ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2014

நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலை

அன்றைய அரசர்கள் சாகாக்கலை என்ற நிலையில் பல மந்திரங்களைச் செய்துள்ளார்கள். நாடி சாஸ்திரத்தை எழுதினார்கள். அந்த நாடியை வாசிக்கும் பொழுது,
அவன் எதைச் சொன்னானோ
வாசிப்பவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அவன் என்னென்ன மந்திரம் சொன்னானோ, அதையெல்லாம் இவன் வாசிப்பான். ஆனால், வாசிப்பவனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த எழுத்தே பண்டைய கால எழுத்தாக இருக்கும்.

அதை வாசித்து வந்தவருடைய நிலைகளையெல்லாம் இவன் சொல்வான். உனக்கு இந்த நேரம் வருகின்றது, நீ இதைப் பார், அதைப் பார் என்று சொல்வார்கள்.

நாடிகள் அது எத்தனையோ வகையான நாடிகள் இருக்கின்றது. ஆக, அந்த அரசன் இந்த மந்திரத்தைச் சொன்னவன், உடலுக்குள் வருகின்றான். அந்த அரசன் எப்படியெல்லாம் சுக போகங்களை அனுபவித்தானோ, அதே மாதிரி இந்த நாடி வாசிப்பவர்களுக்குள்ளும் அவனுடைய இச்சையை வளர்க்கும்.

நாடி வாசிப்பவர்களைப் பார்த்தால் மறைமுகமாகப் பல தவறுகளைச் செய்வார்கள். ஆக, இவன் எடுத்துக் கொண்ட ஆசையெல்லாம் பேயாசையாகத்தான் இருக்கும்.

அதிகமாக ஆசையை வளர்க்கக்கூடாது என்பதற்காக நாடியிலே சொல்லி இருக்கும். இத்தனாவது நிலைகள் வரும் பொழுது, இன்ன நிலைகளில் இவ்வாறு ஒருவர் வருவார் அவரிடத்தில் சொல்லிக் கொடுத்துவிடு என்று இருக்கும்.

ஆனால், இந்த நாடியை யாருக்குக் கொடுப்பது என்று சொந்தச் சொத்தாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் மந்திரங்கள் வரும் என்று
அந்த நாடி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வழியில்தான்
பில்லி சூனியம் என்ற நிலைகளில்
சில ஆவியுடன் தொடர்பு கொண்டு
சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நாடி சாஸ்திரத்தில், போன ஜென்மத்தில் இப்படி இருந்தான், இப்பொழுது இப்படி வந்தான் என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால். இதையெல்லாம் நாம் நிவர்த்தி செய்ய முடியாது.

அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நாம் பெற்றோம் என்றால்தான் இந்த நிலையிலிருந்து மீளமுடியும்.

ஏனென்றால், அரசன் வாழ்ந்த நிலைகள் நமக்குள் வந்தால் அது ஆட்சிபுரியும். இதே போலத்தான், அரசர்கள் பல மந்திர தந்திரங்கள் செய்தவர்கள்.

ஒரு உடலுக்குள் அந்த ஆன்மா வந்தவுடன்
பெரிய மந்திரவாதி என்றும்,
பெரிய யோகி என்றும்,
பெரிய சித்தர் என்றும் இப்படியெல்லாம் சிலர் சொல்வார்கள்.

நாடி வாசிப்போருடைய நிலை எத்தனையோ நிலைகள். ஆனால், தவறான நிலைகளைச் செய்வார்கள். கடைசி முடிவு என்ன ஆகின்றது? சாப அலை பிரகாரம் இந்த நாடியும் கடைசியில் பேசாது. இவனுக்கு நோய் என்ற நிலையே வரும்.

அதே போன்று இந்த நாடி சாஸ்திரம் படிப்போர் நிலைகளைப் பார்த்தால் தற்கொலை பண்ணுபவர்களும் உண்டு. அவன் குடும்பம் நோய்வாய்ப்பட்டு முடமாக மாறுவோரும் உண்டு.

ஆக, ஆசையின் உணர்வுகள் கொண்டு நமக்குள் எடுக்கப்படும் பொழுது, எதிர்மறையான உணர்வுகள் வந்து அங்கே மடிவோரும் உண்டு. இதுதான் அவர்களின் முடிவு.

June 2, 2014

பொருள்களை வரவழைக்கும் சாமியார்களின் உண்மை நிலை - ஞானகுரு

ஒரு சமயம் நான் (ஞானகுரு) சேலத்திற்குப் போயிருக்கும் பொழுது காயத்ரி சாமிகள் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நண்பராக நம் தியானவழி அன்பர் ஒருவர் இருந்தார்.

அப்பொழுது நானும் அங்கிருந்தேன். அங்கே அவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.

காயத்ரி சாமிகள் வந்தவுடனே அவர் சில பேரைக் கூப்பிட்டு கலசம் வைக்கின்றார். எல்லோருடைய கையிலும் குங்குமத்தைக் கொடுத்து அவர் சொல்வதைச் சொல்ல வைக்கின்றார்.

அதைக் கொடுத்து அவர் சொல்வதைச் சொல்லச் சொன்னவுடனே, எலுமிச்சம்பழம் மேலிருந்து குதித்து மறுபடியும் கீழே விழும்.

அப்புறம் என்ன செய்வார்?

ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கும். இவர் அலசுவார். அதிலிருந்து சங்கு வரும்.

“ஆகா!, வந்துவிட்டது வலம்புரிச்சங்கு” என்ற நிலையில் அதை எடுத்துக் கொள்வார்.

ஏற்கனவே, அந்தச் சங்குகளை ஒர் வீட்டில் எடுத்து வைத்திருப்பார். அதுதான் அங்கே வருகின்றது. (மற்றவர்களுக்குத் தெரியாது)

அப்புறம் அந்தச் சங்கை எடுத்துக் கொண்டு, அதை இரண்டாயிரம் ரூபாய், மூவாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் என்று அதை விற்றுவிடுவார்

அந்த காயத்ரி சாமிகள். இப்படி அவர் ஊரையெல்லாம் சுற்றிவருவார். அவரை அங்கே சந்திக்கும்படி நேர்ந்தது.

அப்பொழுது என்ன சொல்லிவிட்டார்? சாமி கையில் குங்குமம் கொடுக்காதீர்கள். அவர் சும்மா உட்கார்ந்து பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கட்டும் என்று “என்னை”ச் சொல்கிறார்.

அப்புறம் அவர் வழக்கம் போல் செய்தவுடன் தண்ணீரிலிருந்து அது வருகின்றது. அப்பொழுது ஒருவர் ஆப்பிள் பழம் அவரிடம் கொடுக்கிறார்

கையில் கொடுத்தவுடன் இவர் திருப்பிக் கொடுக்கிறார்.

பழத்தை அறுத்துப் பார்த்தால் அதில் கிருஷ்ணன் பொம்மை  இருக்கின்றது. அடுத்த பழம் கொடுத்தவுடன், அறுத்துப் பார்த்தால் அதில் சிவன் போம்மை இருக்கும்.

இப்படியெல்லாம் பார்த்தவுடன், “ஆகா! பெரிய மகான்” என்கிறார்கள்.

இதை வாங்கிக் கொண்டவர்கள் எல்லொரும் அதை வீட்டில் வைத்து பூஜை செய்துவிடுங்கள் என்று அந்த காயத்ரி சாமிகள் சொல்கிறார்.

அப்பொழுது அங்கிருந்த ஒரு கணக்கப்பிள்ளை இதே மாதிரி ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து அந்த பொம்மையானவுடனே அதை வீட்டில் வைத்து பூஜை செய்து வந்திருக்கின்றார்.

அப்பொழுது என்ன ஆகிவிட்டது?

அவர் வீட்டில் கல்யாணம் ஆகி ஆறு மாதமோ, மூன்று மாதமோ கர்ப்பமாக இருந்த பெண் இதை வீட்டில் வைத்துக் கும்பிட்டவுடன் கர்ப்பம் கலைந்துவிட்டது.

ஏனென்றால், அந்த விஷத்தின் தன்மை கருவைக் கலைத்து இந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்? அதை ஆவியின் தன்மை அடையச் செய்யும்.

இதே மாதிரி இன்னொரு இடத்தில் கல்யாணமாகி, மூன்று மாதம் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தது. காயத்ரி சாமிகள் கொடுத்த இந்த பொம்மை இருக்கின்ற வீட்டிற்குள் போகமாட்டேன் என்கிறது.

ஆனால், அந்தப் பெண் யார் என்றால் நம் தியானவழி அன்பர். அந்த பொம்மையை எடுத்தால்தான் நான் வீட்டுக்குள் போவேன் என்று சொல்கிறது. அதை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பெண் என்ன செய்தது. நேராக நம் தியானவழி அன்பர் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தைச் சொல்கின்றது. வீட்டுக்குள் சென்றால் என் கரு கலைந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என்கிறது.

பிறகு எம்மிடம் தொடர்பு கொண்டவுடன், நான் சரி அங்கே போக வேண்டாம், இங்கேயே இரு அம்மா என்றேன்.

பின் அந்தப் பெண்ணின் மாப்பிள்ளை, அவர்கள் வீட்டார் எல்லாம் எம்மைத் தேடிவந்தார்கள். கல்யாணம் ஆகி இந்தப் பெண் எங்கள் வீட்டிற்குள் வர மறுக்கின்றது என்றார்கள். இந்தப் பெண்ணுக்கு பேயோ, பிசாசோ பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நீ தான் பேயைக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறாய். அது அங்கே இருந்தால், உன் மனைவியின் கரு கலைந்துவிடும். அந்த பொம்மையை அப்புறப்படுத்து. அப்புறம் உன் மனைவி உன் வீட்டுக்குள் வரும் என்றேன்.

இதையெல்லாம் அங்கே இருந்த Ex. MLA  பார்த்துக் கொண்டிருந்தார். பெரிய மகான் பெரிய மகான் என்று சொல்லி ஆப்பிளைக் கொடுக்கின்றார். பார்த்தால் அதற்குள் ஆவி இத்தனை வேலை செய்கிறது என்றார். இது நடந்த நிகழ்ச்சி.

அதே மாதிரி ஒரு ஐயப்பன் பாடல்களை பிரபலமாகப் பாடுபவர் ஒருவர் என்ன செய்தார்? இந்த காயத்ரி சாமிகள் புகழ் பாடுகிறார். நிறைய கவிஞர்களும் அங்கே கூடி அவரோடு சேர்ந்து அற்புதங்களைப் பாடுகின்றார்கள். அந்த காயத்ரி சாமியும் அங்கே இருக்கின்றார்.

நானும் அங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என்ன நடந்தது? அவர் அங்கே பாட பாட, இரண்டொருவருக்கு அருள் மாதிரி வந்து ஆட ஆரம்பித்துவிட்டார்கள். “தையா., தக்கா” என்று ஒரே ஆட்டமாக ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பாடகர் என்ன செய்தார்? அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காயத்ரி சாமியும் இதையெல்லாம் பார்த்து முழித்துக் கொண்டிருக்கின்றார்.

நான் மண்ணை அள்ளி, ஆடிக் கொண்டிருந்தவர்கள் மேல் போட்டேன். “டொப்” என்று கீழே விழுந்தார்கள். அவர் அப்படியே பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருக்கின்றார்.

இவர் வேறு என்ன செய்தார்? ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார். இவர் கொடுத்ததை வைத்து பூஜித்தபின் பார்த்தால் பெண் குழந்தை பிறக்கின்றது. ஆக, இவர் கொடுத்த பொருள்களை வாங்கி வைத்திருந்த வீடுகளிலெல்லாம் தொல்லைகள் அவர்களை அறியாமலே வருகின்றது.

அற்புதம் என்று எண்ணினாலும்,
அந்த ஆவியின் உணர்வுகள் அங்கே என்ன செய்கிறது?
என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக நான் அனுபவபூர்வமாகக் கண்ட நடந்த நிகழ்ச்சிகள் தான் இது..

அப்புறம் இவர் என்ன செய்தார். சாமி உங்களை வந்து பார்க்கின்றேன் என்றார். அவர் பிறகு எம்மை வந்து சந்திக்கவே இல்லை. ஒரு சமயம் நான் சேலம் ரயில்வே ஸ்டேசனில் சென்னைக்குப் போவதற்காக நின்று கொண்டிருக்கும் பொழுது, எம்மைப் பார்த்துவிட்டார்.

பார்த்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடினார். ஓடி ஒளிந்து கொண்டார். இதெல்லாம் நடந்த நிகழ்ச்சி.

June 1, 2014

சீதாராமன் விஷ்ணு தனுசை எடுத்து பரசுராமனைத் தோற்கடித்தான், ஏன்?

1. உடலைக் காக்கும் உணர்வே (உடல் பெறும் நிலை) சிவ தனுசு
பரசுராமனுக்கும், சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது.

ஏனென்றால், “சிவ தனுசு” எனும் பொழுது,  உடல் என்ற நிலைகளில் உருவான உணர்வின் தன்மை கொண்டு, இந்த உடலில், வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும்,
“எந்தெந்த குணங்களை” நமக்குள் பெற்றோமோ,
அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக,  நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்தக்  கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த “சிவ தனுசு” உதவும்.

நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால், “இரு உன்னை நான் பார்க்கிறேன்” எனும் எண்ணம்தான், நமக்கு வரும். இது, பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற நம் உடலில் வளர்த்துக் கொண்ட “சிவ தனுசு”.

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ, சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால், நம்மில் உருவான தனுசை எடுத்துதான் பயன்படுத்துகின்றோம். நாம், தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவ தனுசைத்தான் பயன்படுத்துகின்றோம்.

உதாரணமாக, நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ, அதற்கொப்பதான், அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது.

ஆனால், அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை.
என் பிள்ளை என்ற நிலையில்,
இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ,
அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான்,
அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில், நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் “விஷ்ணு” வரம் கொடுத்துவிடுகின்றது. பின், நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, உயிர், நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.

அதே சமயத்தில், உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது, இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான்,  இந்திரலோகம் என்று காரணப்பெயர் வைத்தார்கள், ஞானிகள்.
2. நம் உடலில் நாம் நுகரும் உணர்வுகளுக்குள் எப்படி போர் நடக்கின்றது?
இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுதுதான் அணுக்கரு வெடிக்கின்றது.

அப்படி வெடித்தபின், அதன் உணர்வின் தன்மை எதுவோ, அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.

ஆனால்,  இப்படி உருவான அணு, இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது. அப்பொழுது, உடலில் உருவான இவ்வணு தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால், அந்த வித்து, எந்த இனச் செடியின் வித்தோ,  அதே இனச் செடியைத்தான் உருவாக்குகின்றது. அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகையினால், ஒரு உணர்வின் தன்மையினை உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது, சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால், அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது,  இதற்கும், நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும், போர் என்ற நிலை நடைபெறுகின்றது.

அது சமயம், நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால், அதனின் உணர்வின் கூட்டமைப்பு தன்னில் ஒரு படையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது, கோபம் அதிகமாகி, கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு “இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற கோப உணர்வு கொண்டு, பிறிதொருவரைத் தாக்கிக் கொல்கின்றார்.  

கோபம் உள்ளவர், சிவ தனுசை தனக்குள் எடுத்துக் கொண்டு கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

இதே போன்று, வேதனை என்ற நிலை வரும் பொழுது, வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.  

“பரசுராம்”, நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.

உதாரணமாக, ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு. இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது, மனிதர், தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ, அது சிவ தனுசு. அதாவது, உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான், சிவ தனுசு.
3. ஒளி என்ற உணர்வை உருவாக்குதே விஷ்ணு தனுசு, துருவ நட்சத்திரம்
ஆனால், “விஷ்ணு தனுசு” எனும் பொழுது, தீமைகளை அகற்றி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது.  நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள், நமக்குள் "விஷ்ணு தனுசு" ஆகின்றது.

அதாவது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்ற பொழுதுதான்,
விஷ்ணு தனுசிற்கும், சிவ தனுசிற்கும்
போர் முறை வருகின்றது. 
ஏனென்றால், சீதா என்றால் சுவை கொண்டது, மகிழ்ச்சி கொண்டது, மகிழ்ந்து வாழக்கூடியது, மகிழ்வான செயல்களைச் செய்வது. மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது, மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.

உயிர் என்ற ஒளியின் தன்மையை
என்றும் ஒளியாக வைத்து,
இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் "விஷ்ணு தனுசு".

மனித வாழ்க்கையில் கணவனும், மனைவியும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும், ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி, அதுதான் துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தை, சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து, புவிக்கு வருகின்றது. ஆகவே, இதனை, “ரிஷியின் மகன் நாரதன்” என்றும் “நாராயணனின் அபிமான புத்திரன்” என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை நாம் நுகர்ந்தோம் என்றால்,  “நாரதன் என்னும் உணர்வுகள்”,
உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று, 
பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ
அதைச் சொல்லி, பகைமையை தணிக்கச் செய்கின்றது.
உண்மையை விளங்கச் செய்கின்றது,
இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே, நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத்  திரும்ப நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து, பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றதென்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி, நம்மை வழிப்படுத்தும்.

ஆகவேதான், ரிஷியின் மகன் நாரதன் என்றும், நாராயணனின் அபிமானப்  புத்திரன் என்றும், நாரதர் நன்மைகள்தான் செய்வார்  என்றும், காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் “விஷ்ணு தனுசு”, உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. 

ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால், “சீதா” மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும்.

ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன்  தீமைகளை நீக்கி,
சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி,
உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார் என்பதுதான் பொருள்.

ஆகவே, அரும்பெரும் ஞானிகள் காண்பித்து உணர்த்திய உண்மைகளை தம்முள் உணர்ந்து, அதன்வழி இயங்கி, ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும் “விஷ்ணு தனுசினை” ஒவ்வொருவரும் பயன்படுத்துங்கள்.

அதைப் பயன்படுத்தி, தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி, மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும், உடல் நலம், உடல் பலம், மன நலம், மன பலம், மன வளம், செல்வம், செல்வாக்கு பெற்று, பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.