ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2020

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் - ஈஸ்வரபட்டர்


ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய முறை


ஒவ்வொரு நிலையிலும்…. ஒவ்வொரு ரூபத்திலும்…
1.குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த ஏட்டை (பதிவுகளை) நினைவு கொள்ளும் போது
2.எனக்குள் (ஞானகுரு) உணர்த்தி உணர்வின் தன்மையை அவரே இந்த உடலை வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

அவர் பதிவு செய்த நாடாக்களை (RECORD) நான் எண்ணும் போது… “அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு…”
1.நீங்கள் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உண்ர்வைத்தான் நானும் (ஞானகுரு) செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னைச் செய்விக்கின்றது.

ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலிலே பெறச் செய்வோம்.

நாம் பார்க்கும் அனைவரின் உடலையும் மகிழச் செய்வோம். மகரிஷிகளின் அருள் உணர்வுடனே இந்த வாழ்க்கையை ஒன்றி வாழ்வோம்.

என்றும் பேரானந்த நிலைகள் பெற்ற பெரும் நிலையுடன் ஒன்றியே வாழ்ந்திடும் நிலையை நாம் உருவாக்குவோம். குருவுடன் ஒன்றி வாழும் நிலையைப் பெறுவோம்.

உங்களுக்குள் குரு உணர்த்திய பேருண்மைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலமும் இல்லை… நேரமும் இல்லை.

குருநாதர் எமக்குக் கொடுத்துப் பதிவு செய்த நிலைகள் எண்ணிலடங்காதது. இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
1.அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த இந்த நிலையை
2.எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு
3.அவ்வப்போது அந்தத் துணுக்குகளை எடுத்து அந்த நினைவைக் கூட்டும் போது
4.உணர்வு ஒளியாகி… உணர்வின் தன்மைகள் எண்ணமாகி… அதனின் நிலைகளில் தான் செயல்படுகின்றேன்.

August 2, 2020

மனம் விரும்பி உணவாக உட்கொண்டால்தான் உங்கள் வயிறும் உடலும் நலம் பெறும்… இல்லை என்றால் நோய் தான்…!


சில இடங்களில் வற்புறுத்தி சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால் கௌரவத்திற்காக... இல்லை நான் இப்பொழுதுதான் சாப்பிட்டு வந்தேன்…! என்று தலையைச் சொறிவார்கள்.

பசியும் இருக்கும்...! சாப்பிடுங்கள்…! என்று சொன்னால் எப்படி சாப்பிடுவது…? என்று சொல்வார்கள். ஆனால் அந்தச் சலிப்பான நிலைகள் கொண்டு இருப்பார்கள்.

இல்லை இல்லை…! எங்கள் வீட்டில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்…!  என்று சொன்ன பின் சரி உங்களுக்காகச் சாப்பிடுகின்றேன் என்று உட்கார்வோம்.

இந்தச் சலிப்பும் சோர்வும் அடைந்த பின்.. அந்த சலிப்பு என்பது ஒரு புளிப்பின் தன்மையை உண்டாக்கும்.

இந்தப் புளிப்பு கலந்த பின் சாப்பாடு போட்டவுடனே கொஞ்சம் தான் சாப்பிட்டிருப்பார்கள். அதற்கு அப்புறம் உள்ளுக்கே விடாது. ஏனென்றால் அப்போது அந்தப் புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடுகின்றது.

1.கொஞ்ச நேரத்தில் பார்த்தவுடனே நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
2.அந்த உணர்வில் புளிப்பின் சக்தி வரப்படும்போது… நாம் வேறு எதை விழுங்கினாலும் அந்த புளிப்பு என்ன செய்யும்…?
3.அன்னக் குழாய்களில் அதிலுள்ள அமிலத்தைக் கரைத்துவிடும்.
4.பின் நமக்குள் அது உராயும் போது நெஞ்சு எரியும்.

நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் இந்த அமிலங்களை உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று நாம் நமது எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது. நமது உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

நாம் அடுத்து உணவுகள் உட்கொள்ளும்போது நம்மை யார் சாப்பிடச் சொன்னார்களோ... அவர்களை எண்ணி… “நான் வேண்டாம் என்று சொன்னேன் என்னை இப்படியெல்லாம் செய்துவிட்டார்கள்…. என் நெஞ்சைக் கரிக்கின்றது…!” என்று சாப்பாடு போட்டதற்காக அவர் மேலும் வெறுப்படைவார்கள்.

இதைப்போல பெண்களும் பெரும்பகுதியான பேர் இருப்பார்கள்.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று உடனே முதலில் கொஞ்சம் சாதம் போட்டிருப்பார்கள்.. இரண்டாவது போட்டவுடன் “லபக்….” என்று தள்ளுவார்கள்,

தள்ளியவுடன் பார்த்தால்… பெரிய பாறையையே தூக்கிப் போட்ட மாதிரி இருக்கும். ஐயோ இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற உணர்வுகள் பட்டபின் அவர்கள் உடல்கள் எப்படி இருக்கும்…? என்று நினைக்கின்றீர்கள்

இதைச் சாப்பிட முடியாது. உடனே சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும். ஆனால் அவர்கள் சிரிப்பார்கள்.

இந்தச் சந்தர்ப்பம் அவர்கள் மேல் வெறுப்பின் அணுக்கள் வளர்ந்த பின் இந்த வெறுப்பின் அணுக்கள் வளர்ந்து அந்த ஆகாரத்தைப் போட்டவர்களை நினைத்தவுடன் அந்த வீட்டிற்குப் போனவுடனே “இப்படித் தான் செய்வார்கள்” என்ற இந்த எண்ணங்கள் வரும்.

இந்த வெறுப்பின் அணுக்களை நமக்குள் விளையப்படும் போது நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்துவிடும். அந்த வெறுப்பின் நிலை கொண்டு இப்படி செய்துவிட்டார் என்று பார்க்கப்படும் போது சிரித்துக்கொண்டு பார்த்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் விலகும்.

வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது…!

ஆகவே இதைப்போல வெறுப்பை உருவாக்கிவிட்டால் அங்கே அவருக்குள் என்ன ஆகிறது…? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைப் போன்று ஒரு சொந்தமோ பந்தமோ உங்களுக்கு உணவை அவர்கள் சமைக்கப்படும்போது இந்த வெறுப்பின் உணர்வு அதிகமாகும் போது
1.அந்தக் குழம்புகளில் அவர்களும் ஏதாவது பொருளை அதிகரித்து விடுவார்கள்
2.அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டாலே நாம் வெறுக்கும் தன்மையே வரும்
3.உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும்.
4.சீரகத்தை அதிகமாக சேர்த்து விட்டால் ஒமட்டலின் தன்மை வரும்.
5.காரத்தை அதிகமாக்கிவிட்டால் வெறுப்பின் தன்மை வரும்.

இதைப்போன்று அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி அந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கும் தன்மை வரும். இது எல்ல, நம்மை அறியாமலேயே இயக்கும் சில நிலைகள்…!

ஆகவே… எப்போதுமே பிறருக்கு உணவு சமைக்கும் போதும்… பரிமாறும் போதும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர் மகிழ்ச்சி பெறும் சக்தி பெற வேண்டுமென்று எண்ணி உணவைச் சமையுங்கள்… போடுங்கள்…!

அதே சமயத்தில் இது போன்ற நிலைகளை எவருக்கும் நாம் அவரை மகிழச் செய்ய அதிகமாக உணவைப் போட்டுவிடாதீர்கள்…! போதும்… என்றால் அதை நிறுத்தி விடுங்கள்.

இரண்டாவது தடவை வந்து போடட்டுமா… போடட்டுமா…? என்று சொன்னால் அவர் சாப்பிட்டதைவிட அந்த வெறுப்பின் தன்மை கூடி நான்கு தடவை சொன்னால் என்ன நடக்கும்…?

இல்லைங்க கொஞ்சம் தான் என்று சொல்ல அவர் வேண்டாம் என்று சொல்ல இல்லை கொஞ்சம் தான் என்று மீண்டும் அழுத்திச் சொல்ல
1.அப்பொழுது இந்த வெறுப்பின் உணர்வை அங்கே வளர்த்து
2.அது உமிழ் நீரில் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணம் தான் செய்யும்

அப்போது அஜீரணம் ஆகும்போது என்ன ஆகின்றது…? நீங்கள் சாப்பாடு போட்டும் பயனில்லாமல் போகின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஔவொருவரும் மீள்தல் வேண்டும்.

ஏனென்றால் இதெல்லாம் நம்மை அறியாத அன்பால் நடக்கும் செயல்கள்…!

மிகவும் ருசியாக இருக்கின்றது என்று நீங்கள் எதையாவது உணவை அதிகமாக்கி விட்டால் உங்கள் உடல் ஏற்றுக் கொள்கின்றதா….? இல்லையே…! அஜீரண சக்தியாகி அதிக புளிப்பின் தன்மை  அடைந்து நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களும் சோர்வடையச் செய்துவிடுகின்றது அல்லவா….!

அப்படிச் சோர்வடைந்த நிலைகளில் தொழில் செய்ய நேருகின்றது. நம்முடைய எண்ணங்கள் பிறருடன் பேசும் போதும் அதே சோர்வின் தன்மை அடைகின்றது. நம் வாழ்க்கையில் இது போன்ற அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்…!

மனிதனுடைய ஆணிவேர் அவன் ஆன்மாவுமல்ல… உடலுமல்ல… நாசி தான்… அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்


இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இ

தைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம்  நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மற்றுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்... இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.
எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

 உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவுகூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாஅது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம். இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல் பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

August 1, 2020

எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம்...! என்ற எண்ணத்திற்கு இன்று மனிதர்கள் வந்துவிட்டனர்


இன்றைய விஞ்ஞான உலகில் காலத்தால் சிறுகச் சிறுக விஷத் தன்மைகள் பரவி இந்த காற்றுத் தன்மையே நச்சுத் தன்மையாகி விட்டது. மனிதனுக்குள்ளே இது பெரும் பிரளயமாக மாறிவிட்டது.

இன்று பார்க்கின்றோம். சிறைச்சாலைகளில் எல்லாம் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது. இருந்தாலும் அந்தச் சிறைச்சாலைகளுக்குள் புகுந்து தன் எதிரியை மடக்கியே தீர வேண்டும்... கொன்றே தீர வேண்டும்... என்று எவ்வளவு காவல்கள் இருந்தாலும் உள்ளே சென்று அந்த மனிதனைக் கொன்று அந்த பழியைத் தீர்த்து கொள்ளும் உணர்வுகள் தான் வருகின்றது

பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் அந்தக் காவலர்களையும் தாக்கிவிட்டுத் தன் எதிரியைத் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு செயல்படும் தன்மைகள் அதிகமாக வளர்ந்துவிட்டது.

1.தான் எப்படி நல்லதாக ஆக வேண்டும் என்று சிந்தனை இல்லை
2.ஆனால் எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்ற உணர்வுதான் வருகின்றது.

அதே போல் குடும்பத்தில் ஒரு வெறுப்பின் தன்மை ஆகிவிட்டால் இதனின் உணர்வை தனக்குள் வளர்த்துத் தான் எப்படியும் மடிந்தே (தற்கொலை) ஆக வேண்டுமென்று எண்ணிவிட்டால் எந்த வழியிலும் மடிந்து கொள்ளும் எண்ணங்களே வருகின்றது.

ஆக... எப்படியும் வாழலாம் என்ற நிலைகளே மனிதனின் உணர்வுக்குள் விளைந்துவிட்டது

இன்று செல்வத்தைச் சேர்த்து தன் குடும்பத்திற்குள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று தான் ஒவ்வொருவரும் எண்ணுகின்றோம். ஆனால் தான் வாழவேண்டும் என்றும் எப்படியாவது வாழவேண்டும் என்று உணர்வை ஏற்றுக் கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள்...?

1.நாம் இரவிலே தூங்கப்படும்போது... மனிதனை விட்டாலும் கூட பரவாயில்லை
2.எழுந்துவிட்டால் தன்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவான் என்று அடித்துக் கொலை செய்துவிட்டு
3.வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றார்கள்.

பின் நாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து எங்கே இருக்கின்றது...? இப்போது இதனின் வளர்ச்சிதான் அதிகமாகப் பரவியும் இன்று உருமாறிக் கொண்ட நிலைகள் இருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகள் விளையும் இந்த உலகில் நாம் வாழும்போது அஞ்சியே... திருடன் வந்து விடுவான்... நம்மைக் கொலை செய்துவிடுவான்...! என்ற உணர்வை அதிகமாக வளர்த்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை வளரப்படும்போது அதே எண்ணங்களே வருகின்றது.

அந்தத் திருடன் என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் அலைகள் பட்டபின் திருட வேண்டுமென்ற எண்ணம் கொண்டு அவன் இந்த வீட்டிற்கே வருவான்.

அதாவது... யார் வரப் போகிறார்கள்...! தைரியமாக இரு... என்று இருக்கும் அந்த வீட்டிற்குச் செல்ல மாட்டான்.

அங்கே திருடுகின்றார்கள்... இங்கே திருடுகின்றார்கள் என்றும் பொருள் எல்லாம் போய்விட்டது என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்...
1.இரவில் படுக்கும்போது இந்த எண்ண அலைகளை பரப்பினால் போதும்
2.நிச்சயம் அந்த வீட்டிற்குள் திருடன் வந்துவிடுவான்.

“சரட்... என்று சத்தம் போட்டால் போதும்.. ஆ...! என்று இந்த மூச்சை விடுவார்கள். இந்த மூச்சலைகள் படரும்போது திருடனுடைய நிலைகள் என்ன...?

ஒரு கல்லைப் போடுவார்கள். அந்தக் கல்லை போட்டபின் அதனின் எதிரொலிகளைப் பார்ப்பார்கள். இரண்டாவது கல்லைப் போடுவார்கள் மூன்றாவது கல் வரப்படும்போது இந்த உணர்வுகள் அப்படியே மறைந்துவிடும்.

நமக்குச் சத்தம் கேட்கும்... ஏதோ கல் என்று...! இரண்டாவது கல்லைப் போடும்போது ஏதோ சத்தம் கேட்கும்... “சரி விடு...” என்போம். மூன்றாவது கல் வரப்படும்போது முழித்திருந்த உணர்வுகள் மாறி நன்றாகத் தூங்க வைத்துவிடும்.

இப்படி அவர்கள் எண்ணங்கள் திருட வேண்டுமென்ற எண்ணம் வரும்போது நம்மைத் தூங்க வைத்தேவிடும்.

திருடன் வருவான் என்று எவ்வளவோ உஷாராக இருப்பார்கள். இருந்தாலும் திருடன் வரும்போது நன்றாகத் தூங்கிவிடுவார்கள்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் அது சிறுகச் சிறுக இவ்வாறு வந்து... அந்த உணர்வின் தன்மை சோர்வடையச் செய்து... அவனுடைய எண்ணம் வலுவாகி... அவனுடைய எண்ணக் குறிகளை வைக்கும்போது அந்த உணர்வலைகளே நம்மைத் தூங்க வைத்து விடுகின்றது.

நான் எவ்வளவோ உஷாராக முழித்துக் கொண்டுதான் இருந்தேன் இருந்தேன். என்னை எப்படியோ ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்.

வேறொன்றும் தேவையில்லை. இங்கே தபோவனத்தில் கூட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பேட்டரி லைட் அப்பொழுதுதான் புதிதாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தது. ஃபோர்மேன் ஒருவர் இருந்தார்.

தபோவனத்தில் உள்ள  வேலியெல்லாம் எடுத்துவிட்டு கல்களை ஊன்றிக் கொண்டிருந்தோம். இத்தனை நாள் வேலி இருந்தது. இன்றைக்கு இல்லை என்று சொன்னவுடன் தாராளமாக எல்லோரும் வந்து போகும் நிலை இருந்தது.

அதனால் தான் நான் (ஞானகுரு) அப்பொழுது சொன்னேன்...! முன்பு வேலியில்லாமல் இருந்தது அதைப்பற்றி யாரும் சிந்திக்கின்றதில்லை. பல பொருள்கள் உள்ளே வைத்திருப்பதனாலே இதைப் பார்த்திருப்பார்கள். வேலி இல்லை என்பதைப் பார்த்தவுடன் அந்த எண்ணம் தூண்டும்... நிச்சயம் வந்து எதாவது எடுப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்றேன்.

அட...! நான் எப்பொழுது பார்த்தாலும் முழித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றார் அந்த ஃபோர்மேன்.

அவர் அன்று சொன்னாரோ இல்லையோ நேராக அவரிடம் இருந்த புதிய டார்ச் லைட் அவர் வைத்திருந்த தாமிர வயர் (COPPER COIL) எல்லாவற்றையும் அலுங்காமல் கொண்டு சென்று விட்டான்.

கொண்டு போகும் போது அங்கே ஒருத்தர் பார்த்திருக்கின்றார். யாரோ போகின்றார் என்று. அட நம்முடைய ஆள் தான்...! வேலியில்லை.. அதனால் ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார் என்ற எண்ணத்தால் பேசாமல் போய்விட்டார்.

ஏனென்றால் அந்த உணர்வின் எண்ணங்கள் இப்படித்தான் இயக்குகிறது.

ஆனால் அந்தத் திருடனுடைய வலுவான நிலைகள் வரப்படும்போது எது எப்படி மாறுகின்றது...?

தபோவனம் தான்...! இருந்தாலும் அவருடைய எண்ணங்கள் இப்படி இருக்கப்படும்போது அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்றார் ஃபோர்மேன். ஆனால் பொருள்  போய்விட்டது.

என்னா சாமி...? இந்த இடத்தில் வந்து இப்படிக் கொண்டு போய்விட்டாரே...! என்று என்னிடம் கேட்டார்.

உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்கின்றது...! என்ற நிலையை அவருக்கு எடுத்துக் காட்டினேன். ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று...!

1.மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு மன பலம் கொண்டு
2.உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.

இந்தக் காற்று மண்டலமே விஷமாக உள்ளதால் புதிய புதிய வியாதிகள் தாக்கத் தான் செய்யும் - ஈஸ்வரபட்டர்


சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்...
1.செயற்கைக்கு ஏங்கும்...
2.செயற்கையான மனமுடைய...
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள  பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.