ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2019

நமக்குத் தீமை செய்பவர்களை வைத்து நன்மை பயக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவது எப்படி..?


ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வழி காட்டாமல் இருக்க முடியுமா…? அதே போல் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால் அந்த வேதனை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது தான் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு அவர் ஆகாதவராகப் போய்விட்டால் “அவனுக்கு அப்படித் தான் வேண்டும்…!” என்று சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்குள் அந்த உணர்வு விளைகிறது.

ஆனால் அவரைக் காக்க வேண்டும் என்று நாம் பாசத்துடன் எண்ணினால் இங்கே உடலில் அவருடைய வேதனை வந்துவிடுகிறது.

1.ஆகாதவன் எந்த ரூபத்திலாவது அந்த நோயாளிக்கு அப்படித்தான் வர வேண்டும் என்று ரசிக்கின்றான்.
2.பண்பு கொண்ட மனிதனோ தன் உடலில் பாசத்தால் இழுத்துக் கொள்கிறான்.

காரணம்… நாம் உதவி செய்கிறோம். அந்த உணர்வுகள் இங்கே விளைகிறது. மகராசன்…! “எனக்கு நன்மை செய்தான்…!” என்று நோயாளி எண்ணுகிறான். இந்த இரண்டும் கலக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடிகிறதா..? என்றால் இல்லை.

அந்த உணர்வை விளைய வைத்தால் அவர் (நோயாளி) உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது. எந்த உடலில் அந்த வலு இருக்கிறதோ அந்த உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.உதவி செய்தாலும் உயிர் இந்த மாதிரி இயக்கி நம்மை இந்த நிலைக்கு ஆக்குகிறது
2.இதற்கு என்ன செய்வது…?

உணவு நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் சாப்பிடுகிறோம். ஆனாலும் அந்தச் சாப்பாடு “அளவுக்கு மேலே அதிகமாகிப் போனால்” என்ன செய்யும்…? அதிகான அளவில் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்கிறதா…?

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஆகவே அப்பொழுது அதை ஜீரணிக்கும் சக்தி நமக்கு வேண்டும்.

ஜீரணிக்க வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். அந்தச் சக்தியைப் பெற்றால் அது ஞானம் என்ற ஒரு வித்தாகிறது. மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

எப்படி ஒரு சோப்பைப் போட்டவுடன் எண்ணைச் சத்தை நீக்கி விடுகிறதோ இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகள் கலந்த பின் அவர்கள் எப்படி ஒளியாக மாற்றினார்களோ அதே போல் நமக்குள்ளேயும் ஒளியாக மாற்றும்.

நமக்குள் வலுவான பின்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்.
3.விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
4.அப்பொழுது அவன் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால் அவனும் நல்லவனாகின்றான்.

இதற்கு மாறாக ஒரு தடவை நாம் வெறுத்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வருகிறது, அவன் நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பாகி இரண்டு பேருக்குள்ளும் பகைமையாகிவிடும்.

ஆகவே அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அவன் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது
1.உங்களைப் பார்க்கும் பொழுது முதலில் முறைத்துக் கொண்டிருந்தவன்
2.அவன் மனம் மாற வேண்டும்… மாறவேண்டும்…! என்று எண்ணும் பொழுது
3.இந்த உணர்வு அவனுக்குள் இது சென்று அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.

ஆகவே இந்த மாதிரியான கஷ்டமோ பகைமையையோ துன்பமோ வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்களால் நீங்கள் நலம் பெறுகின்றீர்கள்… உயர்ந்த ஞானிகளின் சக்தியும் பெறுகின்றீர்கள்.

அதற்காகத்தான் “ஆத்ம சுத்தி…” என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியையும் இந்த உபதேச வாயிலாகவே கொடுக்கின்றோம்.

நீங்கள் இதை எண்ணினால் உங்கள் உயிர் அதை எல்லாம் உங்களுக்குள் உருவாக்கும்.