ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2020

மனிதனால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளின் பாதுகாப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்
4.இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே.

அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.

எந்நிலையில் என்று கேட்பீர்கள்...?

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.

“இன்று வெடிக்கப் போகின்றேன்... நாளை வெடிப்பேன்...!” என்று பயமுறுத்தலுடன் பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை... மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில் அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில் அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே...? என்ற வினாவும் எழலாம்.

1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா.

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

July 27, 2020

அரச மரத்தைப் போல் நம் நினைவுகளை விண்ணிலே ஊடுருவிப் பாய்ச்சி மெய் ஞானிகளின் உணர்வைக் கவர்தல் வேண்டும்


நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றதை விநாயகன் என்றும் இந்த வினையெல்லாம் தீர்க்கும் தகுதி பெறுகின்றான் என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்.

வினையெல்லாம் தீர்ப்பவனே விநாயகனே... ஆதிமுதல்வனே...! என்றும் சொல்கிறோம். ஆதிமுதல்வன் என்றால் யார்...?

நம்முடைய இந்த மனித உடலை உருவாக்கிக் கொண்டு வருவதற்கு ஆதிமுதல்வனாக இருந்தது நமது உயிர். அதைத் தான் ஆதிமுதல்வன் என்றார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்...? விநாயகர் கடவுளுக்கு அப்பாற்பட்டவர். அவர்தான் முதல்...! என்ற நிலைகளை நாம் எண்ணுகின்றோம்.

நம் உடலுக்குள் நின்று இந்த மனிதனாக உருவாக்கிய இந்த நிலைகளை “ஆதிமுதல்வன் நம் உயிர் தான்...!” என்று தெளிவுற அன்று உணர்த்தியுள்ளார்கள்.

விநாயகருக்கு புல்லைக் காட்டித் தழை தாம்புகளை வைத்து அதை அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஸ்தல விருட்சமாக  வைத்து இதை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

அரசு என்ன செய்கின்றது...? ஒரு குருவி அந்த அரசம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அது இட்ட மலம் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால் அதற்குள் அந்த வித்து நீரேயற்ற இடத்தில் வளரத் தொடங்குகிறது.

இப்பொழுது நாமெல்லாம் ஒரு வீட்டில் குடியிருந்தோமென்றால் அங்கே நாம் நீரைச் சிந்துவோம். அதிலிருந்து வரக்கூடிய வாசனைகள் படும். இது அதனால் முளைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் குருவிகள் இட்ட அந்த மலத்தின் தன்மை கொண்டு அரச வித்து ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மேல் பட்டுவிட்டால்...
1.அந்த அரசு காற்றிலே இருக்கக்கூடிய வீரிய சக்தியும்
2.தன் இனமான சக்தியையும் எடுத்து ஓங்கி வளர்ந்து
3.தன் விழுதை நீர் இருக்கும் இடத்தில் பாய்ச்சித் தனக்கு வேண்டியதை நுகர்ந்து எடுத்துக் கொள்கின்றது.

அதனின் விழுதுகளில் உள்ளது போல இலைகளில் உள்ள நரம்பியல்கள் காற்றில் இருக்கும் ஈரப்பதைத் தனக்குள் அது உறிஞ்சி தன் உணர்வின் தன்மையை வலுப் பெறும் தன்மையை அது அடைகின்றது.

அன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தங்கள் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி இன்றும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

விண்வெளியிலே சப்தரிஷி மண்டலங்களாக இருக்கிறதென்றால் அங்கே எல்லை இல்லை. ஆனால் தனித்து நிற்கின்றது. நீரோ குளமோ அங்கே கிடையாது.

இருந்தாலும்...
1.மனிதனாக இருந்த போது தன் உடலில் உணர்வின் தன்மை ஒளியான வித்தாக மாற்றி
2.விண் சென்றபின் பேரண்டத்தில் வரும் விஷங்களை எல்லாம் முறித்து
3.உணர்வின் தன்மையை தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் நிலையான சரீரமாக
4.எந்த உழைப்பும் இல்லாமல்... தூங்காது...
5.தூங்காமல் தூங்குவது எக்காலம் என்பது போல ஓங்கி வளர்ந்து
6.இன்றும் நிலையான சரீரம் பெற்றுள்ளார்கள் என்ற நிலையைக் காட்டி
7.அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத்தான் அரசையும் வேம்பையும் வைத்துக் காட்டுகின்றார்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்தாலும் இடைப்பட்ட நேரங்களில் கசப்பின் தன்மையான உணர்வுகள் நாம் நுகர நேருகின்றது. நம்மை மேலே எழுந்திரிக்காமல் செய்கின்றது.

அதே சமயம் நாம் விண்ணை நோக்கி அண்டத்திலே இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்து... கசப்பான நிலைகளை இங்கே சிறுக்கப்பட்டு அந்தக் கசப்பின் தன்மையை நீக்கி நல் உணர்வின் தன்மை ஓங்கி வளரும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டுமென்பதற்காக அங்கே நினைவுப்படுத்தி ஸ்தல விருட்சமாக வேம்பையும் அரசையும் அங்கே வைத்தார்கள்.

ஆனால் இந்த வேம்பையும் அரசையும் நாம் வேடிக்கையாகத் தான் சுற்றி வருகின்றோமோ தவிர அதில் உணர்த்தப்ப்ட்ட உயர்ந்த சக்தியை நுகர்வோர் யாரும் இல்லை. அதை நினைப்பாரும் யாருமில்லை.

சுற்றி வந்தால்... விநாயகன் நமக்கு ஓடி ஓடி வந்து செய்வான் என்றும்... அவன் எங்கோ இருக்கின்றான்...! நமக்கு எப்படியோ வந்து செய்கின்றான் என்ற நிலையிலும் தான் நாம் இருக்கின்றோமே தவிர அந்த உண்மையின் தன்மையை நாம் உணர முடியல்லை.

இன்று இந்த உண்மையைச் சொன்னாலும் நம் உடலுக்குள் பதிவு செய்த இந்த உணர்வுகளோ எதிர்க்கும் நிலையாக வருகிறது.

இப்பொழுது யாம் (ஞானகுரு) இதைத் தெளிவுபடுத்தினாலும் கூட...
1.என்ன...? அன்றைக்கு எழுதி வைத்தவர்கள் எல்லாம் முட்டாளா..?
2.இவர் மட்டும் புதிதாகச் செய்கின்றார் என்றால் அது எப்படி...? என்ற நிலையில்
3.நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்டது அது வெறுக்கின்றது.

ஒரு கசப்பைச் சாப்பிட்ட பின் நாம் இனிப்பை கொடுத்தால் எப்படி இருக்கும்...! அந்த உணர்வின் தன்மை இனிப்பை ஏற்றுக் கொள்ளாது.

அதைப் போல இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் இயக்கங்கள் அந்த உணர்வின் வழிகளைத்தான்... “நாம் எண்ணியதை... இந்த உணர்வின் தன்மை... சேர்த்த மணத்தின் உணர்வின் எண்ணமாக...” நமக்குள் அது இயக்கிக் கொண்டிருக்கின்றது.

எந்த உணர்வு ஆனாலும் நம் உயிர் அந்த மணத்தை நுகர்ந்தால் அதை எண்ணமாக மாற்றுகின்றது.
1.ஆனால் அதற்குள் மறைந்த இந்த உணர்வின் சக்தி
2,இந்த உடலைத் தனக்குள் அதனின் இயக்கமாகச் செயல்படுகின்றது. 

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் காட்டிய வழியில் செல்வதே நல்லது.

ஜெப நிலையின் (தியானம்) முக்கியத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது...?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள் இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு...” “வைரத்தை வைரத்தால் அறு...” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்...!

உலக சக்தியும்... சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கிவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால் “அனைத்து சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்...!”

இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான் வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

July 26, 2020

இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்


மகரிஷிகளின் அருள் ஒளியான சக்தியும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து படர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதனின் பேரருளும் பேரொளியும் உங்கள் ஈர்ப்புக்குள் நீங்கள் ஈர்க்கப்படும்பொழுது இங்கே அந்த ஒளி அலைகள் பரவுகின்றது.

அவர்கள் பிறவா நிலைகள் பெற்றவர்கள்…! ஒரு நெருப்பிற்குள் போய் ஒரு விட்டில் பூச்சி விழுந்தால் அது என்ன செய்யும்…? அது சுட்டுப் பொசுக்கிவிடும்.

இதைப் போன்று சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள் நாம்
1.அந்த ஞானியரினுடைய அருள் சக்தியை நேரடியாகப் பெற முடியாது.
2.காரணம்… அவர்கள் எல்லோரும் இந்த பூமியினுடைய பிடிப்பை அறுத்து விட்டுச் சென்றவர்கள்.

பூமியின் பிடிப்பை விட்டுச் சென்ற அந்த ஞானியரின் உயர்ந்த உணர்வலைகளைத் தூண்டச் செய்து… உங்களுக்குள் அதைச் செருகேற்றி…
1.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தச் சக்தியை
2.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து இழுக்கப்படும் பொழுது
3/சிறு துளிகளாகச் சேர்ந்து பெரும் மழை போல அது அப்படியே படர்ந்து வருகின்றது.

அதன் மூலம் இப்பொழுது ஒவ்வொருத்தருடைய உடலுக்குள்ளும் சேர்க்கச் செய்வதுதான் முதலில் இருந்த தியானம். தியானம் இருந்த பிற்பாடு நம் முதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையரின் உடலின் உணர்வு கொண்ட சரீரம்தான் நாம். அந்த மகரிஷிகளின் சக்திகளைச் செருகேற்றிக் கொண்ட பின் நம் மூதாதையரின் உயிராத்மாக்களை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் உயிராத்மா சூட்சும நிலையில் உள்ளது. நம் உடல் எந்திரம் போன்று உள்ளது. நாம் எந்திரமாக உந்தித் தள்ளும் போது மூதாதையரின் உயிராத்மாக்களை விண்ணிற்கே செலுத்தி விடுகின்றோம்.

இப்படி நாம் செலுத்திப் பழகினால் அவர்களும் பிறவா நிலைகள் பெறுகின்றனர். அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் நம் உணர்வின் துணை கொண்டு அவர்களுடைய சந்தர்ப்பம் விண் செல்ல நேருகின்றது.

மனித வாழ்க்கையில் ஒன்றும் அறியாத மூடர்களாக இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் ஞானியாகின்றார்கள்.

இதைப்போலத்தான் நானும் (ஞானகுரு) ஒரு படிப்பறிவு இல்லாதவன்தான். சந்தர்ப்பம் என் மனைவியினுடைய உடல் நிலை சரியில்லாத போது என் குருவின் (ஈஸ்வரபட்டர்) சந்தர்ப்பம் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரால் மனைவி எழுந்து அது நடமாடும் நிலையும் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு…
1.குருவின் ஈர்ப்பிலே நான் சிக்கப்பட்டு
2.அவர் உணர்த்திய உணர்வின் ஆற்றல்தான் சந்தர்ப்பம் நான் இதைப் பெற முடிந்தது…
3.இதை எல்லாம் என்னால் பேசவும் முடிகின்றது.
4.ஏட்டுச் சுவடிகளிலோ மற்றவைகளைக் கற்றுணர்ந்தோ நான் இதைப் பெறவில்லை…. நான் அதைப் பேசவும் இல்லை.

குரு காட்டிய அருள்வழி கொண்டு உணர்த்திய அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அனுபவரீதியாகக் கண்டுணர்ந்து என் உடலில் அனுபவித்த இந்த உண்மையின் நிலைகள் கொண்டுதான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் சக்தி பெற்றவர்கள் அனைவருமே நாம் முதாதையர்களை முதலிலே விண் செலுத்தினால் நாமும் அங்கே செல்கின்றோம்.

இதைப்போன்ற வலுவை நாம் ஏற்றிக் கொண்ட பின் நமக்குள் எத்தகைய துன்பம் நேரினும்… எத்தகைய துன்பம் கஷ்டம் வந்தாலும்… அதை நாம் மறக்க வேண்டும்.

அதை மறக்கச் செய்வதற்கு ஈஸ்வரா…! என்று உயிரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகும்போது… அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய தகுதியினைப் பெறுகின்றீர்கள்.

அத்தகைய தகுதி பெறத்தான் இந்தத் தியானம்…!

இதே மாதிரி நாம் ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைவை மேலே விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இழுத்து நம் உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வை வலுப்பெறச் செய்தால் இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்கள் நீங்குகின்றன... இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் எல்லாம் நீங்குகின்றது.

பின் நாம் எதையெல்லாம் நினைவில் வைத்தோமோ… கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் அங்கே…
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது அங்கே செல்கின்றோம்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் என்று கண்டு ஆண்டவா ஆண்டவா…! என்று வணங்கிட வேண்டும் - ஈஸ்வரபட்டர்


உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே...! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்...? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் அனைத்துமே ஆவி தான் என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா.

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!