ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2020

உறக்க நிலை... மயக்க நிலை... உடலை விட்டுப் பிரிந்த நிலை இவைகளில் மனிதனின் எண்ண ஓட்டம் எப்படி உள்ளது...?

நம்முடைய எண்ணம் ஓடிக் கொண்டே உள்ளது உடல் உறங்கும் வரை.
 
உறக்கத்தில் உடலையும் எண்ணத்தையும் மறந்துள்ள தன்மையில் கனவுகள் சில நேரம் நமக்கு வருகின்றது. எல்லாக் கனவுகளும் மீண்டும் நம் நினைவுக்கு வருவதில்லை.
 
உறக்கம் இல்லாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலும் உடல் உறங்கும் வரை நம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே தான் உள்ளது.
 
சிலருக்குச் சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் எண்ணத்தின் ஓட்டமில்லை. மயக்கம் தந்து (ANESTHESIA) உடல் உபாதைகளை நீக்க அறுவை சிகிச்சைகளைச் செய்யும் வேலைகளில் நம் எண்ணத்தின் ஓட்டம் மறந்து விடுகின்றது.
 
ஆக விழிப்புடன் உள்ள நேரங்களில் தான் மனிதனின் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ளது. உடல் உறக்கத்தில் எண்ணத்தின் ஓட்டம் இல்லை. சாதாரண வாழ்க்கை நிலையில் நாம் வாழ்ந்து இறக்கும் வரையிலும் இப்படித்தான் செயலாகின்றது.
 
1.உறக்க நிலையிலே எண்ண ஓட்டம் இல்லாத பொழுது
2.உடல் இறந்த பிறகு ஆன்மாவின் எண்ணம் செயலாகுமா…?
3.ஆன்மாவின் எண்ணம் செயலாகக் கூடிய வழி முறை யாது…?
 
சாதாரணமாக இறந்த மனிதனின் ஆன்மா அது உடலை விட்டுப் பிரிந்த பிறகு அந்த ஆத்மாவின் எண்ண ஒலிகள் ஜீவன் பிரிந்த பிறகு செயலாக்கும் சக்தியின் வீரியம் குறைந்து விடுகின்றது.
 
உடலில் இருக்கும் பொழுது தான் ஏற்படுத்திக் கொண்ட வலு நிலைக்கொப்ப அந்த ஆத்மா இந்தப் பூமியின் சுழற்சியில் அதனுடைய தன்மைக்குகந்த வலுவில் தான் சுழன்று கொண்டிருக்கும்  தன் ஆசை நிலைக்கொப்ப...!
 
அதாவது அதனுடைய செயலுக்குகந்த ஆத்ம சந்திப்பு ஏற்படும் காலம் வரை அப்படியே தான் சுழன்று கொண்டிருக்கும். தானாக மாற்ற முடியாது.
 
உடல் விழிப்பு இருந்தால் தான் எண்ண ஓட்டத்தின் கதியின் செயலாக சரீர இயக்கத்தின் நிலையே உள்ளது.
 
அப்படியானால்
1.உறங்கா நிலை…
2.விழிப்பு நிலை… என்பதின் பொருள் யாது…?
 
உடல் உறக்கமற்ற நிலையில் எண்ணத்தின் விழிப்பு நிலையில் இந்தச் சரீர வாழ்க்கைக்கு ஒத்த அமைப்பு கொண்டது தான் அந்த “எண்ணத்தின் ஓட்டம்...!”
 
ஆகவே “ஆத்மாவின் விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலுவால் தான்...” என்றுமே நாம் அழியாத வாழ்க்கையாக என்றும் பதினாறு என்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
 
இந்த உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உடலுடன் வாழ்ந்தாலும் 
1.வாழும் காலத்தில் மெய் ஞானத்தை அறிய விரும்புவோருக்கு
2.உடல் உறக்கத்திலும் ஆத்மாவின் விழிப்பால் எண்ணத்தின் ஓட்டத்தைக் கொண்டு
3.என்றுமே விழிப்பு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
4.ஒளியாக... ஜோதி நிலையாக அறியும் நிலைக்கு
5.ஆத்மாவின் எண்ணச் செயல் செயலாக்கும் அந்தத் தெய்வ நிலைக்கு
6.அஷ்டமா சித்தின் சக்தியைப் பெற முடியும்.

ஞானப் பாதையில் மெய் ஞானிகளைப் பற்ற (பிடித்துக் கொள்ள) வேண்டிய முறை

மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி. ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது ஒரு கம்பியைப் பிடித்து அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.
 
அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை. ஏனென்றால் அது ஒரு மலை உச்சி.
 
அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்... தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.
 
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே... எப்படி இருக்க வேண்டும்...?
 
அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.
 
அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்...! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.
 
இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
 
இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.
 
அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.
 
ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
 
சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்...!”
 
காரணம்... அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது. சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது.. நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது... அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.
 
ஆகவே... துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை...!
 
உயிர் ஒளியானது... எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.
 
எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.
 
குருநாதர் எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார். அதன் வழியிலேயே தான் உங்களுக்குள் பதிவாக்குகிறேன். இதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானம் உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது.
 
1.அந்த ஞானத்தின் வழி கொண்டு தான்
2.அருள் ஞானத்தை வைத்து இருளை நீக்கிடும் அந்த மெய் ஞானிகளாக நீங்கள் மாற முடியும்.

December 25, 2020

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது...!”
 
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை
1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.
 
நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.
 
அப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாக தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்
1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.
 
குருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.
 
1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது...?
2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது...?
3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது...? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது...?
4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது...?
5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது...?
6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்...? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.
 
1.நாம் தவறு செய்கின்றோமா...?
2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா...? என்று
3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
 
ஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.
 
கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்று கண்களின் ஆற்றலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அது போல் யாம் உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்மையாகப் பதிவாக்கி கொண்டால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கணக்குகள் உங்களுக்குள் கூடும்.
 
அந்தக் கணக்கின் பிரகாரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவாகி அதன் வழி வாழச் செய்து தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள முடியும்.
 
1.உங்கள் உயிர் கடவுள்
2.உங்கள் உடல் ஆலயம்
3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது
4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்...
5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.
 
அத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.
 
ஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.
1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து
2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்
3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.
 
நீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.
 
எத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்... பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்... என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.
 
அதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.
 
இந்த உடல் நமக்குச் சதமல்ல... ஆனால் உயிர் அழியாதது....! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை  
2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்... உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் வரும் “இன்னல்களை” எப்படி எதிர் கொள்ள வேண்டும்...? என்பது ஈஸ்வரபட்டர் சொன்னது

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.
 
வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.
 
இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.
 
1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க.. 
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் “ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
 
அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.
 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.
 
மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று என்ன செய்தார்கள்…?
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்றால் மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள். 

பால்வெளியில் படர்ந்துள்ள உண்மைத் தன்மைகளை உணரும் சக்தியாக ஆதிசக்தியின் சக்தியை மெய் ஞானிகள் அன்று இப்படித்தான் கண்டார்கள்.

December 24, 2020

திட்டியவன் உணர்வு நம்மை இயக்குவது போன்றே மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கச் செய்ய முடியும்

அடிக்கடி நான் (ஞானகுரு) உங்களுக்கு வற்புறுத்துவது எல்லாம் இது தான்...!
1.அழியாப் பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத் தான்
2.மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே உபதேசிக்கின்றோம்.
 
ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கஷ்டங்கள் வந்தால் அதை மாற்றும் தன்மைக்கு நாம் வரவேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வே அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
 
1.நாம் நுகரும் உணர்வு எதுவோ இந்த உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் வருகிறது.
2.நாம் பேரருள் பெறவேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அரங்கநாதங்களாகி
3.தீமைகள் அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்... ஆண்டாள்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.
 
இதை நீங்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் காலை துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 
என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தை கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். இந்தப் பதிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் நலமாக வேண்டும் என்று இதை எண்ணி எடுத்துக் கொண்டாலே போதும்.
 
1.இந்த உணர்வுகள் உங்கள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்களாகின்றது
2.ஏங்கிப் பெறும் போது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயக்குகிறது.
3.இந்த உணர்ச்சிகள் வரும் பொழுது உங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது குறையும்.
 
ஆனால் இதை விடுத்து விட்டு எனக்கு வேதனையாக இருக்கின்றது... என்னால் முடியவில்லை...! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.
 
நோயாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுச் சொன்னால் அதைக் கேட்டு அதற்கு மருந்து கொடுக்கும் நிலைக்கு இல்லை. “மருந்து கொடுத்து நோயை நீக்கும் வழியைச் சொல்ல வரவில்லை...”
 
மருந்துக்கு முன்னாடியே...
1.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல்
2.அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வைக் கிரகித்து இழுக்கும் வலிமை கிடைக்கின்றது.
4.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.
 
அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்கு இத்தனை உபாயங்களும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
 
கோவிலுக்குச் சென்று அழுது புலம்பி வரம் கேட்பது போல் இல்லாது... “ஈஸ்வரா...” என்று உங்கள் உயிரை எண்ணி அருள் உணர்வுகளை எடுக்கும் பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும்.
 
ஏனென்றால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகிறது. அந்த உணர்வுகள் தான் உடல் முழுவதும் படர்கிறது. அது தான் உங்களை ஆட்சி புரிகிறது...! என்று பல முறை உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன். அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை.
 
ஏனென்றால் யாரோ செய்வார்... எவரோ செய்து கொடுப்பார்...! என்று தான் எண்ணுகின்றோம்.
 
உதாரணமாக ரோட்டில் நடந்து செல்கிறோம். ஒரு மாட்டைப் பார்க்கிறோம். அழகாக இருக்கிறது என்று இரசிக்கவும் செய்கின்றோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் அந்த மாடு திடீரென்று நம் பக்கம் வெகுண்டு திரும்பினால் உடனே “ஆ...” என்று அலறுகிறோம்.
 
அந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு அந்தப் பயம் என்ன செய்கிறது...? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கிறது. அந்தப் பயத்தால் நம் உடல் நடுக்கமாகி அது அடங்கச் சிறிது நேரம் ஆகிறது.
 
ஆகவே நம்மை அங்கே எது இயக்குகிறது...? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்டிப் படைக்கின்றது.
 
இதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்... இருளை அகற்றும் அந்தப் பேரருள் பெற வேண்டும்... என்று ஏங்கினால்
1.அந்த உணர்வு உங்களுக்குள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் உணர்ச்சிகளாக உங்களை இயக்கும்.
2.நல்ல சிந்தனையும் நற் செயலும் வரும்.
 
இதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் சாமி செய்து தருவார் என்று என்னைத் தான் நம்புகிறீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதில்லை.
 
உங்களால் அந்த அருளைப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலே அந்த ஞானிகளின் உணர்வுகள் பரவி உள்ளது. அதை எடுக்ககூடிய எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
 
திட்டியவனை எண்ணியவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா. திட்டியவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் சோர்வடைந்து உங்கள் காரியங்கள் தடையாகிறது அல்லவா.
 
அதற்கு முன்னாடி நம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒருவன் திட்டி அதனால் நாம் சோர்வடைந்த பின் குழந்தையை இரண்டு சாத்து சாத்துவோம்.
 
முதலில் குழந்தையை அனுசரிப்போம். சோர்வடைந்த நேரத்தில் குழந்தை ஒரு பேப்பரைக் கிழித்துப் போட்டால் போதும்...! போங்கடா உங்களுக்கு இது தான் வேலையா...? என்று இந்தக் கோபம் நிச்சயம் வரும்.
 
எந்தக் குழந்தை மேல் மிகுந்த பாசமாக செல்லமாக இருந்தோமோ அந்தக் குழந்தை மீதே இந்த வெறுப்பு வரும்.
 
அந்த நேரத்தில் கோபிப்பது யார்..? சற்று சிந்தித்துப் பாருங்கள்...! அந்தச் சோர்வான உணர்வு இயக்கப்படும் பொழுது தன் குழந்தை மீது இருக்கும் பாசத்தைக் கூட மறந்து குழந்தையைத் தாக்கும்படி செய்கிறது.
 
இதைப் போல் தான் ஒரு தீமை செய்யும் உணர்வை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் இயக்கம் வளர்ந்து நம்மை நல்ல வழிக்கே விடுவதில்லை
 
1.ஆனால் நல் வழி வளர்க்கும் அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நம்மை நல்வழி நடத்தும்.

அஷ்டமி.. நவமி... தசமி...! என்று சொல்வதன் மூலக் கருத்து என்ன...? - ஈஸ்வரபட்டர்

நம் சூரியக் குடும்பத்தில் சூரியனை மையம் கொண்டு சுழன்று ஓடும் கோள்களும் அதன் உபகோள்களும் பூமியுடன் தொடர்பு கொண்ட 27 நட்சத்திரங்களும் ஒரு மண்டலம் 48 கோள்கள் கொண்டு ஒரு முழுமையாகின்றது.
 
இந்த வான இயலின் தத்துவத்தை அறிந்துணர்ந்து தன் எண்ணம் கொண்டு ஈர்த்திடும் உயிர் சக்தியின் மின் காந்தத் தொடர் கொண்டு பேரருள் பேரொளியாக அன்றே ஆனவர்கள் மாமகரிஷிகள்.
 
தனக்குப் பின் வரும் தன் இன மக்கள்
1.நல்ல எண்ணம் நல்ல சுவாசம் கொண்டு தியானத்தின் வழி பெறும் மார்க்கமாகவும்
2.மனித குலம் வாழ்ந்து நல்லாக்கம் பெற்றிடவும்
3.பேரானந்தப் பேரருள் சக்தியாகப் பெற்று ஆதிசக்தியில் கலந்திடவும்
4.அந்த மகரிஷிகள் காட்டிய தத்துவமே “நவஜோதித் தத்துவம்...!”
 
இராம நவமி என்றும் கோகுலாஷ்டமி என்றும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இருந்தாலும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடத்த வேண்டிய கர்ம வினைச் செயல்களுக்கு “அஷ்டமி... நவமி...” என்று காலத்தைக் கணக்கிட்டு அன்று எந்தச் சுப காரியம் செய்யக் கூடாது...! என்கிறார்கள்.
 
அந்த நேரத்தில் அவதரித்த இராமனையும் கிருஷ்ணனையும் வணங்கிடும் செயலில் “மறைக்கப்பட்ட உண்மைப் பொருளே... நவ ஜோதியின் தத்துவமப்பா...!”
 
ஆனால் அந்த நவ ஜோதியைத் தன் உயிராத்மாவை ஜோதியாக்கும் செயலுக்குச் செயல்படுத்தும் ஒவ்வொருவருக்கும்
1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்...!
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா...!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.
 
நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது...! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்
4.நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர்.
 
ஜோதி நிலை - தசமி என்ற பத்தாவது நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட
3.5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.
 
அதே தத்துவத்தை... அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

December 23, 2020

ஒரு மண்டலம்... “48 நாள்...” என்ற தியானத்தை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதை நாம் அறிந்துள்ளோமா...? - ஈஸ்வரபட்டர்

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.
 
இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.
 
நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.
 
நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.
 
கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.
 
புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
 
ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,
 
இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும், 

இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.
 
ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு...!
 
1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக... படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்...!

ஈகோ (EGO) பிரச்சினையால் ஒவ்வொரு மனிதரும் எத்தனையோ துயரப்படுகிறார்கள்

நாம் நல்லதை எண்ணும் போது பிறிதொரு தீமை வந்தால் அந்த நேரத்தில் நமக்குள் (மனதில்) போர்கள் எப்படி வருகிறது…? தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கும் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் நமக்குள் எப்படிப் போர்கள் எப்படி நடக்கின்றது…?
 
கண்களால் பார்க்கும் உணர்வுகள் நாம் நுகர்ந்து உயிரிலே படப்படும் பொழுது இங்கே குருக்ஷேத்திரம்.
 
இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கும் போது…
1.நமக்குள் ஏற்கனவே இருக்கும் எண்ணத்திற்கு மாறான உணர்வை நுகரப்படும் போது
2.இங்கே போர் முறைகள் எப்படி வருகிறது…?
 
அந்தப் போர் முறை கொண்ட உணர்வுகள் அது இணைத்து அந்த உணர்வின் தன்மை உடலில் வரப்படும் போது நம் உடலில் நல்ல அணுக்களுக்கும் மற்றதுக்கும் போர் எப்படி வருகிறது...?
 
நம் உடலுக்குள் தீமைகள் எப்படி வருகிறது...? சிந்தனை எப்படி இழக்கப்படுகின்றது...? இதைப் போன்ற செயல்களை எப்படி மாற்ற வேண்டும்…? என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.
 
நாம் நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும்… பிறருடைய நிலை கௌரவர்கள்… “நான் எதை வளர்த்துக் கொண்டேனோ அதன் வழியே நான் வழி நடத்துவேன்…!”
 
நான் ஒருவனை நல்லவனாக எண்ணும் போது அந்த நல்லதின் தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதே சமயத்தில்…
1.நான் நல்லது என்று எண்ணிக் கொண்டு
2.பிறருடைய நிலைகள் என் வழிக்கு வர வேண்டும் என்று இதை எடுத்துக் கொண்டால் இது “ஈகோ…!”
 
அவன் சொல்வதை நான் என்ன கேட்பது...? அவன் சொல்வதை நான் ஏன் செய்ய வேண்டும்...? என்ற உணர்வு வந்தால்… இந்த ஈகோ வந்தால் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்..!
 
அவன் சொல்வதோ செய்வதோ நல்லதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது.
 
மனிதனாக வாழும் நிலையில் இந்தக் கௌரவப் பிரச்சினைகள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தான் இந்தக் கௌரவர்கள் என்ற நிலையில் கௌரவப் போர் நடத்தினார்கள் என்ற நிலையில் மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
 
இதை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
 
ஒவ்வொரு மகான்களும் அவர்கள் கண்ட பேருண்மையை மக்கள் எப்படிப் பெறவேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும்…? என்ற நிலையில் நமது நாடு மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தோன்றிய எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியுள்ளார்கள்.
 
ஆனாலும் இன்று மனிதனின் வேட்கை என்ன...?
 
நாட்டாசை வரப்படும் பொழுது தன் மதத்தைப் பெருக்கி விட்டால் தன் இணக்கத்திற்கு வந்து விடுவான் என்று செயல்படுகிறார்கள். அவன் தன் இணக்கத்திற்கு வரவில்லை என்றால் உடனே போர் முறை வருகிறது.
 
இப்படித்தான் அநாகரீகத் தன்மை தான் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
 
எப்படி வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் சென்றே தான் ஆகவேண்டும். எதன் உணர்வை இங்கே உடலில் வளர்த்தோமோ இந்த உயிர் வெளியே சென்ற பின் அசுர உணர்வு கொண்டு தாக்கி வாழும் மற்ற மிருக இனங்களாக நம்மை உயிர் உருமாற்றிவிடும்.
 
இந்தத் தருணத்திலிருந்து நாம் எப்படி மீள வேண்டும் சற்று யோசனை செய்து பாருங்கள். நாம் எத்தனை கோடிச் செல்வங்கள் வைத்திருப்பினும் அவைகள் நம்முடன் வருகின்றதா...?
 
அழகான உடலாக நாம் வைத்திருந்தாலும் அன்பு பரிவு கொண்டு பண்புடன் பிறரின் கஷ்டங்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அவனுடைய கஷ்டம் தான் நமக்குள் வந்து அவர்கள் பட்ட வேதனை தான் நமக்குள்ளும் வளர்கிறது.
1.நம் அழகான உடலும் குறைகிறது
2.தேடிய செல்வமும் அழிகிறது
3.கடைசியில் அதிக வேதனை என்ற உணர்வே வருகிறது.
 
எல்லோருக்கும் நன்மையைச் செய்தேன் எனக்கு இப்படி நிலை வந்தது என்று இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் என்ன நடக்கின்றது…?
 
இந்த வேதனை என்ற உணர்வை எடுத்தால் உடலுக்குப் பின் உயிர் நீ எதை வேதனைப்பட்டாயோ அதன் வழி கொண்டு
1.விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் அதிலே நீ சென்று அடங்கி 
2.அங்கே விஷத்தைப் பாய்ச்சி இரசித்து வாழும் உடலை (விஷ ஜெந்துக்களாக) அமைத்துக் கொடுக்கின்றது உயிர்.
 
அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.
 
இருக்கட்டும்… அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்ற உணர்வு கொண்டு நாம் இருந்தால் அதன் வழி பழி தீர்க்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
 
இதன் உணர்வை எடுத்துக் கொண்டால் பிறரை அழித்திடும் உணர்வு வருகின்றது. இந்த உணர்வுகள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நமக்குள்ளேயே கொல்கிறது.
 
கொன்று கொண்ட இந்த உணர்வின் தன்மை தான் இந்த உயிரிலே மிஞ்சுகிறது. இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் தருணம் அது தான் வருகிறது.
 
அப்படிபட்ட உணர்வுடன் வெளியே சென்ற பின் அடுத்து புலியின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே புலிக் குட்டியாக மாற்றி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் தன்மை வருகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.