ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2014

செய்வினையை நீக்கச் செய்தார் குருநாதர்

குருநாதர் செய்வினைகளைப் பற்றியும் தோஷங்களைப் பற்றியும் கூறி வந்தார்.

அது சமயம், குருநாதர் ஒரு பிச்சைக்காரரைக் காண்பித்தார். அந்தப் பிச்சைக்காரர் காலை நொண்டிக் கொண்டு குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார்.

அவர் ஒரு பத்து அடி நடப்பதற்கு, 15 நிமிடமாவது எடுத்துக் கொண்டார். உணவு பெறுவதற்காக, ஒரு டப்பாவை கையில் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டு வந்தார்.

அவர் காலையிலிருந்து மாலை வரை அலைவார். கடைகளில் கொடுத்த உணவை அள்ளிச் சாப்பிடுவதற்கு சிரமப்படுவார். யாம், அவரை அடிக்கடி சாலைகளில் பார்த்திருக்கின்றோம்.

பிச்சைக்காரர் நடந்து வருவதை சிறிது தூரத்திலிருந்து குருநாதரும் யாமும் கவனித்துக் கொண்டிருந்தோம். குருநாதர் அவரைக் காண்பித்து, திருடன் வருகின்றான் பார், திருடன் வருகின்றான் பார் என்று கூறினார்.

எங்கே சாமி வருகின்றார்? என்று யாம் கேட்டோம்.

இதோ வருகின்றான் பார் என்று பிச்சைக்காரரைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர்.

குருநாதர் சொல்லி பிச்சைக்காரர் எங்கள் பக்கத்தில் வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது.

இவ்வாறு அந்த பிச்சைக்காரர் எங்கள் அருகில் வந்ததும், அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கிக் கொண்டு பிச்சைக்காரரை அங்கே உட்கார வைத்துவிட்டார் குருநாதர்.

குருநாதர் அவரின் கையிலிருந்த தடியை எடுத்துக் கொண்டபின், எம்மைப் பார்த்து, காபி வாங்கி வா, மெதுவடை போன்ற சில திண்பண்டங்களை வாங்கி வா என்று கூறினார்.

எல்லாவற்றையும் வாங்கி வரச் சொல்லி, பிச்சைக்காரரை சாப்பிடச் சொன்னார் குருநாதர்.

பிச்சைக்காரர் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடனே அந்தக் கம்பை எடு என்று கூறி, அந்தக் கம்பை வாங்கி எமது கையில் கொடுத்தார் குருநாதர்.

இந்தக் கம்பால், அவனின் மண்டையைப் பார்த்து ஓங்கி அடி, அவனுடைய மண்டையை இரண்டாகப் பிளக்க வேண்டும் என்று கூறினார். திருடன் இவன்.., இவனுடைய மண்டையை இரண்டாக உடை என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.

குருதேவரும் யாமும் பேசுவதைக் கேட்டு பிச்சைக்காரர் அலறத் தொடங்கினார். இத்தனையும் வாங்கிக் கொடுத்து சாப்பிட்டவுடன், அடி என்றால் எப்படி இருக்கும்.

யாமும் குருநாதரிடம் இருந்து கம்பை வாங்கிக் கொண்டு, மெதுவாக பிச்சைக்காரர் தலைக்கு நேராகக் கொண்டு போனோம். இலேசாக வலி தெரியாதவாறு, பிச்சைக்காரரின் தலையில் அடித்துவிட்டு, அடித்துவிட்டோம் சாமி என்று யாம் கூறினோம்.

மண்டை உடையவில்லையே என்று கூறினார் குருநாதர்.

அந்தக் கம்பை வாங்கி, எமது முதுகில் ஓங்கி அடித்தார் குருநாதர். மண்டையில் அடித்தால், இப்படி திடும்.., ன்று சத்தம் வரவேண்டும், மண்டை உடைய வேண்டும் என்று கூறினார். இப்பொழுது அவன் மண்டையில் அடி என்று கூறினார்.

சாமி நான் பிள்ளைக்குட்டிக்காரன். பிச்சைக்காரர் செத்துப் போனால் என்னைச் சிறையில் போட்டுவிடுவார்கள் என்று கூறினோம். எம்முடைய பிள்ளைகளெல்லாம் ரோட்டிற்கு வந்துவிடும் என்று கூறினோம்.

எம்மை சும்மாவா விட்டார் குருநாதர். அதெல்லாம் முடியாது, நான் சொன்னதைச் செய்கின்றேன் என்று கூறினாயல்லவா, நான் முதுகில் அடித்தேன், அதே போன்று அவனின் மண்டையில் நீ அடி என்று கூறினார்.

யாம், இரண்டு, மூன்று தடவை மெதுவாக மெதுவாக பிச்சைக்காரரின் தலையில், கம்பை வைத்து எடுத்தோம். இதனால் குருநாதர் எம்மைத் திரும்ப திரும்ப அடித்தார்.

சரி சாமி, பிச்சைக்காரர் அடி தாங்கமாட்டார், இப்பொழுது, இவரை அடித்துக் கொன்றே விடுகின்றேன் என்று கூறிவிட்டு, கம்பை ஓங்கிக் கொண்டு போய் அந்தப் பக்கம் தரையில் அடித்தோம்.

பிச்சைக்காரர், ய்யய்யோ அம்மா,! என்று கூறிக்கொண்டு எழுந்து ஓடினார். யாம் அவரைத் துரத்திக் கொண்டு ஓடிய அவசரத்தில் எமது வேஷ்டி கூட கழன்று விட்டது. எமது வேஷ்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம்.

எமது வீட்டுச் சந்திற்கு முன் ஒரு இரும்புக் கடை இருக்கின்றது. அந்த கடையிலிருந்த ஒருவர்என்ன நைனா ஓடுகின்றீர்கள்? அவன் நடக்க முடியாமல் இருந்தான். அவனும் ஓடுகின்றான், என்ன சமாச்சாரம்? என்று கேட்டார். 

அதற்கு யாம், குருநாதர் அவனைத் திருடன் என்று கூறினார் என்று சொன்னோம்.

யாம், அவரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, குருநாதரிடம் இழுத்துக் கொண்டு வந்தோம். அவர் என்னைக் கொன்று விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தார்.

குருநாதரிடமும், என்னைக் கொன்றுவிடாதீர்கள் என்று கூறினார். குருநாதர், அவரின் கையில் 100 ரூபாயை கொடுத்தார்.

இவனுடைய சொத்தைப் பறிப்பதற்காக வேண்டி இவனின் உடலில் இன்னொரு ஆவியை ஏவல் செய்து, இவனைப் பைத்தியக்காரனாக ஆக்கிவிட்டார்கள். 

இப்படிப் பைத்தியக்காரர்களாகச் சுற்றுகிறவர்களுக்கெல்லாம் பைத்தியக்காரன் ஒருவன் மலையில் இருக்கின்றான். இது போன்று முக்கியமான கோவில் குளங்களுக்கெல்லாம் செய்வினை செய்யப்பட்டவர்கள் தோஷங்களானவர்கள் இப்படித்தான் வருவார்கள்.

ஏனென்றால், இவன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கு பிறிதொருவர் செய்த ஆவி நிலைகள் இவனுக்குள் வந்தாலும், இவனைப் போன்றவர்களை நல்ல இடத்திற்கே அழைத்து வரும்.

இருந்தாலும், இவன் பிச்சை எடுத்துதான் வாழமுடியும். நல்லதை எடுக்க முடியவில்லை. ப்படி அவஸ்தைப்படுகின்றான். ஆகையால், இவன் உடலில் இருந்த ஆவியைத்தான் உன்னைக் கொல்ல சொன்னதுஎன்று கூறினார் குருநாதர்.

எனவே, அத்தனை நாடகங்கள் செய்து ஆவி நிலை விலகியது. பிச்சைக்காரருடைய கை கால் எல்லாம் ஜம்.., ன்று ஆனது. அவரின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து உனது சொத்தெல்லாம் வந்துவிடும், போடா என்று கூறினார் குருநாதர்.

அந்த ஆள் விருதுநகர் பக்கம் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய சொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு அவரை வெளியில் துரத்திவிட்டார்கள்.

அவருக்கு குழந்தைகளோ வேறு வாரிசுகளோ கிடையாது. அவருடைய சொத்தை அனுபவிப்பதற்காக அவரை பைத்தியக்காரராக ஆக்கியுள்ளார்கள். இப்படியும் இருக்கிறது உலகம்.

இதையெல்லாம் அனுபவபூர்வமாகக் காண்பித்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.