ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 15, 2014

குறை கூறும் உணர்வுகள் நமக்குள் இயக்குவதைத் தடுக்கும் வழி

1. நம்மைப் பற்றி யாராவது குறை கூறுவதைக் கேட்டால், உடனே நம் மனம் மங்கிவிடுகின்றது
யாராவது நம்மைப் பற்றிக் குறை கூறுவதை நமது காதால் கேட்க நேர்ந்தால், நமது மனம் மங்கிவிடுகின்றது. நமது மனம் மங்கிவிட்டால், நாம் தெளிவான நிலைகள் பெறுவது கடினம்.

ஆகவேநமது மனம் மங்காது இருக்க வேண்டுமென்றால்  என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய். ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, ங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று எண்ணி ஏங்கி
நம்முள் வந்த நஞ்சான உணர்வுகளை
துடைத்துப் பழகுதல் வேண்டும்.

நம்மைப் பற்றிக் குறை கூறியவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். அவர் அறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபட வேண்டும் என்று நாம் எண்ணி ஏங்கி  தியானிக்க வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தி.

அவ்வாறு செய்யும்போது, அவருடைய குறையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை. இதனால், நம்மிடத்திலுள்ள நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாகின்றது.

மாறாக, “இப்படி நம்மை குறை கூறுகின்றாரே” என்ற உணர்வுகளை நம்முள் வளர்த்தால்நாளடைவில்
நம்முடைய நல்ல உணர்வு,
நம்மைக் குறை கூறிய உணர்வுக்குத் தக்கவாறு மாற்றிவிடும்.
குறை உள்ளவராகவும், குற்றங்கள் செய்பவராகவும்,
அடிக்கடி சலிப்பு அடைபவராகவும்,
சங்கடப்படுபவராகவும் நம்மை மாற்றிவிடும்.

ஆகையினால், பிறர் நம்மை குறை கூறிய, குற்றங்கள் சொல்லிய உணர்வுகள், நமக்குள் வந்து செயலாவதைத் தடைப்படுத்துதல்  வேண்டும்.
2. நம்மைப் பற்றி குறையாக, குற்றமாகக் கூறிய உணர்வுகள் நம்மை இயக்கவிடாமல் தடைப்படுத்தும் வழி
இதற்குத் தான், ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

பிறர் குறை உணர்வுகளை, நமது கண் கவர்கின்றது. அதன் வழிதான் (கண்கள் வழி), நாம் கவர்ந்த உணர்வுகள் நமது நரம்பு மண்டலங்களுக்குச் செல்கின்றது. நமது உடலிலுள்ள உறுப்புகளிலெல்லாம் இணைக்கின்றது.

அப்போது அந்த உணர்வுகள் இழுக்கப்பட்டு நம் முன்னால் வரும்பொழுது, நம்முள் குறை உணர்வுகளே வலுப் பெறுகின்றது. அப்போது, நுகர்ந்த குறை உணர்வின் இயக்கத்திற்கு நம்முடைய நிலை சென்றுவிடுகின்றது.

அதாவது, நுகர்ந்த குறை உணர்வுதான் நமது உடலை இயக்க ஆரம்பிக்கின்றது.

ஆக, பிறிதொருவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று, அவர் வழியில் நாம் செயல்படும் நிலை உருவாகின்றது. ஏனென்றால், அது வாலி, வலிமையானது. நம்முடைய நல்ல குணங்களை இயக்கவிடாது, தடைப்படுத்துகின்றது. ஆக, இத்தகைய தீமைகளிலிருந்து விடுபடுவது எங்ஙனம்?

ஒருவரின் குறை உணர்வின் செயலை, நாம் நமது கண்ணால் தான் பார்க்கின்றோம். நமது கண் கருவிழியில் மோதியபின் தான், அதன் உணர்ச்சிகளை உடலினுள் அனுப்புகின்றது.

ஆகவே, நமது கண் கருமணியில் குறை உணர்வின் அழுக்கின் தன்மை இருக்கும். அது சமயத்தில், நாம் நமது உயிரான ஈஸ்வரனை ஈஸ்வரா.. என்று எண்ணி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெறவேண்டும் என்று கருமணியில் நாம் நினைக்கும் பொழுது,
நம்மைக் குறை கூறிய உணர்வுகள்,
கண்ணின் கருமணியில் இல்லாதபடி
துடைக்கப்படுகின்றது, சுத்தப்படுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா”, என்ற வலுவைச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்து விட்டால்
நாம் கண்ணால் பார்த்த குறையின் உணர்வுகள்
நமது உடல் உறுப்புகளை இயக்குவதை நிறுத்தி
குறையின் உணர்வுகளை 
நம்முள் இழுக்காதபடி தடைப்படுத்துகின்றோம். 
நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

பின், நம்மை குறை கூறிய நபரை எண்ணி,
அவர் தன்னையறியாது சேர்த்த இருளிலிருந்து விடுபடவேண்டும்.
அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
பிறருக்கு நன்மை செய்யும் உணர்வு அவரிடத்தில் தோன்றவேண்டும்.
அவர் பண்பும், பரிவும் பெறக்கூடிய அருள் உணர்வு பெறவெண்டும்
என்று நாம் எண்ணினால், இதன் உணர்வுகள்
நம்முள் நல் உணர்வுகளை இயக்கும் சக்தி பெறுகின்றது.