ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 18, 2026

அருள் கருமணிகளாக… அருள் கிட்னியாக உருவாக… நாம் தியானிப்போம்

அருள் கருமணிகளாக… அருள் கிட்னியாக உருவாக… நாம் தியானிப்போம்


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. நாம் பார்ப்பது அனைத்துமே கருமணிகள் வழி தான் படமாகப் பதிவாகின்றது… கருமணி வழிதான் உணரச் செய்கின்றது.
 
1.கண்கள் உள்ள கருமணிகளில் வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகள் பட்டு
2.அந்தக் கருமணிகளில் அழுக்காகச் சேர்ந்தால் எந்தக் குணம் முன்னணியில் இருக்கின்றதோ அதன் உணர்வைத் தான் கவரும்.
 
ஒரு டம்ளரில் காரத்தைப் போட்டுவிட்டு பின் அதை மற்றொன்றில் கொட்டும் பொழுது அதில் சிறிதளவு தொக்கி இருந்தால் மற்ற பொருளை அதற்குள் ஊற்றினால் அந்த பொருளும் காரமாகும்.
 
இதே போல ஒரு விஷத்தை அதிலே வைத்து இருந்தோம் என்றால் அதை மாற்றிய பின் சுத்தப்படுத்தவில்லை என்றால் தொக்கி உள்ள விஷத்துடன் மற்ற பொருள் கலக்கப்படும் பொழுது அதுவும் விஷத்தன்மையாக மாறும்.
 
இது போன்று கருமணிகளில் படர்ந்துள்ள தீமைகளை நீக்க… அந்த நஞ்சின் தன்மைகளைத் தூய்மையாக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை கருமணிகளில் பாய்ச்சி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியாக நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் கருமணிகள் உருவாக வேண்டும் என்று எண்ணி கருமணிகளில் கண் கருமணிகளுக்கு வீரிய உணர்வை நாம் செலுத்துவோம்.
 
அழுக்கை நாம் துடைப்போம். அருள் உணர்வுகளை பெறத் தகுதி ஆக்குவோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி கருமணிகளில் படரும் பொழுது
2.கண்ணாடிகளில் ஒளி அலைகள் பட்டபின் எப்படி மின் கதிர்கள் எதிர்த்து  வருகின்றதோ
3.இதைப் போல உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படும் பொழுது
4.இந்த உணர்வின் ஒளி அலைகள் உடலுக்குள் உள்ள நரம்பு மண்டலத்தின் வழி எல்லாவற்றிற்கும் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சும்.
 
அதே சமயத்தில் இந்த உணர்வினைப் பதிவாக்கப்படும் பொழுது கருமணியில் உள்ள அழுக்குகள் நீங்கி தெளிவான உணர்வை ஊட்டும் அருள் கருமணிகளாக அந்த உணர்வுகள் பெறும்.
 
சந்தர்ப்பத்தால் நாம் சுவாசித்த விஷமான உணர்வுகள் ஆகாரத்துடன் கலக்கப்பட்டுக் கிட்னிக்குள் வரும் பொழுது அந்த விஷத்தை அது பிரிக்கின்றது… நல்ல ரத்தமாக மாற்றுகின்றது… கசடுகளை நீராக மாற்றுகின்றது… விஷத்தைப் பிரிக்கின்றது.
 
ஆனால் விஷம் அதிகமாகி விட்டால் கிட்னி செயலிழக்கின்றது. உடல் முழுவதும் விஷத்தன்மை பரவும் பொழுது எல்லாம் உறுப்புகளும் பாழாகத் தொடங்குகிறது… செயலற்றதாக மாறுகின்றது.
 
இருதயத்திற்குச் சென்றால் ரத்தம் உறையும் தன்மை வருகின்றது. நுரையீரலுக்குச் சென்றால் சளித் தன்மை உருவாகிறது. குடலுக்குள் சென்றால் சளியின் தன்மை உருவாகி உள் வாதம் என்று உருவாகின்றது.
 
இதிலிருந்தெல்லாம் நாம் நம்மை மீட்டிக்கொள்ள குரு காட்டிய நல்வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிட்னிக்குள் பரவச் செய்து அந்த உறுப்புகளை  உருவாக்கிய அணுக்களுக்கு இந்த அரும்பெரும் சக்தியை வலுவாக்க வேண்டும்.
 
1.விஞ்ஞான உலகில் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கும் நிலைகளில்
2.அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது ரத்தத்தின் வழி கலந்து உறுப்புகளைப் பாழாக்கும் நிலைகள் ஆகின்றது.
3.அதிலிருந்து மீட்டிட குரு அருளைப் பாய்ச்சுகின்றோம்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நுரையீரலை உருவாக்கிய அணுக்களும் கிட்னியை இயக்கிக் கொண்டிருக்கும் விஷத்தை வடிகட்டிக் கொண்டிருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றிக் கொடுத்து
1.நஞ்சைப் பிரிக்கும் சக்தியாக நல்ல உணர்வின் சத்தாக மாற்றும் ரத்தமாக
2.அருள் கிட்னியாக மாற வேண்டும் என்று கண்ணின் நினைவை அங்கே செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.
3.இப்போது கிட்னியில் புதுப்புது உணர்வுகள் தோன்றும் விஷத்தைப் பிரிக்கும் ஆற்றல் வரும்… உற்சாகம் ஊட்டும்.