ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2018

பாவ வினைகளை எப்படி நீக்குவது...?

“பஸ்ஸில் ஒருவன் அடிபட்டுத் துடிக்கின்றான்...” என்று வைத்துக் கொள்வோம். அடிபட்டு அவன் துடி துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள். அவனுக்குள் எத்தனை இம்சைகள் வந்ததோ பார்க்கும் பொழுது அது நமக்குள் வந்துவிடுகிறது.

“ஒருவன் ஆட்டைக் கத்தக் கத்த அறுக்கிறான்...” என்று வைத்து கொள்வோம், பார்த்தவுடன் முகதைச் சுளிக்கின்றோம். ஆட்டின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளி வருகின்றது.

ஆட்டை அறுப்பவன் செய்கின்றான் பாவம், நாம் பார்க்கின்றோம். ஆடு துடி துடிக்கும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்து விடுகிறது.

“மற்றொரு ஜீவனை நாய் கடித்துக் குதறுகிறது...” பரிவு மனம் கொண்ட நாம் துடிக்கும் உணர்வைப் பார்க்கின்றோம். அது நமக்குள் வந்துவிடுகின்றது.

1.கொன்று புசித்த உணர்வின் வேகமும் அலைகளாகப் படர்கின்றது
2.தாக்கப்படும் பொழுது துடி துடிக்கும் உணர்வும் அலைகளாகப் படர்கின்றது
3.இந்த இரண்டு உணர்வும் வித்தாகப் பாவ வினைகளாக இணைந்து நம் நல்ல குணங்களைக் கொன்று விழுங்கி
4,நம்மைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற சாப வினைகளையும் பாவ வினைகளையும் நீக்க வேண்டும் என்றால் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணிலே ஒளியாக இருக்கும் மகரிஷிகளின் ஆற்றலை நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலே வாழும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எளிதில் பருகுவதற்குத் தான் “விநாயகனை நாம் வணங்கும் முறையை” ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.

1.மண்ணுலகில் தான் வாழும் பொழுது
2.தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் நீக்கி
3.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
4.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.ஒவ்வொருவரும் தன் உயிரான ஈசனிடம் வேண்டுவதற்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

தீமையை விளைவிக்கும் உணர்வுகளில் இருந்து தப்புவதற்காக அந்த மகா ஞானியான அகஸ்தியர் அருளாற்றலை இது வரையில் எடுத்துக் கொண்டவர்கள் “எத்தனை பேர்...!” என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஏதோ சாமியிடம் (ஞானகுருவிடம்) சென்றோம். அவர் இரண்டு வாக்கைக் கொடுத்தால்
1.நம் குடும்பம் நன்றாக இருக்கும்...
2.தொழில் கிடைத்தால் நமக்கு நன்றாக இருக்கும்...! என்ற
3.இந்த நிலையில் தான் வருகின்றார்கள்.

யாம் உபதேசிக்கும் பொழுது அதிலுள்ள உள் கருத்தினை எடுத்து உங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் உட்கொண்டால் தான் அந்த ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குள் வரும்.

ஆகவே சாமி உபதேசிக்கும் ஞானிகளின் உணர்வுகளை நாம் ஏற்றுக் கொள்வோம். அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொள்வோம். நம்மை அறியாது வந்த தீமையைப் போக்குவோம் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையின் நிலைகள் எப்படி இயங்குகிறது என்பதை எமக்குக் கூறினார். பல கஷ்டங்களையும் பல இன்னல்களையும் செயற்கையாகவே உண்டாக்கினார். அந்த அனுபவரீதியில் தான் இயற்கையின் உண்மைகளைக் கண்டுணர்ந்தேன்.

1.அறியாது வந்த தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்,
2.தீமை உங்களை அணுகக் கூடாது.
3.உங்களுடைய பார்வையிலேயே தீமைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசிக்கின்றோம்,

குருநாதருக்கு “எல்லாமே தெரியும்...!” என்று சொல்வார்கள் – என்னுடைய விருப்பம் எது...!

சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பூமியில் படரப்படும் போது ஒரு செடியின் சத்தை அது கவர்ந்தால் எலக்ட்ரானிக்காக (உணர்வலையாக) மாற்றுகின்றது.

அந்தச் செடியின் சத்து எதுவோ அந்த மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

 அதே போல தான் உணர்வின் தன்மை எடுக்கப்படும் போது அந்த உணர்வின் அழுத்தமாக “எலக்ட்ரானிக்…” ஒவ்வொரு பொருளின் நுண்ணிய நிலைகளில் மோதப்படும் போது அதன் இயக்கமாக இருக்கின்றது.

நம்முடைய “பெரு மூளை” நாம் சுவாசிக்கும் போது அதில் வரும் (வண்டல்களை) தீமைகளை மறைக்கின்றது. அது தடுக்கின்றது. சளியாக மாற்றுகின்றது. உட்புகப்படும் போது வடிகட்டி அனுப்புகின்றது.

காற்றில் வரக்கூடிய நிலைகள் வேறு. இது உணர்வின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது காற்றலைகளாக மாறுகின்றது.

நாம் சுவாசித்தாலும் கண் புலன்களால் கவரும் உணர்வின் காந்தப்புலன் அறிவு அதைத் தனக்குள் எடுத்துப் பிரிக்கின்றது. பிரித்த உணர்வின் அணுக்கள் தனித் தன்மை வாய்ந்ததாகப் பரவுகின்றது.

மற்ற மனிதன் சொல்லும் உணர்வின் தன்மையைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அறிவு கவர்ந்து அதை நமக்குள் எடுத்த பின் இது சுவாசித்து உயிரிலே படுகின்றது.

உயிரிலே பட்ட பின் சிறு மூளைக்குச் செல்கின்றது. நாம் காந்த ஊசி என்று சொல்லுகின்றமே
1.உயிருக்கும் அதற்கும் தொடர்பு கொண்ட நிலையில் மோதுகின்றது.
2.அந்த உணர்வுகளை ஒலி பெருக்கியாக மாற்றி (AMPLIFY)
3.உணர்வின் ரூபங்களை (படமாக) நமக்குள் காட்டுகின்றது.
4.அதன் அறிவாக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் என்ற காந்தப்புலன் கொண்டு கவரப்பட்டாலும் அந்த உணர்வின் தன்மை லேசர் என்ற நிலைகளில் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

கிராமபோன் பெட்டிகளில் முன்னர் காந்த ஊசிகளை இணைத்தார்கள். இதே போல் ரேடியோக்களிலோ டி.வி.யிலோ இந்தக் காந்த ஊசிகள் உண்டு. (அந்த ஊசி போன்றல்ல)

எலக்ட்ரானிக்காக லேசர் (LASER) என்ற உயர் அழுத்தத்தைக் காட்டி எந்த உணர்வையும் இழுத்து அந்த ஒலி/ஒளி அலைகளைப் பரப்பும் நிலைகளையும் கவரும் நிலைகளையும் இயக்கும் நிலைகளையும் விஞ்ஞானிகள் கண்டுள்ளார்கள்.

நான் (ஞானகுரு) அதையெல்லாம் படிக்கவில்லை. விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கின்றேன். இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை.

விஞ்ஞானிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்…? என்று குருநாதர் அதைக் காட்டுகின்றார். அந்த வெளிப்பட்ட உணர்வின் எண்ண அலைகள் இங்கு பதிவு உண்டு. அதைப் பார்க்கலாம்.

தீமைகள் செய்வோர் உணர்வுகள் இங்கே நிறைய உண்டு. உங்களைப் பார்த்தவுடனே “இன்னென்ன தவறு செய்கிறீர்கள்… செய்தீர்கள்…!” என்று நான் சொல்லலாம்.

எனக்கு அது தலை வலியா…?

ஒருவர் செய்யும் தவறுகளைக் கூர்மையாகக் கவனித்தோம் என்றால் நம் உயிர் அதை எலக்ட்ரானிக்காக மாற்றி நமக்குள் பதிவாக்கி விடும்.

மற்றவர்களுடைய கெட்டதையெல்லாம்
1.அடிக்கடி நான் பார்த்து நுகர்ந்து அறிந்து கொண்டே இருந்தேன் என்றால்
2.அயோக்கியன் நம்பர் ஒன்றாகப் போய்விடுவேன்.

அதற்குப் பதிலாக கெட்டதையும் தவறுகளையும் அகற்றச் செய்யும்
1.அருள் ஞானிகளின் உணர்வை எனக்குள் திரும்பத் திரும்பப் பதிவாக்கி
2.அந்த அருள் உணர்வுகளை எனக்குள் வளர்த்துக் கொண்டால்
3.கெட்டதை நீக்கும் ஆற்றலாக  எனக்குள் வளரும்.

குருநாதர் எனக்குக் காட்டியது அது தான்…!

சில பேர் நினைக்கலாம்…. சாமி ஏன் எங்கள் கஷ்டங்களை எல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாது..! தெரிந்து எங்கள் கஷ்டத்தை நீக்க உதவி செய்யலாம் அல்லவா…!

என்று. இவருக்குத் தெரிகின்ற கஷ்டத்தை எல்லாம் என்னிடம் கேட்டால் நான் பதிவாக்கி இருந்தால் ஒவ்வொருத்தர் கஷ்டத்தையும் கேட்டால் என்னிடம் என்னென்ன கஷ்டம் எல்லாம் பதிவாகும்?

எல்லாம் சாமிக்கே தெரியும். சில பேர் சொல்வார்கள்.

சில சாமியாடிகள்... ஜோசியர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் நாம் சென்றால்
1.உங்களைப் பற்றி எல்லா விபரமும் தெரியும்
2.எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்றும் எனக்குத் தெரியும்
3.உங்கள் கஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்கள்.

அப்பொழுது அவர்கள் பெரிய மகானாகி விடுவார்கள். அந்த மகான் கடைசியில் என்ன ஆவார்...!

மற்றவர்கள் கஷ்டத்தையெல்லாம் நுகர்ந்து அறிந்து கொண்டார்கள் அல்லவா...! அவர்கள் உடலில் அந்த விஷம் அதிகரித்துக் கடைசியில் பாம்பின் உடலிலும் விஷ ஜெந்துக்களின் உடலாகவும் பூத கணமாகவும் தான் ஆக முடியும்

நான் அப்படி மகான் ஆகவில்லை. உங்கள் கஷ்டங்களை எல்லாம் அறிந்து சொல்லி அடேயப்பா...! முக்காலமும் அறிந்த பெரிய முனிவர் என்று போற்றப்படும் நிலைகள் எனக்குத் தேவையில்லை.

அப்படிப்பட்ட போற்றுதலுக்குச் சென்றால் கடைசியில் தூற்றலுக்குத்தான் வருமே தவிர அதில் பலன் ஏதும் இல்லை. அதை நான் விரும்பவில்லை.

1.தீமைகள் அகற்றும் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
2.நீங்கள் அனைவரும் உயர்ந்த ஞானிகளாக வளர வேண்டும்.
3.அதைக் கண்டு நான் ஆனந்தப்பட வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன்.

சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது உற்றுக் கேட்கின்றோம். கேட்டதைப் பதிவும் செய்கின்றோம்.

ஆனாலும் கேட்பவர்களில் சிலர் “ஞானிகள் உணர்வுகளைச் சாமி அவ்வளவு நேரம் உபதேசித்தார். இங்கே இவர்களைப் பாருங்கள்…! எல்லாம் கேட்டுவிட்டு இப்படித் தவறு செய்கிறார்களே…!” என்று சாமி சொன்னதை விட்டு விடுகிறார்கள்.

சாமி சொன்னதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
1.மற்றவர்கள் குறைகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று
2.அந்த அடுத்தவரின் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம்.
3.இதைப் போன்ற நிலைகளை நாம் தவிர்த்தல் வேண்டும்.

குறைகளைக் காணும் போதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாங்கள் பெற வேண்டும்.
1.தெரிந்து தெளிந்து நடக்கும் ஆற்றலையும்
2.பிறருக்கு நன்மை செய்யும் உணர்வையும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை அறியாது நமக்குள் தீமை வந்து விட்டால்
1.நாம் தவறு செய்கிறோம் என்று (நமக்கே) தெரியும்
2.இருந்தாலும் நாம் எதற்குத் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்
3.அங்கிருந்து விலகிச் செல்கிறோமே செய்த தவறை தவிர நீக்குவதில்லை.

தனக்குத் தானே தவறின் தன்மை வந்தாலும் அதை நாம் உடனே நீக்கப் பழக வேண்டும். ஏனென்றால் நம்மை அறியாத இயக்கம் தான் அந்தக் குறைகள்.

நாம் நல்லதைச் செய்யும் போது தான் பிறர் குறைகளைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம்மை அறியாது அந்தக் குறைகளைச் செய்யும் உணர்வுகளைத் தூண்டுகிறது.

பாலிலே சுவை கொண்ட பாதாமையும் நறுமணம் கொண்ட பொருள்களைச் சேர்த்தாலும் சிறிது காரம் பட்டு விட்டால் அந்த சுவையின் தன்மையை மாற்றி காரத்தின் தன்மையே வருகிறது.

நல்ல சுவை கொண்ட உணவை உட்கொள்ளும் பொழுது உடலில் நல்ல அணுக்களை உருவாக்குகிறது. ஆனால் உணவிலே ஒரு துளி விஷம் சேர்ந்து விட்டால் உணவை நஞ்சாக மாற்றி நல்ல அணுக்களை அது அழித்து விடுகிறது.

இது போன்று தான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாமலே இயக்கக் கூடிய நிலைகள் தான் அது. அப்படி இயக்கினாலும் அது தவறென்று நமக்குள் உணர்த்தும்.

அந்த நேரத்திலாவது சுதாரித்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்களை அறியாது இயக்கும் தவறான இயக்கத்திலிருந்து நாங்கள் மீள வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என்றென்றும் எங்களுக்கு உறு துணையாக இருந்து
4.மெய் வழி காணும் நிலைகளை எங்களுக்குத் தர வேண்டும்.
5.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்ற
இதைப் போன்ற உணர்வை மட்டும் கொஞ்சம் எடுங்கள்.

உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும். குறைகளை அகற்றி நம் மனதைப் பரிசுத்தப்படுத்தும். அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

செல்வத்தைத் தேடும் பொழுதும் வேதனைப்படுகின்றோம்…! செல்வத்தை காத்திடவும் வேதனைப்படுகின்றோம்…!

நாம் எண்ணும் உணர்வுகள் உயிரிலே படும்போது நம் சிரசின் பாகம் ஈஸ்வரலோகம்.

எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்த நாளங்களில் அது சேரும் பொழுது இந்திரலோகம்.

அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கி விட்டால் அது பிரம்மலோகம்.

அணுவான பின் அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும். எந்த குணத்தின் அணுவாக உருவானதோ அணுவின் மலமே (தசை) உடலாகின்றது. அது சிவலோகம்

நல்ல குணத்தின் தன்மை கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நமது உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆனால் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் பயம் போன்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி அதை இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உருபெற்றுச் சிவலோகமாக மாற்றிவிடுகின்றது.

சிவத்துக்குள் (உடலில்) வேதனை என்ற உணர்வை அது அதிகமாக வளர்த்துக் கொண்டால் நரகலோகமாக மாற்றுகின்றது என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

இருந்தாலும் நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்குத்தான் வாழுகின்றோமே தவிர
1.செல்வம் தேடுகின்றோம்…
2.தேடிய செல்வத்தை வைத்து நிலைத்திக்கினறனரா மனிதர்கள்…!
3.தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா…?
4.செல்வம் குவித்திருந்தாலும் நிம்மதி வருகின்றதா…?

வேதனை என்ற உணர்வு கொண்டு தான் வாழுகின்றோம்.

செல்வம் தேட ஆசைப்படுகின்றோம். தேடிய செல்வத்தைக் காக்க வேதனையும் படுகின்றோம்.

முதல் செல்வம் இல்லாத பொழுது ரொம்பச் சிரமப்பட்டு இருப்போம். செல்வத்தை தேடி குவிக்கும் பொழுது சிரமத்தில் இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் “இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே…! நீ எனக்கு 100 ரூபாய் கொடு…” என்று நம்மிடம் கேட்பான்.

அதைக் கொடுக்கவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும் என்ற உணர்வினை மற்றவருக்குப் பறை சாற்றுவான். “பணம் கொடுக்கவில்லை…” என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறான் என்று வேதனையே வந்து விடுகின்றது.

அத்தகைய வேதனை வந்த பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக ஈஸ்வரலோகமான சிரசுக்குள் அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ அது ஈஸ்வரலோகத்தில் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகும்போது பிரம்மலோகமாகின்றது.

அணுவாக மாறிவிட்டால்
1.எந்த மனிதன் குறை கூறி அதனால் வேதனைப் பட்டானோ
2.அந்த வேதனையை நுகர்ந்து நுகர்ந்து வேதனைகள் உருவாக்கும் அணுக்கள் பெருகி
3.இந்த உடலையே வேதனைப்படும் உடலாக மாற்றிச்
4.சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து விடுகின்றது.

செல்வத்தைத் தேடினாலும்… “சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை…!”

1.செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை.
2.செல்வம் தேடினாலும் உடலை காக்கும் நிலை இல்லை…..?

அழியும் செல்வத்தையும் அழியக்கூடிய உடலையும் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தனை பாடும் படுகின்றோம். இது தான் உண்மை.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கையில்
மனமே… இனியாகிலும் மயங்காதே…!
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!

“நேற்றிருந்தார்…” இன்றிருப்பது நிஜமோ…!
நிலையில்லா இவ்வுலக வாழ்க்கை சதமாமோ…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் பொல மறைவதைப் பாராய்…!
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மனமே இனியாகிலும் மயங்காதே…! மயங்காதே…!

February 2, 2018

மற்றவர்களைக் காக்கும் டாக்டர்களுக்கு நோய் வரக் காரணம் என்ன...? நோய் வருவதன் மூல காரணம் என்ன?

இன்று ஆங்கில மருத்துவப்படி ஊசி மூலம் மருந்தினை (ஆற்றல் மிக்க) உடலுக்குள் செலுத்தி நோயான அணுவைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினாலும் அதைத் தழுவிய உணர்வுகள் அதே வலு கொண்ட விஷத் தன்மை கொண்ட உறுப்புகளில் வளரும்.

இந்த இன்ஜெக்சன் முறைப்படி அந்த உறுப்புகளில் இது செல்லும் போது அந்த நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் அந்த உறுப்பின் செயலாக்கங்கள் மாற்றிவிடும்.

மருந்தை உணவாக உட்கொள்ளும் நிலை இல்லையென்றாலும் நமக்குள் இரத்த நாளங்களிலே அதை மாற்றி அமைக்கும் முறையைத் திரவ நிலையை நீருடன் கலந்து அந்த மருந்தினைக் கொடுத்து இதைப் பாதிக்காத நிலையில் இணை சேர்த்துத்தான் கொடுக்கின்றார்கள்.

நம் உடலிலுள்ள நல்ல அணுக்களுடன் ஒத்த உணர்வை இணைத்து  இந்த அணுக்களைப் பாதுகாத்து விஷத் தன்மை கொண்ட அணுக்களை மடியச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

டாக்டர் மற்ற நிலைகளில் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு பிறருடைய நோய்களை நீக்கக் கற்றறிந்து அதற்கு இன்ன இன்ன உபாயங்கள் என்று மருந்தினைச் செலுத்தி நோய்களை நீக்கி மகிழச் செய்கின்றார்.

இந்த உடலின் உறுப்புக்கு இத்தனை முக்கியத்துவம் செய்தாலும் இம் மனித வாழ்க்கையில் மீண்டும் ஆசை என்ற நிலைகளில் பாசம் என்ற உணர்வுகளிலும் தன் உடலின் இச்சைக்குப் பொருளைத் தேடித் தான் செய்கின்றார்.

இந்த உடலைக் காக்கின்றார்.
1.இதைச் செய்தால் தனக்குப் பொருள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் செய்கின்றார்.
2.ஆகையினால் பிறருடைய நோய்களை அவர் நுகர்ந்தாலும் அந்த நோய் அவரை பாதிப்பதில்லை.

நோயை நீக்கும் உணர்வுடன் கற்றுணரும் போது நோயை அகற்றும் தன்மை கொண்டு கற்றுணர்ந்து மருந்தினை இணைத்து நோயை நீக்கும் உணர்வு தான் டாக்டருக்கு வருகிறது.

ஆனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்
1.பிறருடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டுணர்ந்த உணர்வுகள் தான்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுக்களாக விளைந்து
3.உடலில் நோயாக வருகிறது.

ஆனால் குறைகளை நீக்கும் உணர்வுகளைக் கற்றுணர்ந்த நினைவாற்றல் வரும் போது (எலும்பில் பதிவான உணர்வுகள்)
1.அதற்குண்டான உணர்ச்சியைத் தூண்டி
2.அதற்குண்டான மருந்தை எதைக் கலவையாகக் கொடுத்தனரோ
3.அதைக் கலக்கிச் சேர்த்துக் கொடுத்தால் சரியாகின்றது.. வியாதி நீங்கும்.

இதைப் போன்று வியாதியைப் போக்கக்கூடிய ஆற்றல் அனைத்து கற்றுணர்ந்த டாக்டர்களுக்கும் வருவதில்லை. கற்றுணர்ந்த காலத்தில் காலத்தையும் சூழ்நிலையையும் அறியாது செய்தால் நோயை மாற்ற முடியாது.


ஆனால் சிந்தித்த உணர்வின் தன்மை கொண்டு இந்தக் கலவையை இந்தக் காலத்தில் இன்ன பருவத்தில் இன்ன இன்ன இயக்கங்களில் இதைப் பக்குவப்படுத்திக் கொடுத்தால் அந்த நோய் குணமாகும் என்று செய்பவரே உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.

உயர்ந்த டாக்டராக இருந்து தன் வாழ்க்கையில் செல்வங்களைத் தேடினாலும் தனது குடும்ப வாழ்க்கையில்
1.தன் சொத்துகளின் விஷயத்தில் சிக்கலோ
2.சொந்த பந்தத்தில் என்னை மதிக்கவில்லை என்று சொன்னாலோ
3.அவருடைய சகோதரிக்கும் மனைவிக்கும் கொஞ்சம் வித்தியாசம் ஏற்பட்டாலோ
4.தாய் மேல் உள்ள பற்றினால் மனைவி அவர்களுக்குகந்த நிலையில் செயல்படாவிட்டாலோ
5.டாக்டரின் உணர்வுகள் அனைத்தும் மாறுகின்றது.

மனைவி வாழ்ந்து வளர்ந்த நிலைகள் கொண்டு தன் சார்புடையவர்கள் மீது பாசம் அதிகமாக வைத்துச் செயல்படும் போது மருமகளைக் காணும் தாய் தன் பையன் (டாக்டர்) மீதுள்ள பாசத்தால்
1.அவனைப் படிக்க வைத்தோம்...!
2.அதற்கு ஒத்த நிலைகளில் அவன் மனைவி வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி
3.பையனுக்கு அடிக்கடி நல் வழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

இதைக் கேட்கும் போது டாடருக்கோ தாய் சும்மா “அறிவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்... குறை கூறிக் கொண்டே இருக்கிறார்கள்...” என்ற உணர்வு வந்து விடுகிறது.

தொடர்ந்து இவ்வாறு காணும் நிலையில் பகைமை உணர்ச்சிகளாக இந்த உயிர் அதை அணுவாக மாற்றி விடுகிறது. டாக்டருக்குத் தன் மனைவியையோ தாயையோ பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகி
1.அவர் உடலில் கை கால் குடைச்சல் என்ற நிலை வருகிறது.
2.இவர்களை எண்ணும் போதெல்லாம் இந்த நிலை வருகிறது.

அங்கே தன் நோயாளிகளின் நிலைகளை அடிக்கடி டாக்டர் கேட்டறிகின்றார். மீட்கும் நிலை வருகின்றது. ஆனால் தன் குடும்பத்திற்குள் வந்த பகைமையினாலும் வெறுப்பினாலும் டாக்டர் உடலில் நோய் வருகின்றது.

தன் மனைவிக்கும் தாய்க்கும் பகைமை... தன் சகோதரிக்கும் மனைவிக்கும் பகைமை... என்று அந்தச் சந்தர்ப்பம் உருவாகின்றது. அதே சமயத்தில் மனைவி கர்ப்பமாகிவிட்டால் கர்ப்ப காலங்களில் தாய் கருவில் இருக்கும் குழந்தையின் நிலைகளையும் அது மாற்றுகின்றது,

ஏனென்றால் இந்தப் பகைமை எவ்வழியில் வந்ததோ அவ்வழியில் உணர்வின் தன்மை
1.தன் கணவன் (டாக்டர்) அன்பைச் செலுத்தினாலும்
2.வைத்திய முறைப்படி சமாதானப்படுத்தி அதன் நிலையை வளர்த்தாலும்
3.கணவன் மேல் அதிகப் பற்று இருக்கும்.
4.தன் கொழுந்தியாள் மீதோ அல்லது மாமியார் மீதோ தோன்றி விட்டால்
5.கருவுற்ற காலங்களில் இந்தப் பகைமையின் நினைவாற்றல் அதிகமாகும்.

ஏனென்றால் கருவுற்ற காலங்களில் தாய் தன் உடலில் வரும் உணர்வைக் கவர்ந்து தான் அந்தக் கருவின் சிசு வளரும். உடலில் சோர்வடையும் தன்மை வரும் போது தான் யார் யாரிடம் பகைமை கொண்டதோ இந்த உணர்வின் தன்மையைக் கர்ப்பமான தாய் நுகர நேர்கின்றது.

தன்னுடைய நிலைகளில் உயர்ந்த நிலை வரும் போது எனக்குத் தடை இருக்கிறது என்ற நிலையாகி அந்தத் தாய் வெறுப்பால் வேதனையை எடுக்கின்றது.

இதுவெல்லாம் மனித வாழ்க்கையில் நம்மையறியாமல் நடக்கும் சந்தர்ப்பங்கள்.

உதாரணமாக பதார்த்தத்தைச் சுவையாகச் செய்த பின் காரத்தையோ உப்பையோ விஷத்தையோ அதில் கலந்து விட்டால் என்ன ஆகும்?

விஷத்தின் தன்மை கலந்து விட்டால் உண்டோர் நிலையும் அழியும். உப்பின் தன்மை வந்தால் உணவை உட்கொள்ளும் நிலைகளை வெறுக்கும். காரத்தின் தன்மை என்றால் உணவை வெறுக்கும் தன்மை வரும்.

தன் தாய் மீது தன் மனைவி வெறுப்பாகி அதற்குதக்க வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது கணவனுக்கு மனம் சுளிக்கின்றது. அந்த உணர்வைச் செயல்படுத்தினால் கணவனுக்கு இது நோயாகின்றது.

வெறுப்பின் தன்மை மனைவிக்கு வரும் போது இங்கே கொதிக்கும் தன்மை அணுவாக அங்கே உருவாகின்றது.  

இப்படியெல்லாம் மனித வாழ்க்கையில் வளர்ந்த நிலை கொண்டு விஷம் கொண்ட உணர்வுகளை நாம் செயல்படுத்தும் போது மனிதனை உண்டாக்கிய நற் குணங்களின் அணுக்கள் மடிகின்றது.

இவ்வறு தாய் எண்ணிய உணர்வின் தன்மைகள் கருவிலே வளரும் சிசுவிற்கு பகைமை உணர்வாக இங்கே வளரும். நோயை உருவாக்கும் அணுக்களாக்க் குழந்தையின் உடலில் உருவாகிவிடுகின்றது.

டாக்டரும் அவர் மனைவியும் இவர்கள் அழகாக இருப்பார்கள். ஆனால்  குழந்தையின் நிலையோ மாறுபட்ட உணர்வுகள் வரும் போது நிறங்கள் மாறும்; குணங்கள் மாறும்; செயல்கள் மாறும்....!

தாய் எடுத்துக் கொண்ட பகைமையான உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விட்டால் ஊழ் வினை. தாய் கருவிலே அந்த அணுவின் தன்மை உருவாகும் போது தாயும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் தாய் உற்று நோக்கிய உணர்வுகளும் இது கலவையாகி குழந்தை கருவிலே இணைந்து விட்டால் பூர்வ புண்ணியம்.

சிசு பிறந்த பின் தாய் எப்படி சங்கடப்பட்டதோ
1.தாயின் மேல் வெறுப்பு வரும்
2.தந்தையின் மேல் வெறுப்பு வரும்.
3.பாட்டியின் மேல் வெறுப்பு வரும்
4.குடும்ப சார்புடைய நிலை வரும் போது குழந்தை பற்றற்றதாக மாறும்.
5.ஆயிரம் புத்தி சொன்னாலும் அவன் நிலைக்கே அது வரும்.

தாய் எடுத்த ஊழ் வினைப்படி அந்தக் குழந்தை செய்யும் நிலைகளைப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே...” என்று நினைத்தால் அந்த எண்ணத்தின் உணர்வு வித்தாகிறது.

ஒரு செடியில் விளைந்த வித்து எதை நுகர்ந்து செடியாகிறதோ அதைப் போல
1.அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து
2.நல்ல உணர்வுகளை அழிக்கும் நிலைகள் உருவாகிறது,

அதாவது வினைக்கு நாயகனாக குறையான உணர்வுகளை அந்தத்  தாய் நுகர்ந்ததை இந்தக் குழந்தையின் உடலில் குறையச் செய்து உயர்ந்த நிலைகளைப் பெறவிடாதபடி தடைப்படுத்திவிடுகின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை இவ்வாறெல்லாம் இயக்கிவிடுகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய நிலைகளை நீங்கள் எல்லோரும் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாத செயல்களிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். பதிவாக்கிய ஞானிகளின் உணர்வை எடுத்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

ஞானிகளின் உணர்வுகள் வளர வளர உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளியின் சரீரம் பெறும்.