ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2021

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை... அது வரும்... போகும்... அவ்வளவு தான்...!

 

இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட... அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.

1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.

ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.

உன்னால் என்ன செய்ய முடியும்...? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.

காசு தான் அங்கே வேலை செய்யும். நீதி இப்படித்தான் இருக்கின்றது வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும். இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.

வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.

பொருளை இழந்தவர்களோ...
1.இப்படிச் செய்கின்றார்களே... இப்படி ஆகிவிட்டதே...! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.

கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்...! என்று வருகின்றது.

நீ வா...! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்...! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.

1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய... சிவாய நம ஓம்... என்று
2.அழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.

இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

காரணம் யாரும் தவறு செய்யவில்லை... தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.

அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும். குடும்பமும் நலமாக இருக்கும்.

நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்...
1.அது பாட்டுக்கு வரும் போகும்...
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா...! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.

எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ... அதை இழுத்து வளர்க்கிறதோ... அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்ககுள் நாம் செல்கின்றோம்.