வெறுப்பு வேதனை கோபம் என்ற நிலையில் பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் இன்று அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர… குறைகளை நீக்கும் உணர்வுகளை நாம் வளர்க்கவில்லை.
சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்லதை நுகரும் வராகனைப் போன்று (பன்றி)
1.நாம் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.அவர்களை அறியாது சேர்ந்த அந்தக் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்ல உணர்வை நுகரப் பழக வேண்டும்.
தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கிடும் சக்தியாக அங்கே தோன்றுகின்றது.
இதை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்குவதற்குத் தான் சாக்கடை அருகே அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார் குருநாதர்.
உனக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும்… தீமைகள் உனக்குள் புகாத நிலையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சாக்கடை அருகே அமரச் செய்தேன்.
அப்போது நீ எதை நுகர்கின்றாய்…? அந்தச் சாக்கடையை எண்ணி ஐய்யய்யே…ஐய்யய்யே.. என்று நினைக்கும் போதெல்லாம் உனக்குள் அந்தச் சாக்கடை நாற்றமே வருகின்றது.
1.ஆனால் இந்த நாற்றத்தை நீக்க வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது
2.அதை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வளர்கின்றது.
இதைப் போன்று தான் நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே குறைகள் எதுவாக இருந்தாலும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று உனக்குள் ஏற்றுக் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்
2.அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று நீ எண்ணுவாய் என்றால்
4.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் “மெய்ப்பொருள் காணும் நிலையாக உன்னிலே வரும்…” என்று உணர்த்தினார் குருநாதர்.
ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காண… அது நமக்குள் அறிவிக்கச் செய்கின்றது
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதற்கு அடுத்து அதைப் பயன்படுத்தக் கூடாது..
ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையைத் திரும்பத் திரும்ப எண்ணினால் என்ன ஆகும்…?
இப்படிச் செய்தான்... அப்படிச் சொன்னான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…! என்று எண்ணும் பொழுது
1.அந்த அறிவிக்கும் நிலை நமக்குள் எதைத் தவறு என்று காட்டியதோ
2.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து
3.நம்மைத் தவறு செய்வோராகவே வளர்த்து விடும்.
அதற்குப் பதிலாக “தவறை நீக்கும் நிலைகளைக் கொண்டு வந்தோம்…” என்றால் அது தெளிவாக இருக்கும்.
ஏனென்றால் குறையே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.
ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் பொழுது… அதுவே இயக்கச் சக்தியாக இயக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.குறைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று
3.அந்த அருள் ஞானிகள் உணர்வை வலுவாக ஏற்று நாம் எண்ணுவுமேயானால்
4.”குறைகளை அகற்றிடும் சக்தியாக நாம் மாறுகின்றோம்...”
ஆகவே நாம் யாருடன் பழகியிருந்தாலும் அவரின் உணர்வு நமக்குள் வந்தாலும் அவர் அறியாமல் வந்த தீமைகள் நீங்கி… பொருளறிந்து செயல்படும் ஆற்றல் அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது இருளை நீக்கிடும் நிலையாக… “ரிமோட் கண்ட்ரோல்…” போல் வேலை செய்யும்.
டி.வி. மற்றும் இது போல் உள்ள சாதனங்களில் மூடி மறைத்திருப்பதை “நாம் அந்த சுவிட்சைப் போடும்போது…” தெளிவாகத் தெரிகின்றது. அந்த படங்களைத் திறந்து கவர்ந்திடும் நிலையாக ஆக்குகின்றது.
இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் உணர்வினை நாம் எண்ணும் பொழுது
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் எண்ணத்தை நமக்குள் கொண்டு வரும் பொழுது
3.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகள் “ரிமோட் கண்ட்ரோல்” ஆக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்
4.நம் சொல்லைக் கேட்பவருடைய நிலைகளும் அங்கே இயக்கும்
5.குறைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
6.நல்ல குணங்களை நமக்குள் தெளிந்து கொள்ளும் நிலையாகவும் வருகிறது.
இதைத்தான் “மகா சிவன் இராத்திரி - நீ விழித்திரு…!” என்று சொல்வது.