ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2019

தியானம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை தரம் “புருவ மத்தியில்…” நினைக்கின்றீர்கள்…?


உதாரணமாக சிலர் சங்கடமாகப் பேசுகிறார்கள்… அல்லது  அவசியமில்லாததைப் பேசுகிறார்கள்… இதை எல்லாம் சந்தர்ப்பத்தால் பார்க்க நேருகின்றது,

அப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் சாக்கடை நீர் போகின்றது. கல்லைக் கொண்டு எவனோ எறிகின்றான். சாக்கடையில் விழுந்து நம் மீது அது பட்டு விடுகிறது.

அல்லது ஒரு பன்றி சாக்கடைக்குள் இருந்து எழுந்து போகிறது. வாலை வீசிக் கொண்டு போகிறது. நம் மீது அந்த அழுக்கு பட்டுவிடுகிறது…?

நல்ல சட்டை போட்டுச் சுத்தமாகப் போனேனே… இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி விட்டு
1.அடுத்து என்ன செய்கின்றோம்…?
2.அதைத் துடைக்கத்தானே முயற்சிக்கின்றோம்…!

ஐய்யய்யோ.. இப்படிப் பட்டு விட்டதே…! ஐய்யய்யோ…! இப்படிப் பட்டு விட்டதே…!” சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கின்றோமா…? இல்லை. புறத்தில் அழுக்குப் பட்டால் உடனே அதைத் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

அதே போல அகத்திற்குள் வரும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் கண் கொண்டு பார்த்த தீமையான உணர்வு நம் ஆன்மாவிற்குள் (நம் நெஞ்சுப் பகுதிக்கு முன்பாக) வருகின்றது. ஆன்மாவிலிருந்து மூக்க் வழி சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. உயிரிலே பட்டதும் உணர்ச்சிகளாகி இந்த உணர்வுகள் தான் அறியச் செய்கிறது. உடல் முழுவதும் பரப்பச் செய்கிறது.

அப்பொழுதது உங்கள் நினைவை எங்கே கொண்டு வரச் சொல்கிறேன்…?
1.யாம் உபதேசித்து உங்களிடம் பதிவாக்கிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது
2.ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிரிடம் ஒனறிப் புருவ மத்தியில் நினைக்க வேண்டும்
3.கண்ணின் நினைவை உயிருடன் சேர்த்தால் “அகக்கண்…!”
4.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த இடத்தில் அடைக்கப்படும் பொழுது
5.தீமைகள் எதுவுமே புகாதபடி தடுக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று மேலே சொன்ன மாதிரி இடைமறித்து இப்படி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது. இது நிச்சயம்…!

உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதைத் துடைத்துவிட்டு
1.யாரை நாம் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதைக் கலந்து
3.இந்த அருள் உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்
4.நமக்குள் வருவது இப்படி மாற்றம் அடைந்து விடுகிறது.
5.இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வருகின்றோம் நமக்கு முன் உள்ள ஆன்மாவில்…! (இது முக்கியம்)

ஏனென்றால் அவன் நினைவு வந்ததும் எடுத்துக் கொடுப்பது ஆன்மாவாக இருந்தாலும் நாம் இப்படி மாற்றி பழகியவுடன்
1.அவன் நினைவை நமக்கு\ள் இழுக்காதபடி
2.துருவ நட்சத்திரத்தின் நினைவு வந்து நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

இது அரும் பெரும் சக்தி... நாம் அதை எடுத்து…எடுத்து…எடுத்து…! இதைக் கூட்டிப் பழக வேண்டும். நாம் எல்லோருமே இதைப் பழக வேண்டியது மிகவும் அவசியம். (பெரும்பகுதியானவர்கள் புருவ மத்தியை நினைப்பதில்லை – அதை மாற்ற வேண்டும்)