ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2012

அகத்தியர் 3


சாமி புத்தகம்  அகத்தியர் 3
(பக்கம் 21-26)
ஒன்றும் அறியாத வான்மீகி உடலில், அவர் செய்த எத்தனையோ தவறான உணர்வுகள் அங்கே கலந்திருந்தது. வான்மீகி என்ற வேடனாக இருந்த அந்த மனிதன், தான் வேட்டையாடச் செல்லும் பொழுது, தன் பசியைப் போக்க, (அவன் செய்த தவறுகள் -- எத்தனையோ உணர்வுகள்) ஒன்றை அடித்து ஒன்றைக் கொன்று, அதை விழுங்கும் நிலை தான் அவனிடத்தில் இருந்தது.

பிறரிடத்தில் பொருளிருக்கின்றது என்றால், அதையும் அடித்து, தனக்கு வசப்படுத்தி, மற்றவர்களின் இரக்கங்களைப் பார்க்க முடியாத ஒரு மனிதன் தான், வான்மீகி.

அப்பேர்ப்பட்ட அந்த வேடன், காட்டுக்குள் செல்லும் பொழுது, இரு பட்சிகள் இரை தேடி வருகின்றது. அப்படி அந்த இரு பட்சிகளும் இரை தேடி, உணவு புசித்துவிட்டு, மகிழ்ந்து தான் கூடிக் குலாவி மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது, இந்த வேடன், அவன் தன் பசியைப் போக்க, அம்பை எய்து உடன் வந்த ஒரு பட்சியை, வீழ்த்திவிடுகின்றான்.

அந்தப் பட்சியை வீழ்த்தியவுடன், அது கீழே விழுந்து துடிக்கின்றது. அதனுடன் இருந்த மற்றொரு பட்சி, இதைப் பார்த்து அந்த பாசத்தாலே, துடித்து, அது வேதனைப்பட்டு துடிக்கின்றது.
ஆனால், இது துடிப்பதை அது நுகர்ந்து, இந்த உணர்வைச் சுவாசித்து, இதன் உடல் உணர்வுகள் அனைத்தும் துடிக்கின்றது. தன் பாசத்தால், அது துடித்து, அந்த பட்சியின் நிலைகள் சுழன்று, சுழன்று கதறுகின்றது.

ஆனாலும், இந்த வேடனோ அந்த மற்றோரு பட்சியையும் அடித்து, தனது பசியை ஆற்றிக் கொள்ளலாம் என்று அம்பை எய்கின்றான். அம்பை எய்தாலும், அந்த மற்றொரு பட்சி இவனையும் பார்க்கின்றது, பாசத்தால் அடிபட்டு துடிக்கும் பட்சியையும் பார்க்கின்றது, துடிக்கின்றது.

இவ்வாறு துடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அந்த வேடன் குறி வைத்து அந்தப் பட்சியையும் தாக்க எண்ணுகின்றான். ஆனால், இவன் குறி வைப்பதை, தன்னுடன் வந்த, இனப் பாச உணர்வுடன், ஏங்கி இவனைப் பார்க்கின்றது.

பட்சி தன் ஏக்க உணர்வின் தன்மையால், அது பார்க்க,
அதன் உணர்வின் ஒளிகள்
அதன் கண்களிலிருந்து வெளிப்படும்,
இந்த உணர்வின் ஆற்றல்கள்,
வேடனுடைய நிலைகளில், 
இவன் குறி வைக்கும் போதெல்லாம்
அதன் அலைகள், இவனுடைய ஈர்ப்பிற்குள் வருகின்றது.

இப்படிப் பல முறைகள் இவன் தொடர்ந்து செயல்பட,
அது தன் பாசத்தால் ஏங்கிய, அந்த உணர்வின் சக்தியை, அது வெளிப்படுத்த,
இவனுடைய புலனறிவு, அந்த உணர்வின் சக்தியை, அது வெளிப்படுத்த,
இவனுடைய புலனறிவு, அந்த உணர்வின் சக்தியை ஈர்க்க,
இவனுக்குள் மறைந்திருக்கக் கூடிய நிலைகள்
தன் இனமான பட்சியின் தன்மை கொண்டு,
தான் எவ்வாறு இருந்ததோ, அந்த உணர்வின் சக்தியை
இந்த உணர்வு  இவனுக்குள் தட்டியெழுப்ப,
இவன் அம்பு எய்யும் பொழுது,
இந்த பாசமான ஏக்கம் வந்தவுடன்
அந்த பட்சியைக்  குறி வைத்து அம்பை எய்யும்,
அவனுடைய, அந்தக் குறியின் நிலைகள் தவறுகின்றது.
அதை அவனால் வீழ்த்த முடியவில்லை.

ஆக இவனுடைய ஏக்கம்,  அது எவ்வாறு ஏங்குகின்றதோ, அந்த உணர்வின் ஆற்றல்,   இவனுக்குள் மறைந்திருந்த பாசத்தின் நிலையை, அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகின்றது.

அப்பொழுதுதான், தன் எண்ணத்தால், தனக்குள் இருக்கக்கூடிய அந்த உணர்வுகள் கிளர்ந்தெழுந்து, வானை நோக்கி ஏகுகின்றான்.

அப்படி வானை நோக்கி ஏகும் பொழுது, சூரியனின் காந்த அலைகள் பூமியை நோக்கி வரும்போது, இவனுடைய உணர்வுகளுடன் மோதியவுடன், இவனுக்குள் மறைந்த பாசத்தின் உணர்வின் எண்ண அலைகள், அது தனக்குள் தூண்டப்படுகின்றது.

அப்படித் தூண்டி எழுந்த, அந்த உணர்வின் தன்மை கொண்டு, புலனறிவிலே அவன் விண்ணை நோக்கிப் பார்க்கும்போது,
அனைத்துமே பாசத்தால் வளர்த்து,
எதையுமே தீயது அல்ல என்றும்,
தீயதைத் தனக்குள் ஒளியாக மாற்றி
ஆற்றல் பெற்ற, அந்த உணர்வின் சத்தான நிலைகள்,
மெய்யுணர்வைக் காட்டி, உணர்த்திச் சென்ற
அந்த அலையின் தொடரை
இன்று அகஸ்திய மாமகரிஷி என்று சொல்லுகின்றோம்.

அந்த அகஸ்திய மாமகரிஷி, மூச்சால், பேச்சால் வெளிப்படுத்திய அவருடைய உணர்வின் அலைகள், அந்த வேடனுடைய உடலில் சிக்குகின்றது.

அந்த மூச்சின் உணர்வின் சக்தி, அவனுக்குள் சிக்கும்போதுதான், அந்த உணர்வின் தொடர் கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற்றான். சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தி என்பது, பேரண்டத்தின் சக்தியைத் தனக்குள் ஈர்த்து, ஒளியாக உணர்வின் ஆற்றல்களை அங்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த அணுதான் நாரதன் என்பது.
அந்த அகஸ்திய மாமகரிஷி, பூமியிலே வாழ்ந்த காலங்களில், மெய் உணர்வின் சக்தியைத் தனக்குள் வளர்த்து, ஒவ்வொரு உணர்வின் ஆற்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றதென்று வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றல்கள், நம் பூமியிலே படர்ந்து கொண்டிருகின்றது.

அகஸ்தியர்,  எப்பாசத்தால் எல்லோரும் பெற வேண்டுமென்று, தன் உணர்வின் ஆற்றலைப் பரப்பினாரோ,
அந்தப் பரப்பிய ஆசை தான்
அந்த வேடான வான்மீகி தன் உணர்வின் ஆற்றலால் ஏங்கும்போது,
அந்தப் பட்சி தன் பாசத்தின் நிலைகள் கொண்டு
அந்த உணர்வின் புலனறிவைப் பாய்ச்சும் போது
அவன் கூர்ந்து பார்த்து தாக்கப்படும்போது
அந்தப் பாசத்தின் உணர்வுகள்,
இவனுடைய உடலிலே தூண்டி,
இந்த கிளச்சியின் நிலைகள் கொண்டு
அந்த பாச ஏக்கத்தாலே, தான் செய்த தவறை மறந்து,
சூரியனை விண்ணை நோக்கி பார்க்கும்போதுதான், சூரியனின் ஒளி காந்த சக்தி இங்கே கூடுகின்றது.

இவனுக்குள் கூடியிருந்த, அந்த பாசமான நிலைகள், மெய்ஞானிகள், பாசத்துடன் ஒவ்வொருவரும் நலம் பெறவேண்டும், அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வளம் பெறவேண்டுமென்ற உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள்.

அத்தகைய பாச உணர்வின் சக்தியின் தன்மைதான், இவன் ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அந்த ஈர்ப்பின் நிலைகள் ஆற்றல் மிக்கதாகப் பெற்று, தான் செய்த தவறின் நிலைகளெல்லம் மாற்றி, தன்னை அறிந்து, மெய்ஞானிகள் கண்ட பேருண்மைகளை அறியும் நிலை அடைந்தான், வான்மீகி மாமகரிஷி.

ஆக மூடனாகவும், ஈவு இரக்கமற்றவனாகவும் இருந்த அந்த வான்மீகிதான், 
அந்த பட்சியின் பாச உணர்வு மூலமாக,
அகஸ்தியன் வெளிப்படுத்திய பேரண்டத்தின்
ஆற்றல்மிக்க சக்திகளைக் கவர்ந்து, 
தானும் அகஸ்தியனைப் போன்று மெய்ஞானியாகி, இராமாயண காவியத்தையே எழுதுகின்றான். 

நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். அந்த மகரிஷிகள் சென்ற பாதையிலே சென்று, அகஸ்தியனைப் போன்று, உலகைக் காக்கும் மெய்ஞானிகளாவோம், எமது அருளாசிகள். 

(பக்கம் 35-39)
இன்று,  நாம் எத்தனையோ ஆசைகள் கொண்டு, நாம் அப்படி வாழ்வோம், இப்படி வாழ்வோம் என்று மனக்கோட்டையைக் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.

நாம் எப்படித் தான் வாழ்ந்தாலும், மாடமாளிகை, கோபுரம் கட்டினாலும், இந்த உடலுக்குள் வாழ்வது சிறிது காலமே.

ஆக, இந்த உடலிலிருந்தே, விண்ணுலகின் ஆற்றலை வான்மீகி எப்படித் தான் அறியாத நிலைகளில் இருந்தாலும், சந்தர்ப்பவசத்தால், அவர் ஏற்படுத்திக் கொண்ட அந்த உணர்வின் தன்மை, விண்ணுலகத்தின் ஆற்றலைக் காட்டி, அன்று அகஸ்திய மாமகரிஷி வெளியிட்ட உணர்வுகள், அவர் உணர்வுகளே சிக்கப்பட்டது.

இதைப் போன்றுதான், அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு, அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றோம். அந்த சந்தர்ப்பம்தான், நாம் இருக்கும் இந்த தியானம்.

இந்த சந்தர்ப்பத்திலேயே இந்த உடல் இருக்கும்போதே, இந்த உடலுக்குள் நல்ல உணர்வின் ஆற்றல் இருக்கும்போதே, அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை, அந்த உணர்வின் ஆற்றலை நாம் பெற்று, அதன் வழிகொண்டு, விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.

அதைப் பெறுவதற்குண்டான நிலையே இன்று நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, அவர் ஆற்றலின் துணை கொண்டு  மற்ற மகரிஷிகளின் அருள் சக்தியை,  நாம் பெறமுடிகின்றது.

ஆக, அந்த சக்தியினுடைய தன்மையை நாம் பெற்று, நாம் விண்ணுலகம் செல்லும் நிலையில்,
எந்த ரிஷியினுடைய தன்மை,
எங்கு இருக்கின்றதோ,
அங்கே தான், நாம் செல்ல வேண்டும்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நமக்கு அவகாசமே இல்லை. ஆகையினால், இந்த தியானம் எடுத்துக் கொண்ட அனைத்து அன்பர்களும், உங்களுக்குக் கொடுத்த இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் சங்கடமோ, துன்பமோ, தொல்லைகள் ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் சக்திகள், உங்களுக்குள் ஊடுருவி இயக்காவண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், சில உண்மையினுடைய நிலைகள், இன்று அகஸ்தியருடைய தன்மைகளில் நாம் எவ்வாறு பெற்றோம்? என்று அனைத்தும் உங்களிடம் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

குருநாதர் கொடுத்த அந்த அருள்வழிப்படி,  அகஸ்திய மாமகரிஷி பெற்ற அருள் வழியினுடைய தன்மையில், அவர் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம். இதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டு, அந்தப் பேருண்மையை உங்களுக்குள் அறிவதே நலம்.

சாதாரணமாக, எந்தெந்தப் பேருண்மையாக இருந்தாலும்,
பெரும்பகுதி நீங்கள் பெறுவதற்குண்டான தகுதி,
அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிதான்
நாம் எடுக்கும் தியானமும், சில உபதேசங்களும்.
பேருண்மையினுடைய நிலைகளைப் பெறுவது அனைத்தையும் யாம் சொல்லிவிட்டால், நாம் தெரிந்து கொண்டோம், என்ற அலட்சியம் நிச்சயம் தெரியும்.

ஆனால்,  தெரிந்துவிட்டோம் என்ற நிலைகளில் வாய்ச் சொல்லால்தான் பேசமுடியுமே தவிர, அந்த உணர்வின் ஆற்றல், நமக்குள் வராதவண்ணம் போய்விடும்.

ஆகையினால்தான், பெரும்பகுதியான நிலைகளை, அவ்வப்போது உங்களுக்குள் அந்த மெய்வழியின் உணர்வைப் பதியச் செய்வதற்கு, ஒவ்வொரு உபதேச நிலையும் ஏற்படுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, அந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று, அந்த சந்தர்ப்ப நேரங்களில் தான்,  உங்களுக்கு யாம் செலுத்த முடிகின்றது.

விண்ணிலிருந்து வெளிப்பட்ட,
அந்த ஒரு அணுவின் பெயர்தான் நாரதன்.
ஒரு அணுவிற்குள், ஒரு குணத்தின் தன்மை இணைந்தவுடன்,
அந்த நாதம்தான்,
நாம் சுவாசிக்கும், ஒரு உணர்வின் அணுவுக்குள் இருக்கக்கூடிய
அந்த உணர்வின் மணம் தான்,
நாதமாக இயக்குகின்றது.
அதனால்தான், சரஸ்வதிக்கு வீணை.
அதே போன்று  நாரதருக்கும் வீணை.
ஆக, அவர் ஏழு,  இங்கேயும் ஏழுதான்.
அந்த நாரதர் என்ற மெய் ஒளியின் தன்மையை,
பேரண்டத்தின் உணர்வின் தன்மையை,
அந்த சப்தரிஷி மண்டலங்களில் உருப்பெற்று,
அதிலிருந்து வெளிப்படும்
அந்த உணர்வின் மணம் தான், நாரதன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி, நெருப்புக்குச் சமம். அவர்கள் உணர்வின் எண்ணங்கள் ஊடுருவி, எதையும் சாதிக்கவல்ல வல்லமை பெற்றவர்கள்.

ஆக வல்லமையான அந்த உணர்வின் சக்தி, அவர்கள் வாழ்ந்த காலங்களில் இட்ட மூச்சலைகளை, சிறுகச் சிறுக நாம் பெற்று, அந்த உணர்வின் சத்து கொண்டுதான் நமக்குள் வளரவேண்டும்.

ஆக, நாம் இந்த குறுகிய காலத்திற்குள், நாளைக்கு வரக்கூடிய விஞ்ஞான உலகத்திலே, மனிதனுடைய எண்ண அலைகள் அழியக்கூடிய இந்த தருணத்தில், அந்த ஞானியின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து, நம்மைக் காத்து, இந்த உடலுக்குள் இந்த உணர்வின் சக்தியால் உயிராத்மாவைக் காத்து, நாம் விண்வெளி செல்ல வேண்டும், எமது அருளாசிகள்

(பக்கம் 60)
நம் உடலில் நம்மை அறியாது வந்த நோய்களைப் போக்கும் நிலையாக, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிவிட்டு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்தும் பெறவேண்டுமென்று, உங்கள் நினைவை உடல் முழுவதும் செலுத்திவிட்டு, ஒரு நிமிடம் கண்ணை மூடி தியானமிருங்கள்.

இருந்துவிட்டு, கண்ணைத் திறந்தவுடன், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் என் உடலிலிருக்க கூடிய நோய்கள் நீங்கி, நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கியிருங்கள். இதை வழக்கமாக கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

ஏனென்றால், தியானம் செய்யும் முறையே இதுதான். உங்களை அறியாமல், வந்த துன்பங்களை நீக்கிடும் நிலையாக, இந்த தியானத்தின் மூலமாக,
உயர்ந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி,
உங்கள் மூச்சினால்தான்,
உங்கள் உடலுக்குள் இருக்கக் கூடிய நோய்களைப் போக்க முடியும்.

எந்த மூச்சினால், உங்களுக்குள் நோய் வந்ததோ, 
அதே போன்று, ஞானிகள் மூச்சலைகளை
உங்களுக்குள் செலுத்தும்போது,  
உங்களுக்குள் வந்த நோய்கள் போக இது உதவும். ஆகையினாலே, இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வாருங்கள். எமது அருளாசிகள்.
(பக்கம் 65)
சூரியனின் காந்தசக்தி, எந்த அளவிற்கு அதிகமாக இருக்கின்றதோ, அந்த அளவிற்குக் கரண்டை (electriciity) உற்பத்தி செய்யலாம். காந்தம் குறைந்து விட்டால், கரண்ட் குறைந்துவிடும். 
இதைப் போல,
நம் உடலுக்குள் காந்தத்தைக் கூட்டும்போது,
நம் உயிரின் ஓட்டம்
அந்த இயக்கத்தின் நிலைகள் கொண்டு,
நமக்குள் கரண்ட் அதிகமாக உருவாகின்றது.
அப்போது நம் உடலுக்குள் எந்த குணங்களின் செயல் இருக்கின்றதோ, அது, அதற்குத் தக்கவாறு இயக்குகின்றது.

ஒரு தொழிற்சாலைக்குள் பெரிய மோட்டார் இருக்கும்போது, அதை இயக்கவேண்டுமென்றால், அதற்குத் தகுந்த டிரான்ஸ்பார்மர் (transformer) தேவை,  அதற்குத்தக்க கரண்ட் தேவை. 

அப்படி டிரான்ஸ்பார்மர் இருந்தால்தான், அதை வைத்துப் பல இயந்திரங்களை இயக்கக்கூடிய சக்தி, அதற்கு உண்டு. அதைப்போல, மெய்ஞானியின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொண்டால், அந்த அருள் சக்திக்குத் தகுந்த சக்தியை, நாம் கூட்டிக் கொள்ள வேண்டும்.

(பக்கம் 66-69)
உதாரணமாக, பட்சிகளுக்கோ மிருக ஜந்துகளுக்கோ, எந்த எண்ணமும் இல்லை. எந்த எண்ணமும் இல்லாத மிருகங்களிடத்தில், மனிதன் நாம் எதை எண்ணி எந்த உணர்வுடன் நாம் அதனுடன் பேசுகின்றபோது, மிருகங்களோ, பட்சிகளோ கூர்ந்து கவனிக்கும்போது, நம் உணர்வின் ஒலிகள், அதன் உடலில் ஈர்க்கின்றது என்று அர்த்தம்.

அப்படி ஈர்த்தவுடன், அதன் உணர்வுக்குள் அது பதிவாகி விடுகின்றது. முதலில் பயத்தால் அது எடுத்துக் கொள்ளும். என்ன செய்வார்? என்று பார்க்கின்றது. சிறுகச் சிறுக நம் செய்கையை பார்த்தவுடன், அது தனக்குள் பதிவு செய்து பயமற்ற நிலைகளில் இருக்கின்றது.

அப்படி நாம் எதையெல்லாம் பேசுகிறோமோ, அந்த உணர்வின் தன்மை அதன் உடலில் பதிவாகின்றது. பதிவானபின், மனிதன் எவ்வாறு செய்தானோ, அதன் நிலைகளில் அந்த உயிரினங்கள் செயல்படத் தொடங்கிவிடுகின்ற்து. ஏனென்றால், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வின் நிலைகள், அந்த மிருகங்களையும் பட்சிகளையும் இயக்குகின்றது.

இதைப் போன்று, மனிதர்களாக இருக்கும்போது மெய்ஞானிகள் எடுத்த மெய் உணர்வின் ஆற்றல்களை, அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ, அந்தச் சக்தியை மது குருநாதர், மக்குக் கொடுத்த அந்த ஆற்றலின் வழிப்படி, முறைப்படி யாம் எடுத்து, அந்த சக்தியை யாம் பெற்றோம்.

அதைப் பெற்றபின், அதைப் பெறும் வழியை, யாம் கண்டுணர்ந்தோம்.
அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டுமென்று,
அதே உணர்வின் சக்தியை,
நீங்கள் செவி கொண்டு கேட்டு
அந்த உணர்வின் அலையை, நீங்கள் பதியச் செய்யும்போது,  இது உங்களுக்குள் பதிவாகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் வரக்கூடிய, இன்னல்கள் எதுவாக இருந்தாலும், அதை நீக்க உங்கள் எண்ணத்தை உங்களுக்குள் ஓம் ஈஸ்வரா  என்று நினைவைச் செலுத்தி, இந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டுமென்று ஏங்கி எடுக்கப்படும் போது,
எத்தனை மகரிஷிகளின் அருள்சக்தியை,
நமக்குள் சேர்த்திருக்கின்றோமோ, 
அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு, 
அதே சக்தியினுடைய தன்மையை, நீங்கள் நுகர நேருகின்றது.

அப்படி மகரிஷிகளின் அருள்சக்தியை நுகர நேரும்போதுதான்,
உயிருக்குள் பட்டவுடன்,
அந்த உணர்ச்சியின் எண்ணங்கள், நமக்குள் ஆத்திரமோ, கோபமோ, பயமோ இவைகளைத் தடைப்படுத்துகின்றது. அந்த உணர்வின் சத்து, நமக்குள் உமிழ்நீராகச் சேர்ந்து, நமக்குள் ஆற்றல் மிக்க சத்தாக விளைகின்றது.

அவ்வாறு விளைந்த மகரிஷிகளின் உணர்வின் சத்துதான், இந்த மனித வாழ்க்கையில், ஒவ்வொரு நிமிடமும் நம் உடலுக்குள் விளைந்து அது நம் உயிராத்மாவுடன் இணையப்படும்போது,
அவர்கள்,  எவ்வழிகளிலே விண்ணிலே சென்றார்களோ,
அவ்வழியின் ஆற்றலால், நாம் வளர, வளர,
நமக்கே தன்னிச்சையாக அது புலப்படும்.
நாம் எண்ணிய நிலைகள் எல்லாவற்றையும்,  நமக்குள் சேர்க்கும்.

எனவே நாம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவோம். நாம் எல்லோரும் தொழில் செய்து பிழைக்கக் கூடியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொண்டு நம்மைத் தாக்கும் மனித வாழ்க்கையில், புவி ஈர்ப்பின் பிடிப்பில் உணர்ச்சிகள் நம்மைத் தாக்கும்போது, அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் எடுக்க வேண்டிய முயற்சி அந்த ஆத்ம சுத்தி. இந்த ஆத்ம சுத்தியை எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது, நாம் ஒருவருக்கொருவர் திட்டிப் பேசிக் கொண்டதை நம் நண்பன் வந்து அதை ஞாபகப்படுத்தியவுடன், நமக்குள் உணர்ச்சிகள் தூண்டி, கோபம் ஏற்பட்டு, அந்த ஆத்திரமான கோப உணர்ச்சிகளை தூண்டச் செய்கின்றது.

அதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட இந்த தியானத்தின் நிலைகள், அப்படி மனித வாழ்க்கையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மை தீய செயல்கள் செயல்படுத்தும் போது,
அடுத்த நிமிடமே நாம் நினைவு கொண்டு,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டுமென்று,
உயிருடன் தொடர்பு கொண்டு ஈஸ்வரா என்று
புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டுமென்று
ஈர்க்கும் நிலைக்கு வந்துவிட்டால்,
நாம் ஒவ்வொரு நிமிடமும், இந்த மனித வாழ்க்கையில், மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறமுடியும், எமது அருளாசிகள்.
DSC00036.JPG