ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2014

நம் ஆன்மாவில் சேரும் அழுக்கைப் பற்றி தெரிந்திருக்கின்றோமா?

1. உடல் அழுக்கைப் போக்குகின்றோம், ஆன்மாவில் வரும் அழுக்கைப் போக்குகின்றோமா?
நம் வாழ்க்கையில் கையில் அழுக்குப்படுகிறது, கழுவிவிடுகிறோம். துணியில் அழுக்குப்படுகிறது, துவைத்துவிடுகிறோம். உடலில் அழுக்குப்படுகிறது, குளித்துவிடுகிறோம்

இதே மாதிரி நம் ஆன்மாவிலும் அழுக்குப்படுகின்றது.

தினசரி காலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை பிறர் படும் வேதனைகளையும், எத்தனையோ கஷ்டப்படுவோர் நிலைகளையும் தீமை செய்வோரின் நிலைகளையும் நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நாம் பார்த்து, கேட்டு உணர வேண்டியது இருக்கின்றது.

இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவில் படர்கின்றது. இதைத் துடைக்கவில்லை என்றால், உள்ளே போனவுடனே இந்த உணர்வுகள் மாறி நம் உறுப்புளை எப்படி எப்படியோ மாற்றிவிடுகிறது.

அப்பொழுது இந்த ஆன்மாவை முதலில் துடைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
இந்த ஆன்மாவில் எதைச் சேர்க்க வேண்டும்,
எதை நீக்க வேண்டும்?

இப்பொழுது சூரியன் என்ன செய்கின்றது? இருபத்தேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரும் அனைத்து விஷங்களையும் எடுத்து பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது. சூரியன் அதைத் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கின்றது.

பக்கத்தில் வந்தபின், தன் உடலில் உள்ள பாதரசத்தால் மோதி விஷத்தைப் பிரித்துவிட்டு நலல உணவைத் தன் ஆகாரமாக எடுக்கின்றது. அதை மீண்டும் பாதரசமாக மாற்றிக் கொள்கின்றது.

இந்த சூரியனைப் போன்றுதான் நமது உயிர் ஆறாவது அறிவு. இதை வைத்துத்தான் நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். இந்த வாழ்க்கையில் நாம் எப்படி நடக்கின்றோம்? எப்படி நடக்க வேண்டும்? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், கையில் அழுக்குப்பட்டால் துடைத்துவிடுகின்றோம். எப்படி குளிக்கின்றோமோ, துவைக்கின்றோமோ அதைப் போன்று நம் ஆன்மாவில் படும் அழுக்கை அவ்வப்பொழுது துடைத்துப் பழக வேண்டும். இதைத்தான் வாழ்க்கையே தியானம் என்பது.

ஆக, மற்றவர்கள் வேதனைப்படும் நிலையைப் பார்த்து, “பாவம் இப்படி இருக்கின்றார்கள்” என்று எண்ணினோம் என்றால் நமக்குள் வேதனையை வளர்த்துக் கொள்கின்றோம். ஆனால், அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை எப்படிச் சொல்ல வேண்டும்?
2. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் சேர்த்து, பின் மற்றவர்களுக்கும் பாய்ச்ச வேண்டும்
அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று
இதை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, வேதனைப்படுபவர்கள் யாரை நாம் பார்த்தோமோ, அவர்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அவர்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படரவேண்டும்.
அவர்கள் வேதனையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணி
அவர்களுக்கு அந்த உணர்வின் ஆற்றலைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சினால், அவர்களின் வேதனையான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
அதை அவர்கள் நுகர்ந்தால்
வேதனையிலிருந்து விடுபடும் சக்தி அவர்களுக்கும் கிடைக்கும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரம் எப்படி சர்வ தீமைகளையும், நஞ்சுகளையும் ஒளியாக மாற்றுகின்றதோ அந்தத் திறன் நாமும் பெறுகின்றோம்.
உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.
அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.


ஆன்மா நலம் ஆனால்எண்ணம் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், சொல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், செயல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், உடல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால்உயிரான்மா நலமாகும் 
ஆத்மசுத்தி செய்வோமானால், ஆன்மா நலமாகும்.