எத்தகைய தீமையும் தன்னைச் சாராது காந்திஜி அந்தச் சாந்தத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார். காந்திஜி தான் சாந்தத்தால் வலிமை பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நாம் அனைவரும் பெற்றோம் என்றால் நம் குடும்பத்திலும் சரி... தொழிலிலும் சரி... வரும் சிறு குறைகளையும் மாற்றி அமைக்க முடியும்.

அந்த வலிமை கொண்ட சாந்தத்தை வைத்து நம்மை இயக்கும் தீமையான உணர்வின் வலிமையை அடக்க முடியும். குடும்பப் பற்றும் வரும்.

காந்திஜி நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் இதைச் செயல்படுத்தியவர். அவர் மக்களுக்காக அரசியல் நிலைகளை எடுத்தாலும் அரசு என்ற நிலைகளுக்குச் செல்லவில்லை.

அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தார். அந்த அருள் உணர்வுகளைத் தான் அனைவரும் பெற வேண்டும் என்று அரசியலில் புகுத்தினார்... அதை அவர் செயல்படுத்தினார்.

ஆகவே இத்தகைய சாந்தமே மிகவும் வலிமை கொண்டது.
1.சாந்தத்தின் உணர்வு கொண்டே நமக்குள் வரும் தீமையை அடக்கி
2.ஞானத்தின் வழியில் செல்லும் பொழுது நல் ஒழுக்கங்கள் நமக்குள் ஓங்கி வளரும்.
3.தீமைகளை அடக்கி ஆட்சி புரியும் சாந்த நிலைக்கு ஒவ்வொருவரும் வந்தால் இனி வரும் சமுதாயமும் சீர்படும்.