சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்...?” என்பார்கள்.
இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
சாமியிடம் சென்றேன்... ஏதோ சொன்னார்... பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்...” என்று யாரும் கேட்பதில்லை.
குடும்பத்தில் உள்ள குறைகளையும்... “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்...!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.
1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்... அதை யாரும் கேட்பதில்லை.
நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா...? இல்லை...! கோர்ட்… கேஸ் என்று அலைந்து... மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.
பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்...! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது... என்று தான் சொல்ல வேண்டி வரும்.
யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்... அமைதி கிடைக்கும்... சாந்தம் கிடைக்கும்.
அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.
இப்படி...
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே...! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா...? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்...?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.
ஆக... எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்
இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு... குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.
அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்
ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.
உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்... அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்... அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்...
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.
அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்...
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.
ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே...” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.
அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு... அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.
இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.