ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2021

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா...!

 

உதாரணமாக... வேதனைப்படுகிறார் என்று ஒருவர் மேல் எண்ணம் கொண்டு “அவரைக் காத்திட வேண்டும்...” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

ஆனால் அதை அதிகமாகச் சுவாசித்து நமக்குள் வளர்த்தாலே
1.அந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின் அவருடைய மணமே நமக்குள் வந்து
2.அவர் இறந்தபின் உயிரான்மா நமக்குள் வந்துவிடும்.

எந்த நோயைத் தனக்குள் விளைய வைத்தாரோ... அதே உணர்வு... அதே புலம்பல்... அதே செயல்... என்று நமக்குள்ளும் வந்துவிடும்.

அவருடைய எண்ணமும் நம்முடைய எண்ணமும் ஒன்றான பின் நமக்குள்ளும் அவர் வளர்த்த அதே நஞ்சினை ஊட்டி இங்கிருந்து உணவாக உட்கொண்டு நம்மையும் வீழ்த்தி விட்டு அந்த உயிரான்மா வெளியே சென்று விடும்.

தன் உடலில் எத்தனை வேதனைப்பட்டதோ அடுத்த உடலிலும் எத்தனை வேதனைப்படுத்தியதோ அந்த வேதனை அதிகமான பின் மனிதனுடைய எண்ண அலைகளே வராது... நஞ்சு கொண்ட எண்ணம் தான் அந்த உயிரான்மாவில் இருக்கும்.

அந்த நஞ்சு உயிருடன் சேர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத் தான்
1.”உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்...” என்று நமது சான்றோர்கள் அன்று சொன்னார்கள்
2.இந்த உயிர் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நிழல்
3.அதில் எத்தனை வேதனைப்பட்டதோ அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்

தேள் பாம்பினங்கள் இவை அனைத்தும் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உயிரினங்கள் தான். எந்த இரையைப் பிடித்தாலும் அதற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி கொண்டவைகள் தான்.

நஞ்சின் வலு கொண்டு அது ஊர்ந்து சென்றாலும் வேதனை அறியாத உடலாகத் தான் அவை பெறுகின்றது.

கட்டுவிரியனுக்கு ஒரு விஷம்... நல்ல பாம்பிற்கு ஒரு விஷம்... கண்ணாடி வீரியனுக்கு ஒரு விஷம்...! இப்படித் தரையிலே ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு.

அதைப் போல்
1.மனித உடலில் எத்தனை வேதனைகளை எடுத்துக் கொண்டோமோ
2.எத்தகைய விஷத்தை நமக்குள் ஏற்றுக் கொண்டோமோ
3.அது எல்லாம் நாம் உடலில் கலந்து நம் உணர்வுகளில் கலந்து நோயாகிறது.

நோயின் உணர்வுகள் விளைந்து உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றபின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் விஷத்தின் தன்மையை அங்கே பரப்பி அதையே உணவாக எடுத்து அந்த உடலையும் வீழ்த்திவிடும்.

உதாரணமாக நாம் செய்யும் பலகாரத்தில் சிறிதளவு விஷம் பட்டால் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது. அதிகமான விஷம் பட்டு விட்டால் சாப்பிட்டவர் நினைவையே இழக்கச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் தன்மை மனித உருப் பெறச் செய்யும் நல்ல உணரவுகள் அனைத்தையும் அடக்கிவிடுகிறது.

இத்தகைய உயிரான்மா வெளியே வந்தபின் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.

1.கடைசியில் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உடல்களின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகவோ தேளாகவோ அது வாழும்.
2.மனித வாழ் நாளில் பெற்ற விஷத் தன்மை அங்கே சென்று தான் அடங்கும்.

அந்த உடலிலிருக்கும் போது ஒரு மனிதன் அடித்துக் கொன்றான் என்றால் மீண்டும் மனித உரு பெறும் வாய்ப்பு கிடைக்கும். அது அல்லாது பருந்தோ கோழியோ மற்ற பிராணிகள் உட்கொண்டால் அந்த உடலாகத் தான் பிறக்கும். மனித உடல் பெற முடியாது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.