ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2012

சொந்தமில்லாததற்கு, "ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்?”

ஒரு சமயம், நான் காட்டுக்குள் செல்லும் பொழுது, எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது. அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது. என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே, அவர்களை நான் எப்படி பாதுகாப்பது? அவர்கள் என்ன ஆனார்களோ? என்ற இந்த எண்ணம் எண்ணப்படும் பொழுது, இமயமலையிலே நான், இதே மாதிரி, பனி உறையும் தன்மையிலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார்.

ஆனால் அதே சமயம், குருநாதர் சொன்ன நிலையை மறந்தபின், எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை. அவர் சொன்ன உணர்வை நான் எடுத்தேன் என்றால், என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது. ஆனால், குடும்பப் பற்றை நான் எடுக்கும் பொழுது, இந்த குளிரின் தன்மை அதிகமான பின், உடலே இறையத் தொடங்கிவிடும். இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும். பின், யாம் மடிந்துவிடும் நிலை வருகின்றது.

ஆகவே, என் ஆசை எதிலே நிற்கின்றது? என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம்,
நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய், இந்த உடலை விட்டுப் போய்விட்டால், நீ எதை செய்யப் போகின்றாய்?
ஆக இது, முன்னாடி இருந்தவர்கள் (வாழ்ந்தவர்கள்),
ஆசைப்பட்டவர்களெல்லாம் இருக்கின்றனரா?

இந்த வாழ்க்கையில் உனக்கு பொன்னடி பொருளும், எது சொந்தமாகின்றது? எதுவுமே சொந்தமில்லை. ஆக,
சொந்தமில்லாததற்கு,
ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்?

மேலும், குருநாதர் என்னிடம், அவர்கள் நலம் பெறவேண்டும், அருள் ஒளி பெறவேண்டும், அவர்கள் வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து. இந்த உணர்வின் நினைவாற்றல், அவர்களை இயக்க உதவும், அது, வலுவான நிலைகளை, அங்கே உருவாக்கும்.

நீ இங்கிருக்கும் நிலைகள் வேதனையும், வெறுப்புமேயானால், உன் உடலைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இது பாயும்.

நண்பனுக்குள், நன்மை செய்தான் என்று எண்ணும்போது, விக்கலாகின்றது, நன்மை நடக்கின்றது. நண்பனுக்குள், பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது, எனக்கு துரோகம் செய்தான், உருப்படுவானா என்று எண்ணினால், உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும், அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது. ஆகவே,
உன் உயர்ந்த உணர்வின் தன்மை
உன் மக்கள் பெறவேண்டும் என்றும்,
அருள் ஒளி பெறவேண்டும் என்று அருளை நினை.
உனக்குள் பெருக்கு, உணர்வைப் பாய்ச்சு.
இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை,
அவர்களுக்கும் சொந்தமில்லை.

இன்று எந்தச் செல்வம் தேடி வைத்தாலும், இப்பொழுது உன் உயிர் இறைந்தது, நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால், இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா? அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா? என்றும்,
இந்த உணர்வை, நீ இழுக்கப்படும் பொழுது,
எதை,  நிலை கொள்ளவேண்டும்?
எவ்வாறு, நீ இயக்க வேண்டும்?
என்பதை, குருநாதர் அங்கே தெளிவாக காட்டுகின்றார்.

   ஆகவே,  இந்த உடல் வாழ்க்கையில், சொந்தமில்லாத உடலுக்காக, நாம் சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை.
ஆக சொந்தம் கொண்டாட வேண்டியதெல்லாம், 
அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து,
இந்த உடலே,
உணர்வுடன் ஒளியின் உணர்வாகப் பெறும் அதைச் சொந்தமாக்க வேண்டும்.

பேரொளி என்ற நிலைகள், அகண்ட அண்டத்தையும்,
நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வை,
நமக்குள் என்றும் கூட்டிடும்
அந்த அருள் ஒளி என்ற உணர்வினை
நமக்குள் சொந்தமாக்கும் உணர்வினை
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு,
கார்த்திகேயா, தெரிந்திட்ட உணர்வு கொண்டு,
நஞ்சினை நீக்கி, அருள் ஒளி என்ற நிலையில் உருவாக்கி
என்றும் பேரின்ப நிலைகளாக,
நாம் நுகரும் உணர்வை, நம் உயிரான ஈசன் உருவாக்குகின்றான்.

ஆக, ஈசனுடன் சேர்ந்து, இந்த உணர்வின் தன்மை, என்றும் ஒளி என்ற உணர்வை, நாம் ஏகாந்த நிலைகள் கொண்டு, பிறவியில்லாத நிலை என்று அடைதலே, நமது கடைசி எல்லை.

ஆகவே, அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்து, அவர்களை இயக்க உதவும்.

அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று வேதனைப்பட்டால், உன்னையும் அழிக்கும். அதே உணர்வுகள் அவர்களையும் அழிக்கும். ஆக நீ எண்ணியது எதுவோ, அதுதான் நடக்கின்றது.

அவர்கள் வேதனைப்படுகிறார், துன்பப்படுகிறார் என்று எண்ணும் பொழுது, அவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதே துன்பம் உக்குள்ளும் விளைகின்றது.

ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். அவர்கள் அருள் ஒளி பெறவேண்டும், நலம் பெறவேண்டும் என்ற, இருளை நீக்கிடும் உணர்வை எடுத்தால், உன் உயிரான ஈசன் அதையே உருவாக்குகின்றான், அதன் வழி நீ அதுவாகின்றாய். அவர்களும் அதன் நிலை பெற்று, அவர்களும் நலமாவார்கள். ஆகவே, இதைப் போல மறந்திடாது
இந்த உடலின் சொந்தத்தை, நீ கொண்டாடாதே, என்றும், அருள் ஒளி என்ற சொந்தத்தை அது வளர்த்திடும் உணர்வை, நீ, உனக்குள் ஒளியின் சரீரமாக உருவாக்கு. பிறவியில்லா நிலை என்ற நிலை அடை.

இந்த சொந்தமில்லாத உடலுக்கு, நீ ஏன் சொந்தம் கொண்டாடுகின்றாய்?  இந்த உடல் என்ற நிலைகளில், வளர்த்த செல்வம் எதுவும் நம்முடன் வருவதில்லை. அதே சமயம், நல் உணர்வு கொண்டு என் குழந்தை சீராக வளரவேண்டும், அருள் ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கினால், அதன் உணர்வுகள், அவன் அந்த அருளைப் பெறும் சக்தியும், கொடுத்த, தேடிய செல்வத்தையும் காப்பான்.

ஆக  நீ, அந்த வேதனை என்ற உணர்வெடுக்கும் போது, இதே உணர்வு தந்தை என்ற நிலையில் எண்ணினால், உன் குழந்தையும் இந்த வேதனையைத் தான் சுவாசிக்கும். அதில் வந்த செல்வத்தைக் காக்கும் திறன் இழந்துவிடும். அவனும் அனுபவிப்பதில்லை. 

ஆகவே, நீ எதனை சொந்தமாக்கப் போகின்றாய்? என்று, இவ்வாறு அந்த இமயமலையில், பல உணர்வுகளை அறிவதற்காக அங்கே அனுப்பி இத்தகைய பாடல்களைப் பாடுகின்றார்.

ஆகவே, நாம் என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை, அதைச் சொந்தமாக்குவோம்.  

நம் உயிரான ஈசனுடன் ஒன்றி வாழ்வோம். நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அதன் உணர்வின்படியே நம்மை இயக்குகின்றான், என்று இப்பொழுது உணர்ந்தோம்.

இனி அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்ப்போம். என்றும் ஏகாந்த நிலையாக, பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைவோம்.

நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்,
என்றும் நஞ்சு கொண்டோர் உணர்வுகள், நீங்க வேண்டும்,
என்றும் அருள் ஒளியை நமக்குள் பெற்றோம் என்றால்
நம் பார்வை, பிறருடைய நஞ்சை போக்கும்.
அவருடைய நஞ்சின் தன்மை, நமக்குள் வராது காக்கும்.

ஆகவே, அருள் ஒளி பெறுவோம்.
இருளை அகற்றும், அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக,
என்றும் எகாந்த நிலை, என்ற நிலையில் வாழும்
அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

என்றும் நிலைகொண்டு,
அந்த அருள் உணர்வின் சக்தியை  நம்முடன்,
உயிருடன் ஒன்றியே, நிலைத்தே வாழ்வோம்.
அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம்.
என்றும் எதனையும்,
அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.

பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
பகைமையான உணர்வுகள் சேராது,
அருள் ஒளி என்ற உணர்வை,
நமக்குள் உருவாக்குவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…. ஓம் ஈஸ்வரா குருதேவா…. ஓம் ஈஸ்வரா குருதேவா….