ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 17, 2019

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?


கோவிலில் சாமிக்குப் பழம் வைத்துப் படைத்து விட்டுப் பின் அதைச் சாப்பிடுகின்றோம். ஆனால் அந்தக் கனிகளை ஏன் படைக்கின்றோம்… என்பதைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

என் சொல்லைக் கேட்போர் அவர்கள் வாழ்வில் அந்தக் கனியைப் போன்ற இனிமை பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்…! என்பதற்கே ஞானிகள் அதைப் படைக்கச் சொன்னார்கள்.

இதை எதற்காக இப்படி எண்ணச் சொல்கிறார்கள்…?

வீட்டில் நம்முடைய பையன் இருப்பான். சொன்னபடி கேட்கவில்லை… என்று அவனைத் திட்டியிருப்போம். அந்தக் கோபமான உணர்வும் வெறுப்பான உணர்வும் நமக்குள் இருக்கும்.

வேலையிலிருந்து வீட்டுக்குச் சாப்பாட்டுக்காக வந்திருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு தான் சந்தோஷமாக இருந்தாலும் கூட
1.நீங்கள் வந்த நேரத்திற்கு… உடனே சாப்பாடு வரவில்லை என்றால்
2.சுர்..ர்ர் என்று உங்களுக்குக் கொஞ்சம் கோபம் வரும்.
3.என்னா… நேரம் ஆகிப் போய்விட்டதா…? அந்த வெறுப்பின் உணர்வு இங்கே வளரும்.

இரண்டு தரம் இப்படிக் காலதாமதமாகினால் போதும். நம்முடைய இந்த நினைவும்… நம்முடைய கடும் சொல்லும் இப்படி வந்தவுடனே அவர்களை இந்த எண்ணமே சீராக வேலை செய்யவிடாமல் தடுக்கும்.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.உன் வேலையே இப்படித்தான்…! என்ற வகையிலே
2.இந்த உணர்வுகளை வளர்த்தவுடனே பகைமையை உண்டாக்கிவிடும்.
3.அப்படி உருவாகும் பகைமையைத் துடைக்கின்றோமா… என்றால் இல்லை…!

தெருவில் சண்டை போட்டவர்களைப் பார்த்திருப்போம். அப்பொழுது சண்டையிடும் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது. மற்ற வேதனைப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். அந்த வேதனைப்படுபவரிடமிருந்து வேதனையான சொல் தான் வரும். அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

இப்படி எத்தனையோ வகையில் பிற தீமைகள் நமக்குள் வருகிறது. அதை எல்லாம் நாம் குறைப்பதே இல்லை. ஆக அந்தத் தீமையின் விளைவுகளை எல்லாம் குறைப்பதற்குத்தான் “கோவிலிலே அந்தப் பொது விதிகளைக் காட்டுகின்றார்கள்…!”

1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவருக்கும் இந்த இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணி
3.அந்த இனிமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து எடுக்கும்படி சொல்கிறார்கள்.

ஏனென்றால் அந்தக் கோவிலுக்கு நம் பிள்ளையும் வருகின்றது… மனைவியும் வருகின்றது… மற்றவர்களும் வருகின்றார்கள். அந்த எல்லோருடைய உணர்வும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.

இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும் என்று அங்கே எண்ணும் பொழுது அவர்கள் மீது இருக்கும் பகைமைகளை எல்லாம் மொத்தமாக மாற்றி விடுகின்றோம்.

பகைமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழும் தன்மை வருகின்றது. நம் சொல்லிலே இனிமையும் பார்வையில் கனிவும் மகிழ்ந்து வாழும் சக்தியையும் நாம் ஒவ்வொருவரும் பெறுகின்றோம். இது தான் ஆதிசங்கரர் காட்டிய உண்மையான அத்வைதம்.

அங்கே அந்த ஆலயத்தில் காட்டியபடி… “இந்தத் தெய்வம் காப்பாற்றும்…!” என்ற நிலையில்
1.தெய்வ குணத்தை நாம் பெறவேண்டும்..
2.அந்தத் தெய்வீக நிலையை நாம் பெறவேண்டும்… என்கிற பொழுது
3.நாம் இதை எல்லாம் எண்ணினோம் என்றால் அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வ நிலையையும் நாம் பெறுகின்றோம்.
4.அப்பொழுது அந்த எண்ணம் நம்மைக் காக்கின்றது,
5.நம் சொல்லைக் கேட்போர் மற்றவர்களையும் அது காப்பாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…! இது தான் நம் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ள கோவிலின் உண்மை நிலைகள்…!