ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2014

கடவுளின் அவதாரம் - விஷ்ணு

இரண்டாவது அவதாரம் - விஷ்ணு
1. வெப்பம், காந்தம், விஷம் – மூன்று புலனறிவு
சூரியன் தன்னுள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட சத்தை, வெப்ப காந்தமாக வெளிப்படுத்துகின்றது. அது தன் தளவாயில் விஷத்தைப் பிரித்தாலும், வெளிப்படும் பொழுது, விஷத்தைக் கவர்ந்துதான் வெப்ப காந்தம் வெளிப்படுகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படும் நிலைகள் விஷம். வெப்பம், காந்தம் என மூன்று நிலைகள் கொண்டு வெளிப்படுகின்றது. வெப்பம், உருவாக்கும் சக்தி, காந்தம் அரவணைக்கும் சக்தி, விஷம் இயக்கும் சக்தி என மூன்று நிலைகள் கொண்டு இயங்குகின்றது.

காந்தம் தன் அருகிலே வருவதைக் கவர்ந்து தனக்குள் இணைக்கின்றது.

இணைத்ததின் நிலைகொண்டு, வெப்பம் அதனைச் சமைத்து தனதாக உருவாக்குகின்றது.

விஷமோ இதனில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

இத்தகைய இயக்கத்தின் தன்மை கொண்ட, மூன்று புலன் கொண்ட அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்பட்டு, பிரபஞ்சத்தில் பரவி வருகின்றது.

இதே பிரபஞ்சத்தில், 27 நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் அணுக்களாக மாறி, பரவி வருகின்றது. வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளை, சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அணுக்களாக வரப்படும் பொழுது, ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள் அருகிலே வந்தால், இதைக் கண்டு உணர்வின் உந்து விசையால் ஓடுகின்றது.

அப்படி ஓடும் நிலைகளில், கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக்களில் மோதப்படும் பொழுது, அது சுழற்சியின் தன்மை அடைந்து, அந்த சுழற்சியில் வியாழன் கோளின் கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்த்து, ஒன்றுடன் மோதும் நிலைகள் வருகின்றது.

மோதும் நிலை வரும்பொழுது, அதில் வெப்பமும், ஈர்க்கும் தன்மையும் வருகின்றது. ஈர்க்கும் சக்தி வரப்படும் பொழுது, எந்தக் கோள் உமிழ்த்திய அணு அடைப்படுகின்றதோ, அதன் அடைப்பிற்குள் உருவாகும் நிலை கொண்டு, மற்ற அணுக்களைக் கவர்ந்து அடைபடுகின்றது. ஒரு உயிரணுவாக உருவாக்குகின்றது.
2. துடிப்பால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு
உயிரணுவில் ஏற்படும் துடிப்பால் உருவாகும் வெப்பத்தை விஷ்ணு என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

வெப்பத்தால் ஈர்க்கும் தன்மை உருவாவதை லட்சுமி என்றும், விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும், காரணப்பெயரைக் கொடுத்து நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணு என்று உரைத்து, உயிரணுவின் தோற்றத்தை நமக்கு ஞானிகள் உணர்த்தினார்கள்.

லட்சுமி தனக்குள் ஈர்ப்பதை, விஷ்ணு (வெப்பம்) உருவாக்கி, ஜீவ அணுவாக விளையச் செய்கின்றது.
ஒரு உயிரணு தன்னில் ஜீவ அணுவை உருவாக்கும் போது,
அந்த ஜீவ அணு எந்த உணர்வின் சத்தினால் உருவானதோ
அதன் இனத்தை அது பெருக்கும்.
3. விஷ்ணுவின் மகன் பிரம்மா
உதாரணமாக ஒரு விஷச் செடியில் உருவான ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து காற்றில் உள்ள தன் சத்தை எடுத்து, அதே செடியாக விளையும். அதே போன்று
ஒரு உயிரணு ஒன்றை நுகர்ந்து,
அதனின் உணர்வின் அணுவாக உருவானால்,
அந்த அணு தன் இன சத்தைக் கவர்ந்து
தன் இனத்தைப் பெருக்கும்.
ஆக, இதைத்தான் விஷ்ணுவின் மகன் "பிரம்மா"
என்று உரைத்தார்கள் ஞானிகள்.

ஒரு உயிரணு ஒரு உணர்வின் தன்மையினை நுகர்ந்து, அதனில் உருப்பெறும் அணுக்களாக வரும்பொழுது, “பிரம்மம்” என்றும், அப்படி பிரம்மமான அந்த உணர்வின் சத்து, உயிருடன் ஒன்றி இயங்கத் தொடங்கிவிட்டால், அதற்கு “சிவம்” என்றும் காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்

February 16, 2014

கடவுளின் அவதாரம் பத்து - நாராயணன்

முதல் அவதாரம் - நாராயணன்
உயிரணுவின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும், மனிதர், தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும், நமக்கு உணர்த்துவதற்காக, ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.

உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து, தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கி, நம்மை நல்வழிப்படுத்துவதற்காக, உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியை, கடவுளின் அவதாரங்களாக வகைப்படுத்தி, உயிரணுவின் தோற்றுவாயான சூரியனுக்கு நாராயணன் என்று பெயரிட்டு, சூரியனைக் கடவுளின் முதல் அவதாரம், என்று நமக்கு உணர்த்தினார்கள் ஞானிகள்.
1. சீவலிங்கம்
ஆதியின் வான்வீதியில் ரூபங்கள் இல்லாத நிலையில் ரூபமாக, திடப்பொருளாக உருவாவதை பரம்பொருள் என்றும், ரூபங்கள் உருவாகக் காரணமாக இருந்த கண்ணுக்குப் புலப்படாததை, சக்தி என்றும், அது ஒன்றாக இணைந்து திடப்பொருளாகும் பொழுது, பரமசிவம் என்றனர் ஞானிகள்.

பரம் என்பது எல்லை. பரம்பொருளாவதை பரமசிவம் என்றும், சக்தி சிவமாகின்ற நிலையை நாம் தெரிந்து கொள்வதற்காக, பரமசிவம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

பரம்பொருள், தன் அருகில் காந்தப் புலன் மோதும் பொழுது, சுழற்சியின் தன்மை அடைகின்றது. தன் ஓடு பாதையில் சுழற்சியால் ஈர்ப்பாவதும், தனது துருவப் பகுதியில், தனக்கு எதிர் முனையில் வருவதைக் கவர்வதும், கவர்ந்து கொண்ட உணர்வை வெப்பம், தனக்குள் உருவாக்கும் திறன் பெறுகின்றது.
இத்தகைய நிலை பெறுவதைத்தான் சீவலிங்கம் என்று பெயரை வைக்கின்றார்கள். ஜீவனுள்ளதாக ஒரு பொருள் உருவாகின்றது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக, சீவலிங்கம் என்று காரணப்பெயரை வைத்தார்கள்.

நாம் இன்று சிவலிங்கம் என்று சொல்லுகின்றோம். ஆனால், மெய்ஞானிகள் வைத்த பெயரோ “சீவலிங்கம்”. ஆக, ஜீவிக்கும் திறன் பெற்று, தனக்குள் வளர்க்கும் திறன் பெற்றது.

பரம்பொருள் தனது சுழற்சியின் பொழுது, தன் துருவப் பகுதியில் எதிரில் வரும் தனது உணர்வினைக் கவர்ந்து, தனக்குள் உள்இழுப்பதும், இதற்குள் ஏற்படும் வெப்பத்தின் தன்மை கொண்டு, பரம்பொருளுக்குள் வெப்பம் நடுமையம் அடைந்து, தன் அருகிலே இருக்கும் நிலைகள் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, தன் அருகிலே இருப்பதை அனைத்தையும் அது அமிலமாக மாற்றுகின்றது. பின் அதில் உள்ளது ஆவியாக மாறி, ஒரு திடப்பொருளாகின்றது.

மேற்பரப்பில் கவரப்படும் அனைத்து சத்தும், கொதிகலனாகும் பொழுது, கீழிறங்குகின்றது. உதாரணமாக ஒரு இரும்பை உருக்கினோம் என்றால், கீழ்பரப்பு உருகி, கீழே இருக்கும் பாகம் அமிலமாக மாறுகின்றது. கீழ்பாகம் உருக உருக, மேல்பாகம் கீழே இறங்குகின்றது.

இதைப் போன்றுதான், பரம்பொருள் தன் சுழற்சியாகும் பொழுது, மேற்பரப்பில் விழும் அணுக்களின் தன்மை, அது நடுப்பாகத்தில் வெப்பத்தின் தன்மை கூடி, தன் அருகிலே இருப்பதை உருகச் செய்து, அதன் உணர்வுகள் கீழே இறங்குவதும், பாம்பொருள் சமமாக இருப்பது மேடு பள்ளமாக மாறுவதும், தான் கவர்ந்து கொண்ட சக்தி, இந்த வெப்பத்தில் கலவைகளாக மாறுவதும், உலோகத் தன்மைகளாக மாறுவதும், கல் மண் பாறைகளாக ஆவதும் இதைப் போன்ற உருமாற்றங்கள் ஆவதினால்தான், சீவலிங்கம் என்ற காரணப்பெயரைச் சூட்டினார்கள்.
இவ்வாறு தனது வளர்ச்சியில் கவர்ந்து கொண்ட நிலைகள், சிறு பொருளாக இருந்தது, பெரிய பொருளாக மாறுகின்றது. அப்படி உருப்பெற்ற பொருள்கள் பெரும் கோளாக மாறுகின்றது. பெரும் பொருளாக மாறும் பொழுது, அதனின் வளர்ச்சியும் அதிகரித்து, சுழற்சியின் வேகமும் கூடுகின்றது. சுழற்சியின் தன்மையால், வெப்பத்தின் தன்மையும், ஈர்ப்பின் தன்மையும் அதிகரிக்கின்றது.
ஆக, சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தை, தன் நடு மையத்தில் சேர்த்துக் கொள்கிறது. இதனால் வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது. தன் அருகிலே இருக்கக்கூடிய பொருள்களின் கலவைகளை சீக்கிரமாக மாற்றுகின்றது. இந்த உணர்வின் தன்மை பாறைகளாகவும், உலோகங்களாகவும் மாறுபடுகின்றது.

உதாரணமாக, ஒரு இரும்பு திடப்பொருளாக இருப்பதை நெருப்பில் போட்டால், அது அமிலமாக மாறுகின்றது. இதைப் போன்று பரம்பொருள் மையத்தில் அமிலநிலை உருவாகின்றது.

முதலில் நீராக இருந்தது, அதனில் ஒன்றாகப் பல உணர்வின் அணுக்கள் இணைந்தது. அதனில் நீர் ஆவியாகி, ஒன்றாக இணைந்த அணுக்கள் இரண்டறக் கலந்து, ஒரு பொருளாக மாறியது.
2. கடவுள் என்ற தனித்தன்மை இல்லை
அதே சமயம் அதனின் சுழற்சி வேகத்தில் வெப்பம் உருவானது. அதனில் இணைந்த உணர்வுகள் உருகும் தன்மை அடைந்து, அதனில் உருமாற்றங்கள் ஏற்படும் நிலைகள் பெற்றது. இந்த நிலைகள் எல்லாம், சந்தர்ப்பத்தால் உருவான நிலைகள். கடவுள் என்ற தனித்தன்மை இல்லை.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் இணைந்த சக்தியின் நிலைகள்,
எதிர்மறை கொண்டு இயக்கும் நிலைகளால்தான்,
ஒன்றுடன் ஒன்று மோதி,
ஒன்றுடன் ஒன்று இணையும் நிலை உருவானது.
கடவுள் என்பது வெப்பமாக உள்நின்று, தனது இயக்கத்தின் தொடர் கொண்டு, தனக்குள் வருவதை உருமாற்றி, உணர்வை மாற்றி பல நிலைகளை உருவாக்குகின்றது. உள் நின்று இயக்கும் வெப்பத்திற்குத்தான் கடவுள், என்று காரணப் பெயரை வைத்தார்கள், ஞானிகள்.

பிரபஞ்சம் உருவாகும் நிலையை, சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில், ஞானிகள் தெளிவாகக் காவியங்கள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். சிவதத்துவத்தில் சக்தி சிவமாகும் விதத்தைக் காண்பித்து, பரமசிவம், சர்வேஸ்வரன், ஈஸ்வரன் என்னும் நிலைகளையும் காண்பித்து, அதனின் உண்மைகளை நம்மை அறியும்படி செய்தனர்.

சிவனைக் காண்பிக்கும் பொழுது, சிவனுக்கு இரண்டு மனைவி என்றும், ஒரு மனைவி ஜடாமுடி மேல் உள்ள கங்கை என்றும், இன்னொரு மனைவி உடலில் சரிபகுதி பெற்ற பராசக்தி என்றும், உரைத்திருப்பார்கள் ஞானிகள்.
3. சிவன், பராசக்தி, திரிசூலம்
தான் நுகர்ந்த அணுவுக்குள் உள்ள வெப்பமும், தன்னுடன் இணைந்து இயங்குவதால் சிவனில் சரிபகுதி பராசக்தி என்றும், நீரும் நெருப்பும் கலந்து, எப்பொருளின் தன்மையை தனக்குள் இணைக்கின்றதோ, அது தன்னுடன் இணைந்து நிலமாக, சிவமாக மாறுகின்றது என்ற நிலையை, சிவரூபத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

சிவன் கையில் உள்ள திரிசூலம்,
நீர், நிலம், நெருப்பை நமக்கு உணர்த்தி,
திரிசூலத்தில் உள்ள உடுக்கையின் மூலம்,
ஒரு பொருளின் தன்மை ஒன்றிலே மோதப்படும் பொழுது,
அதனின் மோதலின் நாதங்கள் மாறி,
உணர்வின் தன்மை எப்படி மாற்றங்கள் ஆகின்றது?
என்ற நிலைகளை நமக்கு உணர்த்தினார்கள்.
சிவனின் கழுத்திலும், கையிலும், விஷம் கொண்ட பாம்பு இருக்கும்.
ஆக, இதன் மூலம் விஷத்தின் இயக்கத்தையும்,
விஷத்தின் தன்மை மற்றொன்றுடன் கலந்தபின்,
அது எதனின் உணர்வை நுகர்ந்ததோ,
அதனின் இயக்கமாக இயக்கும் நிலையையும்,
நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

சிவன் உடலிலே யானைத்தோல், புலித்தோல், மான்தோல், இவற்றிலான உடைகள் இருப்பதாகக் காண்பித்து, மானும் சிவமே, யானையும் சிவமே, புலியும் சிவமே என்று உரைத்து, இதனின் உணர்வினால், உடல்கள் மாற்றமாகி உணர்வின் தன்மை கொண்டு, மனிதனாக உருவானோம் என்பதையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

ஜடாமுடியில் பிறைச் சந்திரனைப் போட்டு, ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது, அதனதன் செயல்கள் சமபங்கு இழந்துவிடுகின்றன, ஆக, அதனின் நிலைகள் குறைந்துவிடுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கி, உலகம் உருவான விதத்தை ஞானிகள் சிவரூபத்தின் மூலமாக, நமக்கு உணர்த்துகின்றார்கள். இப்படி, ஞானிகள் ஆதியில் கோள்களும், நட்சத்திரமும், சூரியனும், பிரபஞ்சமும் எப்படி உருவானது என்று நமக்கு உணர்த்தினார்கள்.
4. ஸ்ரீதேவி, பூதேவி
பாற்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு நாராயணன் இந்த உலகை இரட்சிக்கின்றான் என்றும், சூரியன் தான் வளர்த்துக் கொண்ட சக்தியை ஸ்ரீதேவி என்றும், அடுத்து அது திடப்பொருளாகும் பொழுது, பூதேவி என்றும் ஆக, நாராயணன் இரு சக்தியின் துணை கொண்டு இயங்குகின்றான், என்றும் உணர்த்தினார்கள்.

சிவதத்துவத்தில், கங்கை ஒரு மனைவி என்றும், அதனுடன் சேர்ந்த வெப்பம் இன்னொரு மனைவி என்றும், ஆக சிவனுக்கு இரண்டு மனைவி என்றுரைத்து, நீரின் சக்தியும், வெப்ப சக்தியும் இல்லையென்றால், உருப்பெரும் சக்தி இல்லை. ஆக இது சிவசக்தி.

ஆனாலும், சூரியன் காந்தத்தால் இழுத்து உறையச் செய்யும் பொழுது, உடலாக மாற்றப்படும் பொழுது, ஸ்ரீதேவி என்றும், இப்படி உடலின் தன்மை அடைந்தபின், சுழற்சியின் தன்மை பெற்று தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலை உருவாகின்றது. ஆக, இதை ஞானிகள் பூதேவி என்றும் தெளிவாக்கியுள்ளார்கள்.

நாராயணன் ஒரு கடவுள். அவன் எங்கேயோ இருந்து கொண்டு நம்மை இரட்சிக்கின்றான் என்று எண்ணுகின்றோம். ஆனால், நாம் வேதங்கள் நமக்கு உணர்த்திய மூலத்தின் உண்மையை, ஞானிகள் காட்டிய வழியில் உணர்ந்திடல் வேண்டும்.

அப்படி உணர்ந்து, அந்தக் கருத்தின் உணர்வாக இயங்கத் தொடங்கினால், அதனின் உணர்வை நாம் பெற்று, சூரியன் ஒளிச்சுடரானது போன்று, மனிதர் தம் ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலையான ஒளியின் உணர்வின் தன்மையினை வளர்க்க முடியும். எமது அருளாசிகள்.

February 15, 2014

வெளியில் சென்றாலே சக்கரத்தைப் பார்த்து இரண்டு நிமிடம் தியானித்துவிட்டுச் செல்லுங்கள்

உதாரணமாக, ஒருவன் நம்மைத் திட்டினான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால், “நமக்குத் துரோகம் செய்தான், நம்மை ஏமாற்றினான், அவன் உருப்படுவானா” என்று எண்ணினால், அவன் உணர்வு நமக்குள் உண்டு, நம் உணர்வு அவனுக்குள் உண்டு, ஆனால், காற்றிலும் இது உண்டு.

நாம் எண்ணியவுடனே அங்கே பதிவாக்கிவிடுகின்றது. ஆனால், அங்கே அவன்
உணவு உட்கொள்ளும் பொழுது புரையோடுகின்றது.
வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் விபத்தாகின்றது.

இதைப் போன்று, நம் குழந்தை மேல் பற்று கொண்டு அவனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், “இப்படி இருக்கின்றானே” என்று வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குத் தாக்கப்பட்டு, சிந்தனை இழந்து, அவனுக்கு விபத்தாகும், அல்லது கல்வியில் சிறப்பை இழக்க நேரும்.

ஆனால், சரியாகப் படிக்கவில்லை என்று “இப்படி இருக்கின்றான்” என்று அடிக்கடி எண்ணினால், இந்த உணர்வுகள் அவனை மாற்றியமைத்து நல்லவனாகக் கல்வி கற்கும் நிலையை மறந்து, அவனை மறந்திடும் இந்த நிலையைச் செய்யும்.

ஆகவே, ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு,
எதன் உணர்வோ அவனை வைத்து
நமக்குள் இதை வளர்த்து, நம்முடைய எண்ணங்கள்
அவனைக் குறை கூறும் உணர்வுக்கே சென்றுவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து மாற்றுவதற்குத்தான் வாழ்க்கையே தியானம்.

வெளியே போகும் பொழுதும், தொழிலுக்குப் போகும் பொழுதும் தியானித்துவிட்டுச் செல்லுங்கள். அங்கே சென்ற உடனே இதே மாதிரி தியானியுங்கள், இரண்டு நிமிடமோ அல்லது ஐந்து நிமிடத்திற்குள்ளோ, அங்கே தியானித்தை முடித்துக் கொள்ளலாம்.

தொழிலிலிருந்து வீட்டிற்கு வந்தாலும், இதைப் போன்று அமைதிப்படுத்தி தியானித்துவிட்டு மற்ற நல்ல பேச்சுகளைப் பேசிப் பழக வேண்டும். இப்படி ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால், தீமைகள் நமக்குள் வராது.

உங்கள் அனைவரது வாழ்க்கையிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச்செய்து, உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறச்செய்து, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்து,
உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
தீய வினைகள் அனைத்தும் நீக்கி,
குரு அருளைப் பெற்று, அருள் வழி வாழ்ந்து,
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்,
தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடவும்,
தெரிந்து, உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
பொறுப்புடன் வாழும் தன்மையும்,
தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று,
நமது குரு அருளை என்றென்றும் நீங்கள் துணை கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
உங்கள் வாழ்க்கையில் அருள் வழி வாழ்ந்து,
பேரின்பப் பெருவாழ்வு பெற
எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அருள் வழி வாழுங்கள்.
ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.
பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையுங்கள்.
என்றும் பேரானந்த நிலை என்ற ஏகாந்த நிலை பெற எமது அருளும், குரு அருளும் நீங்கள் பெற்று, பேரின்பப் பெருவாழ்வு பெற எமது அருளாசிகள்.

February 14, 2014

"அழியா ஒளிச்சரீரம்" இந்தச் சரீரத்திலேயே நீங்கள் பெற எமது அருளாசிகள் - ஞானகுரு

யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்கின்ற பொழுது, உங்கள் எண்ணத்தின் செவிப்புலனால் ஈர்க்கப்படும் இந்த நிலையில் நீங்கள் சுவாசிக்கும் நிலைகள் சத்தாகின்றது.

நீங்கள் சுவாசித்தது சத்தானாலும், யாம் உபதேசிப்பது உங்களால், புரிந்து கொள்ள முடியாதவையாக இருப்பினும், யாம் உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறியும் பொழுது, அதனின் உணர்வுகள்
உங்கள் உடலுக்குள் ஊடுருவும் நிலையும்,
உடலுடன் இணையச் செய்யும் நிலையுமாக,
இது உருவாகின்றது.

இவ்வாறு இணைத்திட்ட நிலைகள் கொண்டு, ‘’அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும்’’ என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வின் ஈர்ப்பான சக்தி நீங்கள் நுகர ஏதுவாகின்றது.

ஆக, அந்த அருள் ஞானிகள் இந்த உடலின் தன்மை ஒளியாக மாற்றிய, உணர்வின் ஆற்றல் இங்கே மிதந்து கொண்டிருப்பதை அதை நீங்கள் கவர்ந்து, மீண்டும் அதனின் இணைப்பாக உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.

இந்தச் சரீரத்தை அழியா சரீரமாக, செய்ய வேண்டுமென்றால் அதையும், இந்தச் சரீரத்தில் தான் செய்ய முடியும்.
           
மது குருநாதர் மெய்யுணர்வைக் கண்டறிந்தார்.
மெய்ஞானிகளின் உடலில் விளைந்த,
தீமைகளைப் போக்கி, மெய்யுணர்வை வளர்த்து, 
உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சென்ற
அவர்களது நினைவின் அலைகளை
எமக்குள் பதியச்செய்தார்.

மனித வாழ்க்கையில் வரும் இருளை வெல்லச் செய்து, மெய் ணர்வின் தன்மையை எம்மிடத்தில் வளர்த்து, எம்மை மெய்ஞானியாக உருவாக்கினார்.

அந்த நிலையை நீங்களும் பெறவேண்டுமென்று, உங்கள் அனைவரையும் கூட்டமைப்பாக உருவாக்கி, அந்த மெய்ஞானிகளின் அருளுணர்வை உங்களிடத்தில் பெறச்செய்கின்றோம்.

ஆகவே, மெய்யுணர்வைப் பெறும் வகையாக, மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியைப் பின்பற்றிச் செல்லும் "உங்கள் அனைவருக்கும்" எல்லாம் வல்ல ஆற்றலாக அந்த மெய்ஞானிகளின் அருளாற்றல் கிடைக்கட்டும்.

அதை நீங்கள் பெற்று,
‘’என்றும் 16’’ என்ற ஒளிச்சரீரத்தை
இந்த சரீரத்திலேயே நீங்கள் பெறவேண்டுமென்று,
எமது அருளாசியை வழங்குகின்றோம்.

February 13, 2014

எம்முடைய உபதேங்களைப் பதிவு செய்தாலே போதுமானது, விஷத்தை முறியடித்துவிடலாம்

1. உலக இயல்பின் இயக்கத்தின் தன்மை எப்படிப்பட்டது?
விஷம் இல்லையென்றால் உலகமே இல்லை. சூரியனுடைய தன்மையை எடுத்துக் கொண்டால், இந்த விஷத்தை மாய்க்கும் ஆற்றல் பெற்றது. ULTRA VIOLET என்று சொல்வார்கள். அதில் வரக்கூடியது ஆறு கலர்கள்.

அது சமைத்துக் கொண்ட அலைகளை வெளிப்படுத்தியவுடன், உடல் அமைப்பிலே வராதபடி, வெளியிலே வரக்கூடிய அனைத்தையுமே சூரியன் பொசுக்கி, தனக்குள் நல்ல சக்தியை வடித்து எடுத்துக் கொள்கின்றது.

அப்படி வடித்து எடுத்துக் கொண்ட காந்த அலைகள் ஊடுருவி வரப்படும் பொழுது, வெளியிலே இருப்பதைத் தனக்குள் கவர்ந்து வருகின்றது. அவ்வாறு கவர்ந்து வந்த அந்தச் சக்தியின் நிலைகளைத்தான், நமது பூமி இதிலே மோதக்கூடிய சக்தியை இந்தச் சக்தியை எடுத்து, அந்த விஷத்தைத் தடுத்து நிறுத்துகின்றது.

ஆனால், அதே சூரியனுடைய காந்த அலைகள் அதைக் கவர்ந்து கொள்கின்றது. அதற்குப் பாதுகாப்பாக, விஷத்தன்மையை உள்ளே (பூமிக்குள்) விடுவதில்லை. ஏனென்றால்,
அதற்கு முன்னாடியும், விஷம்தான் இருக்கின்றது.
சூரியனுக்கும், விஷம்தான் முன்னாடி இருக்கின்றது.
நமக்கும், அந்த விஷம்தான் முன்னாடி இருக்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷத்தன்மை,
இந்த விஷம்,
நாம் எந்தெந்த குணத்தின் தன்மையை எடுத்துக் கொள்கின்றோமோ,
அந்தந்த குணத்தின் ஆற்றல் கொண்டு,
வலு கொண்டுதான், மற்றதை வராதபடி தடுத்துக் கொள்ளும்.

நல்ல குணத்தை நாம் எண்ணினாலும், அந்த விஷத்தின் தன்மை முன்னாடி வந்து, அதைத்தடைப்படுத்தும். அந்த விஷம் கலக்கவில்லை என்றால், அதற்கு ஆற்றலே கிடையாது.

ஆகவே, மிகவும் பலவீனமான நிலைகளில் விஷம் இருந்தால், நீங்கள் மேலும் மேலும் சோர்வடைந்து, மற்ற எதையும் வரவிடாதபடி தடுத்துக் கொண்டு, மேலும் உங்களை உள்ளுக்குள் கொண்டு போகும்.

ஏனென்றால் அது அப்படி எடுத்து, தனக்குள் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும். நல்லதைத் தடுத்து நிறுத்தத்தான் செய்யும். உலக இயல்பின் இயக்கத்தின் தன்மை அதுவே.
2. எம்முடைய உபதேங்களைப் பதிவு செய்தாலே போதுமானது, விஷத்தை முறியடித்துவிடலாம்
மெய் உணர்வின் இயக்கத்தின் தன்மையைக் கண்டுணர்ந்தபின், யாம் சொன்ன பின்னும், “சாமி எனக்குச் செய்யவில்லையே” என்று எண்ண வேண்டாம்.
யாம் உங்கள் ஒவ்வொருவருடைய உயிரையும்
கடவுளாக மதிக்கின்றோம்..
அதை யாம் சதா பிரார்த்திக்கின்றோம்.

உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்ட வேண்டுமென்று எண்ணுகின்றோம். நமது குருநாதர் காட்டியபடி சதா அந்த மெய் ஒளியை எடுக்கின்றோம். அது, உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டுமென்றுதான் பிரார்த்திக்கின்றோம். அதற்குத்தான் இந்த உபதேசமே.

ஆகவே, நல்லதைப் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும், எனக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும், என் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும், மகரிஷிகளின் அருள் சக்தியால், என் உடலில் உள்ள நோய்கள் நீங்கவேண்டும், என்று உங்களுக்குள் நினைவைச் செலுத்துவது ஒரு கஷ்டமா?

ஓம் ஈஸ்வரா என்று, உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு, உணர்வின் தன்மையை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள். நோய்கள் பறந்துவிடும். நமக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும், உங்களை நீங்கள் நம்பி, நாம் இடும் மூச்சலைகள்தாம் இங்கே வேலை செய்கிறது என்று அறிதல் வேண்டும். நீங்கள் இடும் மூச்சலைகள் தான், எதிர்காலத்தில் விஷத்தன்மையை முறியடிக்ககூடிய சக்தியாக மலர வேண்டும்.

ஒன்றுமே தெரியவில்லை என்று எண்ண வேண்டாம். நாம் படிக்கவில்லையே என்றெல்லாம் எண்ண வேண்டாம்.
இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
யாம் சொல்லும் இந்த முறைப்படி செய்து பாருங்கள்.
சிரமப்பட்டு எடுக்க வேண்டியதில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்.
எங்கள் பேச்சும், மூச்சும் தெய்வ நிலைகளில் இருக்கவேண்டும்.
மகரிஷிகளின் அருளால் எல்லாம் நலம் பெறுவதாக இருக்கவேண்டும், 
என்று இந்த உணர்வை வெளிப்படுத்தி, ஒளியை ஜெபமாக்குங்கள். அதனுடைய உண்மையை நீங்கள் பார்க்கலாம், எமது அருளாசிகள்.

February 12, 2014

துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்துக் கொண்டேயிருப்பதுதான் தியானம்

1. பிறர் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மால் தாங்க முடியவில்லை
இன்றைய மனித வாழ்க்கையில் சாதாரணமாக, பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தவுடன் நமக்குத் தாங்க முடியாத நிலைகள் இருக்கும். மகிழ்ச்சியினுடைய நிலைகளைச் சொன்னால், தன்னையறியாமலே பலவீனப்படுத்தும் நிலைகளைப் பார்க்கலாம்.

காரணம், நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் வரும் பொழுது, தாங்கக்கூடிய சக்தி இழந்து, தன் நிலையை மீண்டும் பலவீனப்படுத்திக் கொள்கின்றது.

தன்னைத்தான் பலவீனப்படுத்தி, மீளமுடியாத நிலைகளில்தான் இருக்க முடிகின்றதே தவிர, நல்ல சக்தியை இழந்துவிடுகின்றோம். சிந்திக்கும் ஆற்றலையும் இழந்துவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மீளும் நிலைக்குத்தான், ஆத்ம சுத்தி என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை உங்கள் கையில் கொடுக்கின்றோம்.

இந்த ஆத்ம சுத்தி என்ற நிலையை, ஒரு தரம் இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டாலும், உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள முடியும், செய்து பாருங்கள். உங்களுக்குள் அந்த உண்மைகளைப் பார்க்கலாம்.

துன்பம் வரும்பொழுது, ஒருவரிடம் மனக்குறையெல்லாம் சொல்கின்றோம். அதைக் கேட்டவுடன் அவரும் சோர்வடைந்துவிடுவார். அவர் சோர்வடைந்தால், இன்னும் கொஞ்சம் பலவீனமாகச் சொன்னால், நம்மிடம் பலவீனத்தைக் கூட்டிக் கொள்கின்றோமே தவிர, குறைத்துக் கொள்வதில்லை.

“உன்னால் நான் கெட்டேன்,
என்னால் நீ கெட்டாய்”
என்று இரண்டு பேருமே பலவீனமாகி,
ஒருவருக்கொருவர் இதைத்தான் பெருக்கிக் கொள்கிறோமே தவிர, இந்தக் கஷ்டத்தைப் போக்குவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்று சிந்திப்பதில்லை.

ஆக, “உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டாய்” என்று, இந்தப் பாசத்தினால் விஷத்தைத்தான் கலக்க விட்டுவிடுகின்றோம். அந்த விஷத்தை அடக்கும் சக்தியை இழந்துவிடுகின்றோம்.
2. துருவ நட்சத்திரத்தை எண்ணி சுவாசித்துக் கொண்டேயிருப்பதுதான் தியானம்
எமக்கு இயற்கையிலே துன்பத்தை ஊட்டினார் குருநாதர். அதன்வழி உண்மையை அறிந்துகொண்டோம். ஆனால், உங்களுக்கு சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய துன்பமான நேரத்தில், வேதனைப்படக்கூடிய நிலையிலிருந்து மீட்டுக்கொள்வதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அதன் வழியில் கற்றுக்கொண்ட,
அந்த உண்மையினுடைய நிலைகள் தெளிந்து, தேர்ந்தபின்,
யாம் அந்த உணர்ச்சியினுடைய நிலைகள் கொண்டு,
உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் துன்பங்கள் நேரும் பொழுது,
சுலபத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி என்ற நிலைகளில்
அந்த ஆயுதத்தை நீங்கள் பயன்படுத்தி,
ஒரு நொடிக்குள் உங்கள் மனக்கலக்கத்தை நீக்கி,
மன உறுதி கொள்வதற்காக
உங்கள் அனைவருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,
நேரமில்லை என்கிறீர்கள்.

ஆகவே, தியானம் என்பது வேறொன்றுமில்லை. அந்த துருவ நட்சத்திரத்தை நினைக்கின்றோம்”, அதன் பேரருளைப் பெறுகின்றோம்.

அடுத்து, நாம் ஆத்ம சுத்தி செய்கின்றோம். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை, நம் உடல் முழுவதும் படரச் செய்கின்றோம். உணர்வை ஒளியாக மாற்றுகின்றோம். அவ்வளவுதான். எமது அருளாசிகள்.