ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2021

உயிரிடமிருந்து (கடவுளிடமிருந்து) தப்பவே முடியாது...!

 

உதாரணமாக விஷத்தைக் குடித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எண்ணம் எல்லாம் போய்விடுகின்றது. நினைவுகள் இழந்து உடலையும் அழித்து விடுகின்றது.

விஷத்தை அருந்தி உடலை விட்டுச் செல்பவர்கள் எங்கே செல்வார்கள்...?
1.அடுத்து பாம்பாகவோ தேளாகவோ தான் பிறப்பார்கள்.
2.வேறு எங்கும் செல்ல முடியாது.

மனித உடலை விட்டுப் பிரிந்த உடனே அடுத்த உடலுக்குள் செல்வார்கள். யார் மீது பற்று இருந்ததோ அந்த உடலுக்குள் செல்லும். அல்லது சாகும் போது யார் நினைவை அதிகமாகக் கொண்டு வருகிறார்களோ அந்த உடலுக்குள் செல்லும்.

அங்கே சென்றவுடன் அந்த உடலிலும் விஷத்தைக் குடிக்க வைத்துச் சாக வைப்பார்கள். கடைசியில் இதிலே விளைந்த அந்த விஷமான உணர்வு உயிரோடு ஒன்றி இணைந்து தான் இருக்கும்.

வேறு எங்கும் தப்ப முடியாது...!

வாழும் போது இங்கே எப்படி இம்சைப்பட்டார்களோ விஷத்தைக் குடித்தபின் சாகும் போது எத்தனை துடிதுடித்தார்களோ உயிர் இழந்த பின்னும் அதே துடிப்பு உயிரான்மாவில் கொண்டே இருக்கும்.

அடுத்த உடலுக்குள் போனவுடன் இதே துடிப்புடன் அவர்களுக்குள்ளும் தற்கொலை செய்யும் உணர்வைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கும்.

1.சிலர் நினைக்கலாம்... வாழ்க்கையில் வந்த கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக
2.நான் தற்கொலை செய்து கொள்கின்றேன்...! உலகத்தை விட்டுப் போகிறேன் என்று...!
3.எங்கே போவது...? அவனிடம் (உயிரிடம்) இருந்து தப்பவே முடியாது.
4.தப்பு பண்ணினால் தப்பு தான்... ரைட் செய்தால் ரைட் தான்...
5.மார்க் போட்டுக் கொண்டே இருப்பான் இந்த உயிர்.

இதைத்தான் ஞானிகள் கீதையிலே சுருக்கமாகச் சொல்லி உள்ளார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று.

அதே போல் பிடிக்கவில்லை என்று... ஒருவரைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று நினைக்கலாம்... கொன்றும் விடலாம். அந்த சுட்டுப் பொசுக்கும் எண்ணம் என்னிடம் வருகின்றது.

1.சுட்டவுடன் அவன் துடித்த உணர்வு எல்லாம் இங்கே வந்து விடுகிறது.
2.அந்த ஆன்மாவும் இங்கே வந்து விடும்.
3.அதே எண்ணத்தை கொண்டு எண்ண எண்ண அவனின் உணர்வு எனக்குள் வந்து
4.என்னைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும்.
5.உயிருடன் ஒன்றி இந்த இம்சையைப் பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டியதிருக்கும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் உடலை விட்டுப் போனால் ஒன்றும் தெரியாது என்று...! ஆனால் இப்பொழுது நல்லது என்று இருக்கும் போது அதைத் தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம்... திருத்தவும் முடியும்.

ஆனால் உடலை விட்டுச் சென்றால் என்ன நடக்கும்...?

1.உயிருடன் ஒன்றிய அந்த இம்சைப் படுத்தும் உணர்வுகள்
2.நீ செய்தாய் அல்லவா... நீ படு...! என்று உயிர் இந்த வேலையைச் செய்யும்.

ஏனென்றால் அவன் (உயிர்) கடவுள். அவனுக்கு அழிவில்லை. நாம் அவனைப் போன்றே நாமும் அழியாத நிலை பெற வேண்டுமென்றால்
1.அருள் ஞானத்தின் தன்மையை சிருஷ்டித்தால் அதை நமக்குக் கொடுப்பான்.
2.ஞானிகள் அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டுப் போனால்
3.நம்மை அழியாத ஒளிச் சரீரமாகப் படைப்பான்...?

ஏனென்றால் அத்தகைய திறன் வாய்ந்தவர்கள் தான் நாம். முழுமுதற் கடவுளாக நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

ஆனால் நாம் மனிதனாகப் பிறந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் தீர்ந்தது... எல்லாம் போய்விடும்.

ஆகையினால் நாம் அனைவரும் அந்தப் பத்தாவது நிலையான கல்கி என்ற “ஓளியாக மாறும் பாதையில்... ஞானிகள் சென்ற பாதையில்...” செல்வோம். மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்குவோம்.