உயிரே கடவுள். உன் உடலை ஆள்பவனும் ஆண்டவனாக இருப்பவனும் உன் உயிர்தான். உடலின்
இயக்கத்தின் உணர்வில் எழும் எண்ணத்தினால் சுவாசிக்கும் உணர்வே (உன் உயிர்) இறையாகி
உடல் வளர இறைவன் ஆகின்றான்.
மயில்துத்தத்தைக் (விஷத்தை) கண்களால் பார்க்கின்றாய் என்று வைத்துக்கொள். அதைப்
பார்க்கும் பொழுது, அமைதி கொண்டிருக்கின்றது. ஒரு தீங்கும் செய்வதில்லை.
அதை நீ சாப்பிட்டால் உன் உடலின் இயக்கமே மாறுபட்டு குமட்டலும் வாந்தியும் வரச்
செய்கின்றது. உடலைச் சோர்வடையச் செய்கின்றது. இறந்துவிடுவோமோ என்று தோன்றுகின்றது.
இதைப் போன்றே, மிளகாயைப் பார்க்க அமைதியாகத் தெரிகின்றது. சாப்பிட்டாலோ, “ஆ”
என்று அலறச் செய்கின்றது. காரத்தைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று
குடிக்கச் செய்கின்றது.
சுவையான இனிப்பைச் சாப்பிட்டாலோ மனது மகிழ்ச்சியடைகின்றது. ஆனால், இனிப்பு அதிகமாகிவிட்டாலோ,
அதைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச் செய்கின்றது.
இதைப் போன்றே நீ சுவாசிக்கும்
உணர்வின் செயலே, தெய்வம் ஆகின்றது.
தெய்வச் செயலாக அமைகின்றது.
வாழ்க்கையில் பற்பல குணங்கள் கொண்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம்
ஏற்படுகிறது. அச்சமயம், எதிர்பாராது ஒரு முரடனிடம் வாக்குவாதங்கள் முற்றுகின்றது என்று
வைத்துக் கொள்வோம்.
நீ உனக்குள் வலுவை மனதில் வைத்து “உன்னை அழித்துவிடுகிறேன் பார்” என்று முரடனைப்
பார்த்துச் சொல்கிறாய்.
உன் சொல்லில் வெளிப்படும் உணர்வுகள்
முரடனின் செவிகளில் ஒலித்து
அவன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு
உன்னை அழித்துவிடும் எண்ணம்
அவனுக்கு அதிகம் உருப்பெறுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், நீ சுவாசிக்கும்
உணர்வுகள் உன் இரத்தத்தில் கலந்து முரடனை அழித்துவிடும் எண்ணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும்.
முரட்டுத்தனமான உணர்வுகள் உன் உடலில் சேர்ந்து கொண்டு,
வினையாக விளைந்து உன் உடலில் ஆத்மாவாகச் சேர்ந்து
சேர்த்துக் கொண்ட வினைகள்
அணு சிசுக்களாக உருப்பெற்று
விடுகின்றன.
உன் உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் பொழுது, உயிரின் ஈர்ப்பில் வளர்ச்சி
பெற்ற உன் உணர்வின் வினைகள் மறு பிறவியில் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் மிருக உருவமாக
உடலைப் பெற்றுவிடும் என்று உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார் ஈஸ்வராய குருதேவர்.
இதையெல்லாம் அறிந்ததும், என்னையறியாது (ஞானகுரு) எனக்குப் பய உணர்வுகள் வந்துகொண்டிருந்தது.
என் சொல்லும்
செயலும், நன்மை செய்யும் நிலை பெறவேண்டும்.
என் சொல்லும்
செயலும், பிறருக்குத்
தீங்கு செய்யாது காக்க வேண்டுமென்று குருதேவரிடம்
வேண்டினேன்.
அவர் பலமாகச் சிரித்துவிட்டு,
“உயிரே கடவுள்”
அவன் வீற்றிருக்கும் ஆலயம் உன்
உடல்.
அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டியது உன் கடமை.
உன்னையறியாது அசுத்தமாவதைச் சுத்தம் செய்வது உன் பொறுப்பு
என்று கூறினார்.
இந்தப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்து வாழ்க்கையில் தன்னுள்
சேர்த்த தீய உணர்வுகளை மாய்த்து மகரிஷிகளாகி,
உயிருடன் உணர்வுகள் ஒளியின் ஒளியாக ஒன்றி
ஒளியின் உருவமாக ஒளிர்ந்து
விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றலைக் கொண்டு மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி
அலைகளை உனக்குள் சேர்த்து, உன்னையறியாது உன்னில் சேர்ந்த தீய உணர்வுகளை மாய்த்து உன் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறு.
இதுவே உனக்குள் உயிராய்
வீற்றிருந்து உன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு நீ செய்யும்
பணியாகும். இப்பணியில், ஆண்டவனின்
பணியாக, நீ ஒளி நிலை பெறுவாயாக! என்று ஆசீர்வதித்தார் ஈஸ்வராய குருதேவர்.