ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2019

தியானத்தைக் கடைப்பிடிப்போர் மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?


ஒருவர் தீமை செய்கிறார் என்ற உணர்வை நுகர்ந்தால் போதும். அவருடைய சிரமங்களை நாம் அறியலாம். ஆனால் சிரமங்களை அறிந்த பின்
1.“நான் கண்டுபிடித்துவிட்டேன்...!” என்று
2.எப்படி எல்லாம் சிரமம் வருகிறது...? என்று ஜோசியத்தைப் பார்த்து விடாதீர்கள்...!

மற்றவர்களுடைய குறைகளோ துன்பங்களோ தெரிந்தது என்றாலும் மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் சிரமத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை மாற்றி எடுத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற்று நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த வாக்கை மட்டும் கொடுங்கள்.

கஷ்டத்தைச் சொல்லி விடாதீர்கள்...!

ஏனென்றால் இந்தத் தியான வழியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அது தெரிய வரும். சொல்லவும் முடியும். ஆனால் அதை நல்லதாக்குவதற்குச் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில பேர் அடுத்தவர்களுடைய குறையை இலேசாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்த பின்...
1.சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்கிறார்.
2.எல்லாமே இவரும் கேட்கிறார்...!
3.கேட்ட பின்பும் இப்படித் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்... என்று எண்ணி அதையே சொல்லிச் சொல்லி
4.அந்தக் குறையை எடுத்து வளர்த்துக் கொள்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறைப் பற்றி அறிய முடிகிறது. ஆனால் அதை அறிந்த பின் அந்தத் தீமையை நீக்கத் தெரியவில்லை.

ஏனென்றால் மற்றவரைப் பற்றி அறியும் ஆற்றல் வரப்போகும் போது குறைகளைக் கேட்கிறோம் என்று அதற்குள் போய்விடுகின்றார்கள்.

பின் இப்படிச் செய்கிறார்கள்... இப்படி இருக்கிறார்கள்...! என்று அவர்களைப் பற்றிக் குறையாகப் பேசி அவர்களுடைய நினைவு வரும் போது இது தான் வளரும்.

யாம் அறியும் சக்தியைக் கொடுத்தாலும் அதை நீக்கும் சக்தியையும் உடனடியாகக் கொடுக்கிறோம். மீட்கும் வல்லமை கொடுத்ததைப் பயன்படுத்தவில்லை என்றால் குறை உணர்வே வளரும். அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவருக்குள் அறியாது புகுந்த அந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அந்தத் திறன் அவர் பெற வேண்டும்.
4.மகரிஷியின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும்.
5.ஒளியின் உணர்வாக வளர வேண்டும் என்று உணர்வை எடுத்தால்
6.நாம் பார்த்து அறிந்து கொண்ட அந்தக் குறையான உணர்வு நமக்குள் மாறும்.

மகரிஷியின் அருள் சக்தியால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பொருள் காணும் சக்தி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை நீக்குவீர்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணினால் அவருடைய குறைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம்.

அவரும் இதே போல் எண்ணினால் அவருடைய குறையான செயல்களும் நிச்சயம் மாறும்.

உலகோதய ஆசை என்றால் என்ன...?


மனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.

“மகிழ்ச்சியாக வாழ வேண்டும்...!” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

நாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.  

இதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.

கேட்டால் நாம் என்ன சொல்வோம்...?

என் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ
2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ
3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ
4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்
5.அடுத்து ஒரு சிக்கல்... அதற்கு அடுத்து ஒரு சிக்கல்...! என்று வந்து கொண்டே தான் இருக்கும்.

அவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப... வளர்த்த நிலைக்கொப்ப... சந்திக்கும் நிலைக்கொப்ப... ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது...!

வீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,

அது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ... கணவன் மனைவி என்றோ... குழந்தைகள் என்றோ... நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ... தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ...! எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.

மேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.

அமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்
1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து
2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்...! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர
1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்
2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது...! என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.

ஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.

தனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.

உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது...? என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.
1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்
2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.

ஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும்  வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.

அதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்... அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்...!

March 27, 2019

உலக மக்களுக்குச் செய்யும் சேவையாக போகமாமகரிஷி செய்த வைராக்கியமான செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


பேரண்ட பூமியின் சுழல் ஓட்டச் சக்தியில் (எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள்) தன்னுடைய ஈர்ப்பின் தொடருக்கு சுவாசத்தின் வலுவால் மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள சிருஷ்டியின் தத்துவமாக “ஈஸ்வர அனுபூதி லீலையில்... உயிர் அணுக்கள் தோன்றுகின்றது...!”

உயிரணுக்கள் தோன்றிய பின் அந்தந்தச் சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் அது சந்தர்ப்பத்தால் உடல் பெற்ற நிலையில் பரிணாம வளர்ச்சியின் எண்ணம் கொண்டு பல கோடிப் பிறப்புகளாக வளர்கின்றது.

அந்த வளர்ச்சியின் முதிர்வில் பேரானந்த சக்தியில் கலந்துவிடும் அறிவாற்றல் பெற்றிட்ட மனித குல வாழ்வில் சத்சங்கம் என்ற (உயர்ந்த படைப்பு) சரீரம் என்ற பிண்டத்தில்
1.தன்னைத் தான் உணர்தலும்
2.உணர்ந்த அந்த வழியில் தன்னை அறிந்திடும் ஆற்றலில்
3.அண்டத்தையும் (சகலத்தையும்) அறிய முயலும் செயலில் இயற்கையுடன் ஒன்றிட்டு
4.அந்த இயற்கையின் சகல சக்திகளையும் தன்னுள் ஈர்த்தே
5.தன்னையே பிரம்ம சக்தி ஸ்வரூபமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு
6.மூல சக்தியின் கருப்பொருளாகவே தான் உருவாகின்றது.
(மனிதப் பிறப்பிற்குத்தான் இந்தத் தகுதி உண்டு)

அவ்வாறு வளர்ந்ததன் பொருளே “ஈஸ்வர சிருஷ்டியின் ஆதி சக்தி மூல வலு...” தன்னை வலுவாக ஆக்கிக் கொள்ள நடைபெறும் செயலாகும்.

இந்த அத்தனை செயல் நிகழ்வுகளிலும் ஆறறிவால் ஏழாவது நிலையாக... “ஒளியாகும் அறிவாற்றல் பெற்ற நிலையில்...” படைப்பின் படைப்பில் செயல்படும் சகல கோடி ஜீவியர்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சக்தியை வலுக்கூட்டும் சூட்சமம் அறிந்துணர்ந்து தெளிந்திட்ட பக்குவமே “அனுபவ விசேஷம்...!” ஆகும்

இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.

அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் “இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து...” அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் விஷ வைத்திய சாஸ்திரம் பிறந்ததன் காரணம்.

தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் மகான்கள் இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட அளித்த வைத்திய பொக்கிஷங்களை எல்லாம் மறை பொருளாக்கப்பட்டதன் காரணம் என்ன என்றால் நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்...!”

போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.

அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!

அன்று பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.

அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது...” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்...!”

(மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை)

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…!  

“கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கேள்...!” என்று வாசுகி கொங்கணரிடம் சொன்னதன் உட் பொருள் என்ன..?

ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக அவ்வாறு செய்வார்கள்.

அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப் பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப் பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.

அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்...? எந்த ஒரு அரசனையும் அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்...!” என்று உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.

உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.

திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும் உணர்வுகள் தனக்குள் எது... என்ன...? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.

அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற அதைப் பாடுகின்றாள்.

யார்...? வாசுகி...!

துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும். ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு வறுமை.

சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.

அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.

ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன் பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்... வையகமெல்லாம் பரவியது...!” என்று சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.

ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ள வில்லை.

இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார். அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.

தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி விடுவான்.

ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி...!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே...!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.

அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்...! அதனால் நேரமாகிப் போய்விட்டது.

வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா...! என்கிறது வாசுகி.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது...? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்...! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்...!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்...? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது...? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது. அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது...”

அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது...?

ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு இங்கே இருக்கிறது.

அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்தைதை வெளிப்படுத்துகின்றேன். நான் மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்... உணரலாம்... நுகரலாம்...! உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.

March 26, 2019

ஜாதகத்தில் உள்ள உண்மையின் நிலைகள்


ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

அவன் பார்த்து விட்டு குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை.  இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று அந்த ஜாதகம் பார்ப்பவன் கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.

மிருகங்கள் எப்படி தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்...!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.

ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.

குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

அடுத்தாற்போல என்ன செய்கிறோம்...?

“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே...!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா...! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.

நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.

ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்...!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.

அதே சமயத்தில்
1.ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் அதை எல்லாம் நீக்கிடும்  வல்லமை பெற்றவனாக அந்தக் குழந்தை பிறந்து வருவான்.

சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்...?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.

ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில்  ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.

ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்...? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.

இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும் மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள். மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று  குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.

கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை...!

வேல் விண்ணிலே பறந்தது...! என்று காட்டியதற்குள் மறைந்துள்ள பொருள் என்ன...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.  

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்... என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்...!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்...! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல...!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்... சுந்தரம்... என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்... சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக... ஜோதியின் சக்தியே பிரகாசமாக... பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக... “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்...!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போக நாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது... மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்...!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா...? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…!  நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி...!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்... சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி...!”

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு... போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய...” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டி சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.

ஆணவம்.. மோகம்... உலக மயக்கம் என்னும் மாயை...! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது...! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்... மோக குணத்தை வென்றிட்டார்... உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்... என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப் பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்...!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்...! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி...!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது...! என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்...!” என்ற பொருளை உணரலாம.