ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2014

உயிரே கடவுள் - ஞானகுரு

சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், ஒவ்வொரு நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும் ஒவ்வொரு கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால் இந்த நான்கு ஆற்றல்களும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி துடிப்புள்ள உயிரணுவாகின்றது.

அதாவது, உயிரணுக்குள் வெப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால் தாவர இனச் சத்துக்களில் இத்தகைய உயிரணு வீழ்ந்தால்,
அந்தத் தாவர இனச் சத்தை உயிரணு ஈர்த்து,
உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம்,
தாவர இனத்தின் சத்திற்குள் மறைந்திருக்கும்,
வெப்ப அணுக்களை இயக்கி,
புழுவாக உருப்பெறச் செய்கின்றது.

அதாவது, உயிரணுவின் துடிப்பினால்
உயிரணுவிற்குள் ஏற்படும் வெப்பம்
புழுவின் உடலுக்குள் மறைந்திருக்கும் வெப்ப அணுக்களை இயக்கி
உடலை வாழ, வளரச் செய்யும்,
(உயிரணுவிற்குள்) வெப்பமாக இருந்து
உயிராக இயங்கும் உயிரே கடவுள்.

புழுவாகி உடல் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புழு உட்கொண்ட இரையும் சுவாசித்த உணர்வுகளும் உடலில் நுண் அணுக்களாக விளைந்து விளைந்த நுண் அணுக்கள் புழுவின் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாகச் சேர்ந்து, உயிராத்மாவாக ஆகின்றது.

புழு இறந்தபின் புழுவின் உயிராத்மா பரமாத்மாவில் கலக்கின்றது. பரமாத்மாவில் கலந்துள்ள புழுவின் உயிரான்மா மறு பிறவியில் பூச்சியாகப் பிறக்கின்றது.

ஆக, ஒவ்வொரு உடலிலும் உட்கொண்ட உணவுகளுக்கும்
பற்பல குணங்களின் உணர்வுகளுக்கொப்ப
பல்லியாக, பாம்பாக,
பறவையாக, மிருகமாக,
இவ்வாறு மனிதன் வரை உருப்பெறச் செய்த
“உயிரே கடவுள்”.
எண்ணும் எண்ணமே இறைவன்.
உணர்வுகளின் செயல்களே தெய்வங்கள்.